செவ்வாய், 27 ஏப்ரல், 2021

பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இந்தியன் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்


முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியும், பொதுத்துறை தொலை தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் மற்றும் பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் முன்னிலையில் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டன.

இதன்படி இந்தியன் வங்கிக்கு போட்டி கட்டணத்தில் தடையற்ற தொலை தொடர்பு சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நவீன நெட்வொர்க் தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னணி சேவைகளை போட்டி விலையில் இந்தியன் வங்கி பெற முடியும்.

நாடு முழுவதும் தனது அகண்ட நெட்வொர்க்குக்கு பிஎஸ்என்எல் மற்றும் மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவன சேவைகளை இந்தியன் வங்கி பயன்படுத்தி வருகிறது.

இது குறித்து சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் டாக்டர் வி.கே.சஞ்சீவி கூறுகையில், இந்தியன் வங்கி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மதிப்புமிக்க பெருநிறுவன வாடிக்கையாளர் ஆகும்.

நாடு முழுவதும் இந்தியன் வங்கியின் 5000 கிளைகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் சமீபத்தில் இணைக்கப்பட்ட அலகாபாத் வங்கி ஆகியவற்றை பிஎஸ்என்எல் மற்றும் அதன் துணை நிறுவனமான எம்டிஎன்எல் ஆகியவை தங்களின் வலுவான தொலை தொடர்பு கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம்  இணைக்கிறது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என கூறியுள்ளார்.

நாட்டின் கிராம பகுதிகள் மற்றும் தொலை தூர பகுதிகளில் உள்ள வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம்களை இணைக்கும் ஒரே தொலை தொடர்பு சேவை நிறுவனம் பிஎஸ்என்எல். சரியான நேரத்தில் தொடர்புகளை ஏற்படுத்துவதிலும், வங்கியின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப நவீன தொலை தொடர்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் உறுதியுடன் உள்ளது என பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ் துணை பொது மேலாளர்(மக்கள் தொடர்பு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக