வியாழன், 8 ஏப்ரல், 2021

தமிழகத்தில் அண்மை நாட்களில் கொவிட்-19 தொற்று தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், 2021 ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

 


தமிழகத்தில் அண்மை நாட்களில்  கொவிட்-19 தொற்று தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-இன் கீழ் 2021 ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை  மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநில தலைமைச் செயலாளர் திரு ராஜீவ் ரஞ்சன் இன்று (ஏப்ரல் 8, 2021) வெளியிட்டுள்ள அரசாணையில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன:

•        மறு உத்தரவு வரும் வரை திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

•        கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார பழங்கள் மற்றும் காய்கறிகள் அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார பழங்கள் மற்றும் காய்கறிகள் வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கீழ்வரும் செயல்பாடுகள் ஒரு சில கட்டுப்பாடுகளோடு (கட்டுப்பாட்டு மண்டலம் தவிர்த்து) இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

•        தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுவதோடு, அங்கு பணி புரியும் பணியாளர்களுக்கு மத்திய அரசின் அறிவுரைப்படி தடுப்பூசி போடுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்பாடு செய்யலாம்.

•        மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

•        இதேபோல், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்துகளிலும் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது:

o        காய்கறிக் கடைகள், பலசரக்குக் கடைகள், வணிக வளாகங்கள், பெரிய கடைகள் போன்றவை இரவு 11 மணி வரை செயல்படலாம்.

o        உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு உண்ணவும், பார்சல் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

o        கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள்.

o        திரையரங்குகள், திரையரங்கு வளாகங்கள்.

•        சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள், உள் அரங்குகளில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் நடைபெறலாம்.

•        திருமணம் சார்ந்த விழாக்களில் அதிகபட்சமாக 100 பேரும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் கலந்துக் கொள்ளலாம்.

•        விளையாட்டுப் போட்டிகளை, விளையாட்டு அரங்கங்கள் மற்றும் மைதானங்களில் பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

•        நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டுமே செயல்படலாம்.

•        பொருட்காட்சி அரங்கங்களை வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.

•        அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

•        திரைப்பட மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறலாம். இதில் கலந்து கொள்ளும் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்டிபிசிஆர்/ தடுப்பூசியை போட்டுக்கொள்வதை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

•        வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுனர் தவிர்த்து 3 பயணிகள் மட்டுமே பயணிக்கலாம்.

•        ஆட்டோக்களில் ஓட்டுநரைத் தவிர இரண்டு பேர் மட்டுமே பயணிக்கலாம்.

•        வெளி மாநிலங்கள் (புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தைத் தவிர்த்து) மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான மின்னணு-பதிவு முறை தொடர்ந்து செயல்படும்.

இவைத் தவிர பெருந்தொற்றின் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கள அளவிலான குழுக்கள் அமைத்து, நிலைமை கண்காணிக்கப்படும்.

காய்ச்சல் முகாம்கள், வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கும் பணிகள், நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களது தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதிப்பது போன்ற நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக