செவ்வாய், 6 அக்டோபர், 2020

அடக்குமுறைக்கு அஞ்சாத தேவேந்திரகுல வேளாளர்கள்.!! வேலும், வாளும் கண்ட சேர, சோழ, பாண்டிய வம்சம் அது. சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நிற்காது.! - DR K. கிருஷ்ணசாமி


 அடக்குமுறைக்கு அஞ்சாத தேவேந்திரகுல வேளாளர்கள்.!! வேலும், வாளும் கண்ட சேர, சோழ, பாண்டிய வம்சம் அது. சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நிற்காது.! - K. கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி சார்பில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வசிக்கக்கூடிய 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம் அறிவித்தபோது, அதை சாதாரணமாக எண்ணினார்கள். ஆனால், 10,000 என்பதை தாண்டி 20,000 கிராமங்களில் தேவேந்திரகுல மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகி விட்ட உடன் பொறுத்துக்கொள்ள முடியாமல், எடப்பாடி அரசு காவல்துறையினரை கொண்டு அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.         

  

இன்று உடுமலையில் தலைவர் தலைமையில் நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மதியம் 2 மணிக்கு போடப்பட்ட 120 அடி பந்தல் இரவு 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினரால் சூரையாடப்பட்டிருக்கிறது. தேனி மாவட்டம் பெரியகுளம், கோம்பை, சீலையம்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் போடப்பட்ட பந்தல்களை வலுக்கட்டயமாகப் பிரித்து இருக்கிறார்கள். கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டாயப்படுத்தி பந்தல்களை பிரித்து எடுத்துச் சென்றுள்ளனர். அதேபோல, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 6000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பந்தல்களை பிரித்து சென்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன.  பந்தல்கள் பிரிப்பு என்பது தேவேந்திரகுல மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகம். 10,000 கிராமங்களில் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே அரசை ஆட்டம் காண வைத்துவிட்டது.

கிராமங்கள் / நகரங்களில் உண்ணாவிரதத்திற்குத் தேவேந்திரகுல வேளாளர்கள் போட்ட பந்தல்களைப் பார்த்தே எடப்பாடி அரசுக்கு குலை நடுங்குகிறது. நிழலில் அமர்ந்து ஊரார் உழைப்பில் உண்டு கொழுத்தவர்கள் அல்ல தேவேந்திரகுல வேளாளர்கள்; வெயிலிலும், மழையிலும் வெந்தும் நொந்தும் உழைத்து உழைத்துக் கொடுத்தவர்கள். பந்தல்கள் இல்லையெனிலும் இம்மண்ணின் மக்களுக்கு இயற்கைத் தாய் துணை நிற்பாள்.

வேலும், வாளும் கண்ட சேர, சோழ, பாண்டிய வம்சம் அது. ”சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நிற்காது” இன்று வெயில் கொளுத்தினாலும், மழை கொட்டி தீர்த்தாலும் இயற்கை அன்னை  குடை பிடிப்பாள், குடைகள் பிடித்தாயினும் அறிவித்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியே காட்டுவர்.

அராஜகங்களையும் அடக்குமுறைகளையும் காணாதவர்கள் அல்ல அம்மக்கள். உங்கள் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் தேவேந்திரகுல மக்களின் உணர்ச்சிகளை மென்மேலும் தட்டி எழுப்புமே தவிர, கட்டிப்போடாது. பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

அக்டோபர் 6-ஆம் தேதி (இன்று) நாம் அறிவித்தபடி ஒவ்வொரு தேவேந்திரகுல வேளாளர் மக்களும் நமது சமூக விடுதலைக்காக இந்த ஒருநாள் வீட்டை விட்டு வெளியே வந்து என்ன இன்னல்கள், என்ன துன்பங்கள் வந்தாலும் அதை வெற்றிகரமாக்க வேண்டும். கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கூட்டி மாநாடுகள், பேரணிகள் நடத்தினோம். இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முன்பாகவே ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டால் சிறை என்கிறார்கள்; வழக்கு என்கிறார்கள் வேடிக்கை மனிதர்கள். ஆர்ப்பாட்டம், சாலை மறியல், முதல்வர் வீடு முற்றுகை, கருப்புக் கொடி போராட்டம் அறிவிக்கவில்லை. ஓர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கே இவ்வளவு நடுக்கமா? அரசியலில் இருபெரும் ஜாம்பவான்கள் முதல்வராக இருந்த ஆட்சிகளில் களம் கண்டவர்கள்; அவைகளை மாற்றியமைத்த வரலாற்றுக்குரியவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள். 

ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஏழை, எளிய மக்கள் போட்ட பந்தல்களை ஈவிரக்கமில்லாமல் காவல்துறையை வைத்துப் பிரித்துப் போட்ட ஆட்சியாளர்களை தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் ஒரு நாளும் மறக்காது; மன்னிக்கவும் செய்யாது. தேவேந்திரகுல வேளாளர் மக்கள் போட்ட வெறும் துணி பந்தலே உங்களை இவ்வளவு அச்சுறுத்தும் என்றால்? அம்மக்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தால் என்னவாகும் என எண்ணிப்பாருங்கள். ஆட்சி நிரந்தரமாகாது. எச்சரிக்கை செய்கிறோம்…!

தேவேந்திர குல வேளாளர் சிங்கங்களே..!

பந்தலுக்குள்ளே அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பது என்பது சாதாரண நிகழ்வாகும். பந்தலே இல்லாமல் வெயிலோடும், மழையோடும் விளையாடி உண்ணாவிரதம் இருந்தார்கள் என்பது வரலாறாகும்..!

பட்டியலை உடைக்க அடக்குமுறைக்கு அஞ்சோம்..! 

நாம் வரலாற்றுப் புருஷர்கள்.! வரலாறு படையுங்கள்..!!

உண்ணாவிரதப் போராட்டம் வெல்லட்டும்..!! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக