ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

அஞ்சாமை என்பதும் மடமையடா! - சுப வீரபாண்டியன்

அஞ்சாமை என்பதும் மடமையடா! 



இரண்டு நாள்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட அனுபவம், என்னைக் கவலையோடு சிந்திக்கத் தூண்டியது. ஒரு நிகழ்ச்சியில், நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் தன் மகனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பொருளியலில் முதுகலைப் பட்டமும், அதற்கு மேல் எம்.பி.ஏ பட்டமும் பெற்றிருந்த அந்த இளைஞர், ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பணியில் உள்ளார். என் நண்பர் சொன்னார்,
"உங்களைச் சந்தித்ததில் என்னை விட என் மகனுக்குத்தான் மிகவும் மகிழ்ச்சி. அவனுக்கு மிக மிகப் பிடித்த இருவரில் ஒருவர் நீங்கள்" என்றார். 'இன்னொருவர் யார் என்று கேட்டுவிடாதீர்கள்' என்று சொல்லிச் சிரித்தார். ஒருவேளை அவர் அப்படிச் சொல்லாமலிருந்தால், நான் கேட்டிருக்க மாட்டேன். இப்போது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது. பிறகு அவரே சொன்னார், "இன்னொருவர் மோடி"

இது என்ன தொடர்பே இல்லாத பிரியமாக இருக்கிறதே என்றேன். சின்னத் தயக்கத்திற்குப் பிறகு அந்த இளைஞரே அதற்கு விடை சொன்னார். "உங்களை உங்கள் மேடைப் பேச்சுக்காக மிகவும் பிடிக்கும், மோடியை அவரது துணிச்சலுக்காகப் பிடிக்கும்" என்றார். அந்த இளைஞரிடம் என்ன சொல்வது என்று நான் ஒரு நிமிடம் சிந்தித்த இடைவெளியில், அவர் தொடர்ந்தார். "உங்களுக்கு மோடியைப் பிடிக்காது என்பது பற்றியும், உங்களை மோடிக்குத் தெரியாது என்பது பற்றியும் எனக்குக் கவலையில்லை. ஆனால் எனக்கு நீங்கள் இரண்டு பெரும் கதாநாயகர்கள்" என்றார். .

என்னை ஒருவருக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காகக் கூட என்னால் மகிழ முடியவில்லை. என்னை அவருக்குப் பிடித்திருப்பது கூட, என்னுடைய சாதி எதிர்ப்புக் கொள்கைக்காகவோ, பெண்விடுதலை உள்ளிட்ட சமூக நீதிக் கொள்கைக்காகவோ அல்லாமல், தமிழ்ப் பேச்சுக்காக மட்டும்தான் என்பதிலும் எனக்கு மகிழ்ச்சியில்லை. இருப்பினும் இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசிட அந்த இடமும், நேரமும் பொருத்தமானதாக இல்லை. மேலும் அந்த இளைஞர் ஒரு குறியீடுதான் என்பதால், அவரைப்போல் இருக்கக்கூடிய மற்ற இளைஞர்களுக்கும் சேர்த்துச் சொல்ல வேண்டிய செய்திகள் இருக்கின்றன என்று தோன்றியது.

அந்தத் தம்பி குறிப்பாக ஒரு செய்தியையும் கூறினார். "பாருங்கள், 70 ஆண்டுகளாய் இழுத்துக் கொண்டிருந்த காஷ்மீர் விவகாரத்திற்கு மோடி ஒரே நாளில் தீர்வு கொண்டுவந்துவிட்டார். இதற்கு ஒரு பெரிய துணிச்சல் வேண்டும்தானே" என்றார். அவர் அப்பா உடனே, "சரியோ தப்போ நம் தலைவர்கள் தைரியமானவர்களாக இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் கருதுகின்றார்கள்" என விளக்கம் சொன்னார்.

காஷ்மீர் சிக்கல் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறியாமல் இருப்பதும், துணிச்சல் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதும்தான் இந்த முடிவுகளுக்கு காரணம் என்று தெரிந்தது.

370 ஆவது பிரிவு, காஷ்மீருக்குத் தனிச் சலுகைகள் கொடுப்பதாகவே பலரும் கருதுகின்றனர். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் விடுதலை பெறும்போது, காஷ்மீர் இரண்டு நாடுகளுடனும் இல்லை. அது ஒரு தனி சமஸ்தானம். 1947 அக்டோபர் 26 ஆம் நாள்தான் காஷ்மீரின் ஒரு பெரும் பகுதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப்படுகையில் இரு நாடுகளுக்குமிடையில் சில ஒப்பந்தங்கள் இருதரப்பிலும் ஏற்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில்தான் பிறகு 370 ஆவது பிரிவு உருவாக்கப்பட்டது. இப்போது அவர்களுக்கான சலுகைகளை நாம் நீக்கவில்லை. மாறாக, அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறியுள்ளோம்.

ஒப்பந்தத்தை மீறியது மட்டுமின்றி, புதிய பாதிப்புகள் சிலவற்றையும் ஏற்படுத்தியுள்ளளோம். ஒரு மாநிலத்தை. இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அரசு அறிவித்துள்ளது. ஒரு மாநிலத்தில் ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு மாற்றமும், அந்த மாநில அரசின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்ட விதியையும் மத்திய அரசு மறுதலித்துள்ளது. அரசிடம் கேட்டுவிட்டோம் என்கின்றனர். அங்கே இப்போது அரசே இல்லையே என்று கேட்டால், ஆளுநரிடம் கேட்டுவிட்டோம் என்கின்றனர். மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் எப்படி மக்களின் அரசாக ஆவார்? இப்படிப் பல குழப்பங்கள் உள்ளன.

இன்று காஷ்மீரை யூனியன் பிரதேசம் என்று அறிவித்தவர்கள், நாளையே தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களையும் அவ்வாறு அறிவிக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி உள்ளது? ஒரே நாடு, ஒரே பண்பாடு என்பதுதானே அவர்கள் கொள்கை! ஒரே நாடு ஒரே அரசு என்பதும் அவர்களின் எதிர்காலத் திட்டமாக இருக்கலாம். பிறகு, ஒரே அரசு, ஒரே அதிபர் என்று ஆகிவிட்டால், அதற்குச் சர்வாதிகாரம் என்பதைத் தவிர வேறு என்ன பெயர் பொருந்தும்?

.காஷ்மீரில் இப்போது 144 தடை உத்தரவு இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் நடைமுறையில் ஊரடங்கு உத்தரவு இருப்பதாகவே செய்திகள் கசிகின்றன. பொதுவுடைமைக் கட்சிகளின் தலைவர்கள் இருவர்க்கும் கூட உள்நுழைவதற்கு அங்கு அனுமதி இல்லை. காஷ்மீர் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் உள்ளனர். ஊடகங்களுக்கும் மக்களை சென்று சந்திக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் கதவுகளை மூடுவது, தீவிரவாதத்திற்குத்தான் வழிவகுக்கும் என்பதை இன்றைய மத்திய அரசு உணர்ந்துள்ளதா என்று தெரியவில்லை.

எல்லாவற்றையும் மீறி, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தடாலடியாகச் செயல்படுவதை மக்களில் ஒரு சிறு பகுதியினர், அதிலும் குறிப்பாகச் சில இளைஞர்கள் 'துணிச்சல்' என்று எண்ணிக்கொள்வது வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது. இந்தப் போக்கு நம்மிடையே நெடுநாள்களாகவே உள்ளது. 1975இல் நெருக்கடி நிலையை அறிவித்தது துணிச்சலான போக்கு என்று சொன்னவர்கள் உண்டு. பிறகு இந்திரா காந்தி அம்மையாரே அதற்காக வருத்தம் தெரிவித்தார். நெருக்கடி நிலையை அறிவிப்பதில் என்ன துணிச்சல் இருக்கிறது? அதனை எதிர்கொண்டவர்கள்தாம் துணிச்சல் உள்ளவர்கள்.

ஆள், அம்பு, எடுபிடி, சேனை எல்லாவற்றையும் தன்னிடம் வைத்துக்கொண்டு அதிகாரம் செய்வது எளிது. வரலாறு நெடுக அப்படிப்பட்டவர்கள் இருந்துள்ளனர். அவர்களை உலகம் நினைவில் கொண்டதில்லை. எதிர்த்து நின்று போராடிய போராளிகளைத்தான் நாடு போற்றுகிறது. இன்றும் நெல்சன் மண்டேலாதான் அனைவராலும் அறியப்படுகிறாரே அல்லாமல், அவரைச் சிறையில் தள்ளியவரின் பெயரை எத்தனை பேர் நினைவில் க்கொண்டுள்ளனர்?

நம் தமிழக அரசியலிலேயே, ஜெயலலிதாவிற்குத் துணிச்சல்காரர் என்று பெயர். ஆனால் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டபோது, அதனை எதிர்கொள்ளவே அவர் அஞ்சினார். வாய்தா வாங்குவதே அவருடைய இயல்பாக இருந்தது. ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசாவின் மீது 2ஜி வழக்கு வந்தபோது, அவரே கூண்டில் நின்று வாதாடினார். வழக்கை விரைவாக நடத்துங்கள் என்று கோரிக்கை வைத்தார். எது துணிச்சல்? யார் துணிச்சல்காரர்?

இன்று காஷ்மீர் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது பெரிய துணிச்சல் இல்லை. அந்த அடக்குமுறையை எதிர்த்துக் குரல் கொடுப்பதே துணிச்சல்.

இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். அநீதிகளை எதிர்ப்பதே துணிச்சல். அநீதிகளைச் செய்வது துணிச்சல் இல்லை. அநீதி இழைக்க, மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட அஞ்ச வேண்டும். அப்படி அஞ்சவில்லையென்றால், அது போற்றத்தகுந்தது அன்று.

அச்சம் மட்டுமே மடமை இல்லை. சில வேளைகளில், அஞ்சாமையும் மடமைதான். "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக