வியாழன், 15 ஏப்ரல், 2021

கடலூரில் கொரோனா தடுப்பூசி திருவிழா-ஆட்டோ விழிப்புணர்வு பிரச்சாரம் : அரசு முதன்மைச் செயலாளர் திரு ககன்தீப் சிங் பேடி துவக்கி வைத்தார்

 


கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகின்றது. தினசரி தொற்று இரண்டு லட்சத்தைத் தொட்டுவிட்டது. கொரோனா தொற்றாமல் பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான  முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிப்பதோடு தடுப்பூசியையும் போட்டுக் கொள்வது நல்லது.  ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்களிடம் தயக்கமும் தவறான நம்பிக்கைகளும் நிலவுகின்றன. அவற்றைப் போக்கும் விதத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா  நேற்று முதல் மூன்று நாட்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகின்றது.

இதையொட்டி புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின்  மக்கள் தொடர்பு கள அலுவலகம்  ஆட்டோ விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு கடலூரில் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் & நோய் தடுப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை யுனிசெஃப் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த ஆட்டோ பிரச்சாரத்தை இன்று(15.4.2021) முற்பகல் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு முதன்மைச் செயலாளரும் வேளாண் உற்பத்தி ஆணையருமான திரு. ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் திரு. சந்திர சேகர் சாகமூரி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.அருண் சத்யா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மா.ஸ்ரீஅபிநவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றியதோடு பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.  ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை திரு. ககன்தீப் சிங் பேடி வழங்கினார். ஆட்டோ பிரச்சாரத்துக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் செய்திருந்தார்.

ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பாடல்கள், வாசகங்கள் ஒலிபரப்பப்பட்டன. கடலூர் நகராட்சியின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைவீதிகளில் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக