செவ்வாய், 20 அக்டோபர், 2020

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்

இந்திய ராணுவ செய்திகள்


அம்பாலா ராணுவ முகாமில் ராணுவ தளபதி ஆய்வு

அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள  ராணுவ முகாமுக்கு இன்று  சென்ற ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, அங்குள்ள கார்கா படைப்பிரிவின் தயார் நிலையை ஆய்வு செய்தார்.

அவருக்கு படைப்பிரிவின் தயார் நிலை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எஸ் மகல் விளக்கினார். அதன்பின் ராணுவ கமாண்டர்களுடன், தரைப்படை தளபதி ஜெனரல் நரவானே உரையாடினார். படைப்பிரிவின் தயார் நிலை நடவடிக்கைகள் மற்றும் கொவிட்-19-க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை ராணுவ தளபதி பாராட்டினார். எதிர்காலத்தில் எந்த சவால்களையும் சந்திக்க,  ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி அவர் அறிவுறுத்தினார். அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தையும், பார்வையிட்ட ராணுவ தளபதி, படைகள் இடையேயான ஒருங்கிணைப்பையும் பாராட்டினார்.

இந்தாண்டு இறுதியில் மலபார் 2020 கடற்படை கூட்டுபயிற்சி

இந்தியா - அமெரிக்கா கடற்படைகளின் இருதரப்பு கூட்டு பயிற்சியாக மலபார் பயிற்சி கடந்த 1992ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 2015-ம் ஆண்டு இதில் ஜப்பான் இணைந்தது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த கூட்டு பயிற்சி, கடந்த 2018ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் நடந்தது. 2019-ம் ஆண்டு ஜப்பானில் நடந்தது. இந்தாண்டு இறுதியில் மலபார் கூட்டு பயிற்சி வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதயில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்சார் பாதுகாப்பில், மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கவும்,  ஆஸ்திரேலியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கவும்  இந்தியா விரும்புவதால், இந்தாண்டு மலபார் கூட்டு பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் இணையும்.

கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு கூட்டு பயிற்சியை, கடலில் தொடர்பில்லா முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டு பயற்சி, பங்கு பெறும் நாடுகள் இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்.

இந்தாண்டு மலபார் பயிற்சியில் கலந்து கொள்ளும் நாடுகள், கடற்சார் பாதுகாப்பையும் அதிகரிக்கும். இந்தோ-பசிபிக் பகுதியில், சர்வதேச விதிமுறைகள்படி, திறந்தவெளி போக்குவரத்துக்கும் கூட்டாக ஆதரவு தெரிவிக்கும்.

கிழக்கு லடாக் பகுதியின் டெம்சோக் பகுதியில், சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்

எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இன்று  நுழைந்த சீன ராணுவ வீரர்  வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது.  

மோசமான பருவ நிலையில் சிக்கி அவதிப்பட்ட  அந்த சீன ராணுவ வீரருக்கு, இந்திய ராணுவத்தினர் மருத்துவ உதவி, ஆக்ஸிஜன் அளித்தனர். பின்னர் அவருக்கு உணவும், கடும் குளிரிலிருந்து காக்கும் உடையையும் இந்திய ராணுவத்தினர் வழங்கினர்.

இந்நிலையில், சீன ராணுவ வீரர் ஒருவரை காணவில்லை எனவும், அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால், தெரியப்படுத்தும்படியும் சீன ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏற்கனவே உள்ள ராணுவ நெறிமுறைகள் படி, அனைத்து நடைமுறைகளும் முடிந்தபின், அந்த சீன ராணுவ வீரர், சுசூல் - மோல்டோ சந்திப்பு பகுதியில் இந்திய ராணுவத்தினரால் ஒப்படைக்கப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக