ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

‘தடுப்பூசித் திருவிழாவிற்காக' தனிநபர், சமூகம் மற்றும் நிர்வாக அளவில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, அவற்றை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.- நரேந்திர மோடி


 ‘தடுப்பூசித் திருவிழாவை’, கொரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய போரின் துவக்கம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தனிநபர் சுகாதாரத்துடன், சமூக சுகாதாரத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மகாத்மா ஜோதிபா புலேவின் பிறந்த நாளான இன்று முதல், பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இந்தத் தடுப்பூசி திருவிழா நடைபெறும்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நடவடிக்கை சம்பந்தமாக 4 முக்கிய விஷயங்களை வலியுறுத்தினார். முதலாவதாக ஒவ்வொருவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுதல், அதாவது, தடுப்பூசியை போட்டுக் கொள்ள செல்ல முடியாத படிப்பறிவில்லாத மற்றும் வயது முதிர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, ஒவ்வொருவரும், பிறர் சிகிச்சை பெறுவதற்கு உதவுதல். கொரோனா சிகிச்சைப் பற்றிய போதிய அறிவும், வளங்களும் இல்லாதவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை இது குறிக்கிறது.

மூன்றாவதாக, ஒவ்வொருவரும் பிறரைக் காப்பாற்றுதல். என்னையும் மற்றவர்களையும் பாதுகாப்பதற்காக நான் முகக் கவசத்தை அணிய வேண்டும் என்பது இதன் பொருளாகும். இது வலியுறுத்தப்பட வேண்டும்.

இறுதியாக, 'மிகச்சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகளை' உருவாக்குவதில் சமுதாயமும், மக்களும் முன்னின்று செயல்பட வேண்டும். ஒருவர் பாதிக்கப்பட்டால் கூட குடும்ப உறுப்பினர்களும், சமுதாய உறுப்பினர்களும் ‘சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகளை' அமைக்க வேண்டும். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ‘சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகள்' மிக முக்கிய அங்கம் வகிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

பரிசோதனை மற்றும் விழிப்புணர்வின் தேவையை பிரதமர் வலியுறுத்தினார். தகுதி வாய்ந்த ஒவ்வொரு தனிநபரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். சமுதாயம் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக, இது இருக்க வேண்டும் என்றார் அவர்.

தடுப்பூசி வீணாகாத நிலையை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தடுப்பூசியின் திறனை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் நமது ஆற்றலை அதிகரிக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

‘சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகள்' பற்றிய விழிப்புணர்வு, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது, தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவது மற்றும் முகக்கவசங்கள் அணிவது போன்ற இதர கொவிட் சரியான வழி காட்டு நெறிமுறைகளை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோம், என்பதைப் பொறுத்தே நமது வெற்றி நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

நான்கு நாட்கள் நடைபெறும் ‘தடுப்பூசித் திருவிழாவிற்காக' தனிநபர், சமூகம் மற்றும் நிர்வாக அளவில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, அவற்றை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மக்களின் பங்களிப்பு, விழிப்புணர்வு மற்றும் பொறுப்பான நடவடிக்கைகளின் வாயிலாக கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மீண்டும் நாம் வெற்றி அடைவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக