செவ்வாய், 13 அக்டோபர், 2020

பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கமாட்டோம்.- E.R.ஈஸ்வரன்


 பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கமாட்டோம்.

இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்களும், டீஸரும் ஆபாசம் நிறைந்ததாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதுப்போன்ற படங்கள் வெளிவந்தால் இளைய சமுதாயம் முற்றிலும் சீர்கெடும். தமிழகம் கலாச்சாரமும், பண்பாடும் நிறைந்த மண். இம்மண்ணில் கலாச்சார சீரழிவை உருவாக்குவதற்காக ஒரு சிலர் ஆபாசமான படங்கள் எடுத்து அண்மைக்காலமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

திரைப்பட தணிக்கை குழுவும் இதுப்போன்ற படங்களுக்கு அனுமதி அளிப்பதால் தொடர்ந்து எந்தவொரு தடையுமின்றி திரைக்கு வருகிறது. இது மாதிரியான படங்கள் வெளிவருவதை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரட்டை வசனங்களும், ஆபாச காட்சிகளும் நிறைந்த இரண்டாம் குத்து படம் திரைக்கு வந்தால் பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்க கூடியதாக அமையும். பள்ளி பருவ மாணவர்கள் மனதில் தவறான தாக்கத்தை உருவாக்கும். 

தமிழக முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களால் பெற்றோர்கள் அனைவரும் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். பல்வேறு தரப்பினரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக திரையுலகம் படைப்பு என்ற பெயரில் மிக மோசமான போக்கை கடைப்பிடிப்பது ஏற்புடையதல்ல. தமிழ் சமூகத்திற்கு ஏற்றவாறு நல்ல படங்களை எடுக்க வேண்டும். பாலுணர்வை தூண்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் இரண்டாம் குத்து படத்தை தமிழகம் முழுவதும் எந்தவொரு தியேட்டரிலும் திரையிட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. இப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து தவறான காட்சிகளை நீக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக