சனி, 3 அக்டோபர், 2020

வீணாகும் நெல் மூட்டைகள்: கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும்! தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும். - DR அன்புமணி ராமதாஸ்


 வீணாகும் நெல் மூட்டைகள்: கொள்முதல் 

நிலையங்களை உடனே திறக்க வேண்டும்! - DR அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் பருவம் நேற்று தொடங்கி விட்ட நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால், விவசாயிகள்  பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்து வரும் நிலையில், கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது நியாயமல்ல.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நடப்பாண்டில் குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இதுவரை இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி செய்யப் பட்டுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் 4 லட்சம்  ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில்  சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை பருவ நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்கம். அந்த நாளில் இருந்து தான் புதிய கொள்முதல் விலை நடைமுறைக்கு வரும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.53 விலை உயர்த்தப்பட்டிருப்பதால் அதிக எண்ணிக்கையிலான உழவர்கள் நேற்று தங்களிடமுள்ள நெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களுக்கு சென்றனர். ஆனால், பெரும்பான்மையான நிலையங்கள் நடப்புப் பருவத்தின் முதல் நாளில் செயல்படாதது அவர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை அறுவடை ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டது. அதிக எண்ணிக்கையில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களுக்கு வந்ததால், அவற்றை முழுமையாக கொள்முதல் செய்ய முடியாமல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் திணறி வந்தனர்.  புதிய கொள்முதல் பருவம் நேற்று தொடங்க இருந்ததையொட்டி, கடந்த செப்டம்பர் 25&ஆம் தேதியுடன்  கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன. அதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 1000 முதல் 2000 குவிண்டால்களுக்கும் கூடுதலான நெல் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 6 லட்சம் குவிண்டால்களுக்கும் கூடுதலான நெல் தேங்கிக் கிடப்பதாக  உழவர்கள் தெரிவிக்கின்றனர். காவிரி பாசன மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால்  சாலையில் கொட்டியும், மூட்டைகளாக அடுக்கியும் வைக்கப்பட்டுள்ள நெல் நனைந்து சேதமடைந்துவிட்டது.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவே திட்டமிட்டபடி நேற்று நெல் கொள்முதல் தொடங்கியிருந்தால் கூட, தேங்கிக் கிடக்கும் நெல்லையும், புதிதாக வரும் நெல்லையும் கொள்முதல் செய்து முடிப்பதற்கே இன்னும் 10 நாட்களாவது ஆகும். மற்றொருபுறம் நெல்லின் ஈரப்பதம் 17 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அதை கொள்முதல் செய்ய முடியும். மழையில் நனைந்த நெல்லின் ஈரப்பதம் 17 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருக்கும் என்பதால், அதை விற்பனை செய்ய முடியாது.  நனைந்த நெல்லை அதே பகுதியில் ஓரிரு நாட்கள் காய வைத்த பிறகு தான் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியும். இத்தகைய சூழலில் நெல் கொள்முதல் நிலையங்கள் திட்டமிட்டபடி திறக்கப் படாததால் இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ என்ற ஏக்கம் உழவர்களிடம் நிலவுகிறது. இடைப்பட்ட காலத்தில் மழை வந்து விட்டால் நெல் வீணாகி விடுமோ? என்ற கவலையும் வாட்டுகிறது.

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் நூற்றுக்கணக்கான  மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகவும், அவற்றை கிடங்குகளுக்கு அனுப்பிய பிறகு தான் புதிதாக நெல் கொள்முதல் செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பணிகளை விரைந்து முடித்து அடுத்த சில நாட்களில் நெல் கொள்முதல் தொடங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் குறுவை சாகுபடி  அதிக அளவில் நடைபெற்றுள்ளது. விளைச்சலும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதனால் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்றால் அறுவடை செய்யப்பட்ட நெல் உடனடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும். அதன் மூலம் உழவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி நிலைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக