வெள்ளி, 2 ஏப்ரல், 2021

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறவினர் வீட்டில் வருமானவரி சோதனை, திசை திருப்பும் முயற்சியாகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். - கே. பாலகிருஷ்ணன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறவினர் வீட்டில் வருமானவரி சோதனை - திசை திருப்பும் முயற்சியாகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னமும் 3 நாட்களே உள்ளன. பாஜக- அதிமுக கூட்டணி தோல்வி பயத்தில் விரக்தியின் எல்லைக்கே சென்றுள்ளது. திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியுள்ளது. முற்றிலும் உள்நோக்கம் கொண்ட இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மத்தியிலுள்ள மோடி அரசு வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை  உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் தன்னுடைய குறுகிய அரசியல் நலனுக்காகவே பயன்படுத்தி வருகிறது. மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீது வருமானவரித்துறையை ஏவிவிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் உறவினர் வீடுகளில் நடத்தப்படும் வருமானவரி சோதனை மக்களுடைய கவனத்தை திசை திருப்பவும், எதிர்கட்சிகளின் மீது களங்கம் கற்பிக்கவும் மட்டுமே நடத்தப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் திமுக தலைமையிலான அணியின் வெற்றியைத் தடுத்து விட முடியும் என்று மத்திய பாஜக அரசு கருதுமானால் அது பகல்கனவாகவே முடியும்.

மத்திய ஆளுங்கட்சியான பாஜக-வின் துணையுடன் மாநில ஆளுங்கட்சியான அதிமுக தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பண விநியோகம் செய்கிறது. அரசு அதிகாரிகளே இதற்கு துணை போகும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ள மறுக்கிறது. 

திமுக தலைவர் உறவினர் வீடுகளில் தேர்தல் காலத்தில் திட்டமிட்டு வருமானவரித்துறையை ஏவி விடுவது கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய திசை திருப்பும் முயற்சிகள் பலனளிக்காது. அதிமுக-பாஜக கூட்டணி இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வப்போவது உறுதி என்பதை தமிழக மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் நிரூபிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக