வெள்ளி, 2 அக்டோபர், 2020

லட்சோப லட்சம் சுகன்யாக்கள் உருவாக வேண்டும்; அதுவே ஊமை சனங்களை உயர்த்தும்! - Dr.S.ராமதாஸ்


லட்சோப லட்சம் சுகன்யாக்கள்  உருவாக 
வேண்டும்; அதுவே ஊமை சனங்களை உயர்த்தும்!- Dr.S.ராமதாஸ்

சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்த இ.பழனிச்சாமியின் மகள்  ப.சுகன்யா  இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமான  தில்லி எய்ம்ஸ்சில் மூத்த மருத்துவராக  தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் இணைந்துள்ளார்.  கடும் போட்டி நிறைந்த தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஓரிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.  நாடு முழுவதிலும் இருந்து  ஏராளமானோர் பங்கேற்ற தேர்வில் அந்த இடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் சுகன்யா. இந்த செய்தியைக் கேட்பதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும். மருத்துவர் சுகன்யாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுகன்யாவின் தந்தை பழனிச்சாமி வன்னியர் சங்க இட ஒதுக்கீட்டு போராட்டக் காலம் முதல் நம்முடன் பயணித்து வரும் சொந்தம். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு  சுகன்யா  கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பும்,  சண்டிகரில் உள்ள  அரசு மருத்துவக் கல்லூரியில்  முதுநிலை படிப்பும் படித்து முடித்து  இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார். இட ஒதுக்கீடு என்ற கனியை விளைவிக்க உழைத்த ஒருவரின் மகளே அந்த கனியை சுவைத்து முன்னேறுவது  தான் சமூகநீதியின் சிறப்பு.

ஒரு சமுதாயத்தின் கனவு படிப்படியாக நனவாகத் தொடங்கியிருக்கிறது. ஆண்கள் மட்டும் தான் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நிலையை மாற்றி பெண்கள் சாதிக்கத் தொடங்கியிருப்பதில் பெரு மகிழ்ச்சி.  கிராமங்களில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளாலும் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பெரும்பதவிகளில் இருப்பவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் அளவுக்கு உயர முடியும் என்பதற்கு அடித்தளமாக அமைந்தது நமது சமூகநீதி போராட்டம் தானே?

எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தில் ஒரு சுகன்யா பணியில் சேர்வது மட்டும் போதுமானதல்ல... இன்னும் ஆயிரமாயிரம்.... லட்சோபலட்சம் சுகன்யாக்கள் எய்ம்ஸ் நிறுவனத்தில் மட்டுமின்றி, அதை விட சிறந்த மருத்துவ நிறுவனங்களிலும் பணியாற்றும் நிலை உருவாக வேண்டும். அது தான் நமது ஊமை சனங்களை உயர்த்தும்; அதற்காக உழைக்கும் என்னையும் மகிழ்விக்கும். முதுநிலை மருத்துவர் சுகன்யாவுக்கு வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக