ஞாயிறு, 11 அக்டோபர், 2020

எனது திருமணம் பொதுவெளியில் அதிகப்படியான நேர் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது. - அ.பிரபு MLA.


கடந்த அக்.05 அன்று எங்கள் தனிப்பட்ட வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வான எனது திருமணம் பொதுவெளியில் அதிகப்படியான நேர் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

நானும் என் மனைவி குடும்பத்தாரும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப நண்பர்களாக இருந்து வந்துள்ளோம், கடந்த சில மாதங்களாக எங்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்ப்பட்ட நிலையில் மனைவியின் வீட்டாரிடம் பெண் கேட்டு சென்றோம்.

என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ள என் மனைவியின் தகப்பனார் அவர்களால்  எங்களது முடிவை சில காரணங்களால் உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் என் பெற்றொர் சம்மதத்துடன் பெரியவர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டோம்.

எனது மாமனாரிடம் சமாதானம் பேசி வருகிறோம் நிச்சயமாக நாங்கள் நல்ல வாழ்க்கையை வாழ அவர் விரும்புவார்.

கொரோனா பாதிப்புகள் தீர்ந்த பின் எங்கள்  இருவரது பெற்றோர்களின் தலைமையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளால் அரசியலில் எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் என் திருமண சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முற்பட்டு என் மாமனாரை தவறாக வழிநடத்தினர்  அதை அவரும் உணர்ந்திருப்பார்.

மேலும் எனக்கும் என் மனைவிக்கும் 20 வயது வித்தியாசம் என்றும் நான் கடத்திவிட்டேன் என்றெல்லாம் பொய்பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர் ஆனால் அவை உண்மையில்லை.

என் மனைவிக்கு வயது 20 எனக்கு வயது 35. இத்தகைய வித்தியாசத்தை என் மனைவியின் தகப்பனாரால் உடனே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என் மாமனாரின் உணர்விற்கு நான் மதிப்பளிக்கிறேன்.

நாங்கள் நன்கு ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள் காதல் செய்து திருமணம் செய்து கொண்டோம் இது முற்றிலும் காதல் திருமணமே.

ஜாதி மறுப்பு திருமணம் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது சிலர் கூறுவது போல் திருமணத்தின் மூலம் புரட்சி என்ற அரசியல் காரணங்களுக்காகவோ இந்த திருமணம் நடைபெறவில்லை, நான் யாருடைய கொள்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிரானவன் அல்ல மற்றவர்கள் அவ்வாறு நினைத்து விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது.

அரசியல் வாழ்விலும் சரி தனிப்பட்ட வாழ்விலும் சரி ஜாதி மத இன உணர்வுகளை கடந்து மனிதம் தான் பெரிது என்ற தத்துவத்தில் வாழ்ந்து வருபவன் நான், என்னுடன் பழகிய அனைவருக்கும் இது நன்கு தெரியும்.

என் அரசியல் பயணத்தில் பல தடைகளையும் சங்கடங்களையும் சந்தித்து தான் பயணித்து கொண்டிருக்கிறேன், அரசியலில் இருப்பதாலே தனிப்பட்ட வாழ்விலும் சில சங்கடங்களை சந்தித்தது உண்டு.

ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு இயக்கத்தை சார்ந்தவனாகவும் மக்கள் பணிகளில் என்னை பெருமளவில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொடுத்த வாய்ப்பையும் கள்ளக்குறிச்சி தொகுதி மக்கள் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தையும் சிறப்பான முறையில் பயன்படுத்தி அரசின் உதவியோடு பல்வேறு வளர்ச்சி பணிகளையும் திட்டங்களையும் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு கொண்டுவந்துள்ளேன் .

மேலும் எங்கள் தொகுதியை தமிழகத்தில் தன்னிறைவுபெற்ற  வளர்ச்சியடைந்த தொகுதி பட்டியலில் முதல் இடத்திற்கு கொண்டுவரவும் தொடர்ந்து பயணிப்பேன் என்று உறுதியுடன் தெரிவிக்கிறேன்.

அரசியல் களத்தில் என்னுடன் ஏற்படும் முரண்களுக்காக எனது மாமனாரை தவறாக வழிநடத்தி காவல்துறை நீதித்துறை வரை சென்று எனது அரசியல் வாழ்வை கேளிக்கை பொருளாக மாற்ற நினைத்தவர்களுக்கு எனது மக்கள் பணியின் மூலம் நிச்சயமாக பதில் அளிப்பேன்.

இந்த சூழலிலும் என் திருமண நிகழ்விற்கு வாழ்த்து தெரிவித்து எனக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஆதரவு அளித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக