வியாழன், 29 அக்டோபர், 2020

எப்பொழுதும் போல நையாண்டி பேசி, நகைச்சுவை அரசியல் நடத்துவதை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும். - கே.எஸ்.அழகிரி


தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்து பொருந்தாத வாதங்களின் அடிப்படையில் கருத்துக்களை கூறுவதன்மூலம் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து வருகிறார். அதை உறுதி செய்கிற வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வாகன தயாரிப்புத்தொழில் முடங்கியிருப்பதை போல செயலற்று இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் பல கட்சிகள்  அந்த கூட்டணியில் இருந்து  விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேர இருப்பதாகவும் அடிப்படையே இல்லாமல் ஆதாரமற்ற அவதூறு கருத்தை கூறியிருக்கிறார். இந்த கூற்றுக்கு மாறாக இக்கூட்டணி உறுதியாக செயல்பட்டுவருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். 

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்கள் நலன் சார்ந்து நீண்டகாலமாக ஒற்றுமையுடன் கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணியின் தலைவராக தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகிறார். தமிழக மக்களை பாதிக்கிற எந்த பிரச்சனையாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளை அழைத்து பேசி கருத்துக்களை பகிர்ந்து, விவாதித்து, தீர்மானமாக வடித்து, கொள்கை திட்டங்கள் வெளியிடப்படுகின்றன. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனத்தீர்மானம் நிறைவேற்றுவது, போராட்டங்கள் நடத்துவது என ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது ஒரு கொள்கை கூட்டணி. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியைப் போல சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல.

தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் அடிக்கடி கூடி விவாதித்து முடிவெடுப்பதைப்போல அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் என்றைக்காவது மக்கள் பிரச்சனைகள் குறித்து கூடி பேசியிருக்கிறதா? விவாதித்திருக்கிறதா? முடிவெடுத்திருக்கிறதா? கூட்டணி கட்சிகள் என்பது அடிக்கடி கூடிப் பேசவேண்டும். கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஆனால் அதற்க்கு முற்றிலும் மாறாக, கூட்டணி கட்சி என்ற அடிப்படை இலக்கணத்தைக் கூட நடைமுறையில் கடுகளவும் கடைபிடிக்காத அ.தி.மு.க. கூட்டணியை என்னவென்று அழைப்பது?

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறதா? இல்லையா? என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் திரு எல்.முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருக்கிறாரே தவிர, கூட்டணி கட்சிகள் என்ற முறையில் என்றைக்காவது கூடி விவாதித்திருக்கிறாரா?

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 2021 தேர்தலுக்கு பிறகு திரு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இந்த முடிவு எடுப்பதற்கு முன்பாக பா.ஜ.க. தலைமையோடு அ.தி.மு.க. தலைமை கலந்து பேசியிருக்கிறதா? அ.தி.மு.க. கூட்டணியில் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் இருப்பதை விட ஒரு அவமானம் பா.ஜ.க.வுக்கு இருக்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்ற பெயரை டி.ஜெயக்குமாரால் வெளியிட முடியுமா? கடந்த 2019 மக்களவை  தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறது என்பதே சிதம்பர ரகசியமாக இருக்கிறது. இந்நிலையில் எஃகு கோட்டை போல உறுதியாக செயல்பட்டு வருகிற தி.மு.க. தலைமையிலான கூட்டணியை பற்றி பேச டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் எவருக்கும் எந்த தகுதியும் கிடையாது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. தலைமையிலான  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே பெற்ற வாக்குகளின் மொத்த வித்தியாசம் 5 லட்சத்திற்கும் குறைவானது தான். அதாவது 1.1 சதவீதம் தான் வித்தியாசம். அந்த தேர்தல் முடிவின் அடிப்படையில் கடந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கு இரண்டு பேர் அ.தி.மு.க. கூட்டணியை எதிர்த்து தி.மு.க. கூட்டணிக்கு குறைந்தபட்சம் வாக்களித்தாலே எடப்பாடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

அ.தி.மு.க. கூட்டணியில்  பா.ஜ.க.வை சேர்த்தால் கடந்த மக்களவை தேர்தலை போல படுதோல்வி அடைய நேரிடும் என்ற அச்சம் அ.தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. இந்த அச்சம் அ.தி.மு.க. தலைமைக்கு மட்டுமல்ல, அந்த கட்சியின் தொண்டர்களிடமும் இருக்கிறது. தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படுகிற கட்சியாக பா.ஜ.க. இருப்பதற்கு காரணம் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தான். 

எனவே, அ.தி.மு.க. கூட்டணியில் இவளவு குழப்பங்களை வைத்துக்கொண்டு தமிழக மக்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, அவர்களது உரிமைகளை பாதுகாக்கிற கேடயமாகவும், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து போராடுகிற வாளாகவும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி விளங்குகிறது. எனவே, எப்பொழுதும் போல நையாண்டி பேசி, நகைச்சுவை அரசியல் நடத்துவதை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக