வெள்ளி, 2 அக்டோபர், 2020

தேவேந்திரகுல வேளாளர் - பட்டியல் வெளியேற்றப் போராளிகளே அக்டோபர் 6ம் தேதிக்கு, வீறு கொண்டு எழுந்து பணியாற்றுங்கள்! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


தேவேந்திரகுல வேளாளர் -  பட்டியல் வெளியேற்றப் போராளிகளே அக்டோபர் 6ம் தேதிக்கு, வீறு கொண்டு எழுந்து பணியாற்றுங்கள்! 
- டாக்டர் K. கிருஷ்ணசாமி

நம்முடைய போராட்டங்களின் அடுத்த மைல்கல் - அக்டோபர் 6-ம் தேதி உண்ணாவிரதம் மிக அருகாமையில் இருக்கிறது. இன்று செப்டம்பர் 29. இன்னும் 6 தினங்களில் அக்டோபர் 6-ஆம் தேதி வந்துவிடும். மாநில அளவில் ஒரு இடம், மாவட்டத்திற்கு ஒரு இடம், வட்டத்திற்கு ஒரு இடம் என்பதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு கிராமம்/நகரம்/பேரூராட்சி என தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வாழக்கூடிய அனைத்து இடங்களிலும் உண்ணாவிரதம் நடத்தப்போகிறோம். ஒன்றல்ல, பத்தல்ல, நூறல்ல, ஆயிரமல்ல, 10,000 இடங்களில். தமிழக அளவில், இந்திய அளவில் வேறு எந்த அரசியல் கட்சியும் இவ்வளவு இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்கு ஒரு துணிச்சலான முடிவு எடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால், புதிய தமிழகம் கட்சி நடத்த இருக்கிறது. 10,000 என்பது 10,100 இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, 9999 ஆக இருக்கக்கூடாது. 

பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்திருக்கக்கூடிய புதிய தமிழகம் கட்சிக்கு இது மிகப்பெரிய சவால் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக பத்தாயிரம் இடங்களை விடக் கூடுதலான இடங்களில் உண்ணாவிரதத்தை நடத்திக் காட்ட முடியும். எல்லா மாவட்டங்களிலும் புதிய தமிழகம் கட்சியினர் சுறுசுறுப்பாகி விட்டதை அறிய முடிகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் சுவரொட்டிகளும், துண்டுப் பிரசுரங்களும் களத்திற்கு வந்து சேர்ந்து, கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதை நான் அறிகிறேன். இன்னும் இரண்டு, மூன்று மாவட்டங்களில் மட்டும் சுவரொட்டிகளும், துண்டுப் பிரசுரங்களும் களத்திற்கு வந்து சேரவில்லை. அதிகபட்சம் நாளை (புதன்கிழமை) மாலைக்குள் சுவரொட்டிகளும், துண்டுப்பிரசுரங்களும் எல்லா கிராமங்களுக்கும் சென்றாக வேண்டும். வியாழக்கிழமை கண்டிப்பாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தேவேந்திரகுல வேளாளர் – பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை வலியுறுத்தி சுவரொட்டிகளும், சுவர் விளம்பரங்களும் பளிச்சென மின்னிட வேண்டும். அதேபோல அனைத்து வீடுகளுக்கும் ஒரு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட வேண்டும். இதைவிட மக்களை நேரடியாக அணுகுவதற்கான வேறு வாய்ப்புகள் எதுவாக இருக்க முடியும். எனவே, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொரு தேவேந்திரகுல வேளாளர் உள்ளங்களிலும் இடம் பிடிக்க வேண்டும்.

மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்றத் தொகுதி அல்லது ஒன்றிய பொறுப்பாளர்கள் களப்பணியாற்றுகின்ற போது இரண்டு, மூன்று கிராமங்களை ஒருங்கிணைத்து காணொளி வாயிலாக மக்களை சந்திக்கக் கூடிய வாய்ப்பைப் பெறுகிறேன். 10-15 வருடங்களுக்கு முன்பு நான் சென்று வந்த கிராம மக்களை காணொளி வாயிலாகக் காணுகின்ற போது அவர்களுடைய முகத்தில் தென்படக்கூடிய மகிழ்ச்சி என்னை திக்குமுக்காடச் செய்கிறது. நான் எப்படியெல்லாம் அவர்களின் கிராமங்களுக்குச் சென்று வந்தேன் என்பதை என்னிடம் நினைவுபடுத்தி, அவர்கள் நம்முடைய புதிய தமிழகம் கட்சியின் மீது காட்டக்கூடிய அன்பையும், பரிவையும் எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். நமது புதிய தமிழகம் கட்சியின் மீது இவ்வளவு அன்பும், பாசமும் கொண்டிருக்கும் இந்த அன்பான மக்களை நம்முடைய நிர்வாகிகள் அடிக்கடி ஏன் சந்திப்பது இல்லை? என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த மக்களுடைய எதிர்பார்ப்பையும், எழுச்சியையும் கண்டாவது இனிமேல் நமது புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் நம்முடைய மக்களை அவர்களுடைய இருப்பிடத்திற்கேச் சென்று சந்திக்க வேண்டுமென அன்பு கலந்த கட்டளையாக கேட்டுக்கொள்கிறேன். 

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறக்கூடிய உண்ணாவிரதம் நம்முடைய சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய விடியலைத் தரும். தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றக் கதவுகள் திறக்கப்படும். நம் மக்களுடைய வரலாற்றில் புதிய அத்தியாயம் நிச்சயமாகத் துவங்கும். ஓரறிவு உயிரினங்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரையிலும் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்தியே தன்னை புதுப்பித்துக் கொள்கிறார்கள். போராட்டம் இல்லையெனில் புதிய வாழ்க்கையே கிடையாது. அக்டோபர்-6 தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மத்தியில் புதிய சரித்திரத்தைப் படைக்கப் போகின்ற பொன்னான நாள்; மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கையும், அவர்களுடைய உறக்கத்தையும் கலைக்கக்கூடிய நாள். தேவேந்திரகுல வேளாளர் மக்களின் ஒற்றுமை, உறுதியான நிலைப்பாடுகள் நமக்காக மட்டுமல்ல, நம்முடைய வருங்கால சந்ததியினருக்கும் நன்மை பயக்கக்கூடியது.

தமிழகம், இந்திய தேசத்தின் உண்மையான சுதந்திர கீதம் நம்முடைய பட்டியல் வெளியேற்றத்தில் தான் துவங்க இருக்கிறது. அக்டோபர் 6 உண்ணாவிரதம் என்பது அடுத்த 6 தினங்களுக்கு புதிய தமிழகம் கட்சியினர் எப்படி பணியாற்றுகிறார்கள்? என்பதைப் பொறுத்தே அமையும். புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் நான் தினமும் பேசிய பிறகுதான், களத்திற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணக்கூடாது. காலை 5 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு வரையிலும் களத்திற்குள் மக்களோடு மக்களாகத்தான் இருக்க வேண்டும்; மக்களை ஊருக்குள் சென்றும், அவர்கள் பணி செய்யக்கூடிய இடங்களுக்குச் சென்றும் பார்க்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான விஷயம். எனவே மக்களை எங்கெல்லாம் சந்திக்க முடியுமோ அங்கெல்லாம் சென்று சந்திக்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டுச் செயல்பட வேண்டும். கட்சி பொறுப்பில் இருந்தால் தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது அல்ல, எவ்வித பொறுப்பும் இல்லாமல் கூட யார் உண்ணாவிரதப் பணியை தன் தோள்மேல் போட்டுக்கொண்டு மக்கள் பணியாற்றுகிறார்களோ? அவர்கள் தான் உண்மையான மக்கள் சேவகர்கள் ஆவர். 

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும்   நம்முடைய போராட்டம் நிச்சயமாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும். நமது மக்கள் நிஜத்திற்கும், நிழலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். புதிய தமிழகம் கட்சி எது செய்தாலும் அது நிஜமாகவும், நிதர்சனமாகவும் தான் இருக்கும். நமது சமுதாயத்தில் பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல்வேறு துறைகளில் பெயர் பெற்று விளங்குகிற அனைவரின் ஒருமித்தக் குரலும் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் தானே.
           
என் அன்பான தேவேந்திரகுல வேளாளர் அறிவுஜீவிகளே..!  வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறக்கூடிய இந்த மகத்தான உண்ணாவிரதப் போராட்டம் நீங்கள் பிறந்த இடம், பணி புரியும் இடம், வளர்ந்த இடங்களில் கண்டிப்பாக நடைபெறும். இதில் ஏதாவது ஒரு விதத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்;  பங்கு பெறுங்கள். போராட்டம் வெற்றி பெறுவதற்கு உற்றத் துணையாக உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்நாளில் இதுபோன்று ஒரு கோரிக்கையை வலியுறுத்தி ஒரே நேரத்தில் 10,000 இடங்களில் உண்ணாவிரதம் என்பதைக் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். இது வரலாற்றில் எப்போதாவது நடைபெறக்கூடிய அரிய நிகழ்வு.! இதில் பங்கு பெறாமல் இருந்துவிடாதீர்கள்.

 உங்களுடைய கைப்பேசிகள், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைதளங்கள் அக்டோபர் 6 உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கான பிரச்சார பீரங்கிகளாக இருக்கட்டும். இது நமது இன விடுதலைக்கான போராட்டம், நாம் தான்  போராட வேண்டும். மறுக்கப்பட்ட வரலாறுகளை திருத்தி எழுதப் போகிறோம். தாழ்த்தப்பட்டோர், பட்டியலினத்தவர் போன்ற முகவரியற்ற பெயர்களை விட்டொழிக்கப் போகிறோம். இம்மண்ணை ஆண்ட, இம்மண்ணுக்கும் சொந்தக்கார மருதநில மக்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கப் போகிறோம். தேவேந்திரகுல வேளாளர்களாக இம்மண்ணில் மீண்டும் கோலோச்சப் போகிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக