சனி, 3 ஏப்ரல், 2021

தமிழர்களின் அடையாளம், நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை அழிப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. - கே.எஸ்.அழகிரி


தமிழகத்தில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர், மத்திய பா.ஜ.க. அரசின் மூலம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் கூறி வாக்கு கேட்காமல், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 2014 மக்களவைத் தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம், கருப்பு பணம், கள்ளப் பணத்தை ஒழிப்போம், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவோம் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை பிரதமர் மோடி வழங்கினார். ஆனால், 45 ஆண்டுகாலங்களில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில் தலைவிரித்தாடி வருகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளினால் இது பலமடங்கு கூடிவிட்டது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஏழ்மையில் சிக்கிக் கொள்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த 2020 ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் மாத ஊதியம் பெறுகிற 12 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இது 15 கோடியாக தற்போது உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் மொத்த மக்கள் தொகையே 33 கோடி தான். ஆனால், அதில் பாதி அளவிற்கு இந்தியாவில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். பொது முடக்கத்திற்கு பிறகு, இந்தியாவில் ஏழை மக்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்துள்ளது. இதுதான் மோடி ஆட்சியின் சாதனையாகும். 

இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியில் அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களின் சொத்து குவிப்பு தான் நிகழ்ந்துள்ளது. மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 13 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூபாய் 6 லட்சத்து 58 ஆயிரத்து 400 கோடியாக உயர்ந்துள்ளது. பொது முடக்கத்திற்கு பிறகு ஒரு மணி நேரத்தி;ற்கு ரூபாய் 90 கோடியை முகேஷ் அம்பானி சம்பாதித்து வருவதாக 2020 ஆம் ஆண்டிற்கான ஐ.ஐ.எப்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது முறையாக முதலிடத்தை பெற்று வருகிறார். உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரர் என்ற தகுதியையும் பெற்று வருகிறார். 

பிரதமர் மோடியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கௌதம் அதானி. அவரது சொத்து மதிப்பு 2017-2020 வரை 6 மடங்கு உயர்ந்துள்ளது. 34 பில்லியன் டாலராக, அதாவது 5.37 பில்லியன் டாலரில் இருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதேபோல, அம்பானியின் சொத்து மதிப்பு இதே காலத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. 26.6 பில்லியன் டாலரிலிருந்து 74.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 39 சதவிகித சொத்துக்கள் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் குவிந்துள்ளன. அம்பானி, அதானி சொத்து குவிப்புகள் மோடி ஆட்சியில் அசுர அளவில் வளர்ந்திருப்பதற்கு யார் காரணம் ? பிரதமர் மோடி இல்லை என்று மறுக்க முடியுமா ? 

கார்ப்பரேட் நிறுவனங்களின் நண்பராக பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் இருக்கிற காரணத்தால் தான் அவர்களுக்கு நன்கொடைகள் அதிக அளவில் வழங்கப்படுகின்றன. இதுவரை 3 கட்டங்களாக விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பான ரூபாய் 6,128 கோடியில் 95 சதவிகிதம் பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ரூபாய் 1 கோடி மதிப்பிலானது. 

பா.ஜ.க.வை பொறுத்தவரை, கார்ப்பரேட்டுகளின் நலனை பாதுகாப்பதில் காட்டுகிற அக்கறை தமிழகத்தின் வளர்ச்சியில் காட்டியதில்லை. இயற்கை சீற்றம், வறட்சி காரணமாக தமிழகம் பாதிக்கப்பட்ட போது, 2011-12 ஆம் ஆண்டுகளில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா முதல் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரை பலமுறை நிவாரண உதவி கோரியுள்ளனர். 2015 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கு, 2016 இல் வார்தா புயல், 2017 இல் ஒக்கி புயல், 2018 இல் கஜா புயல் ஆகிய பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்க அ.தி.மு.க. அரசு கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் 500 கோடி. ஆனால், பா.ஜ.க. அரசு 6 கட்டங்களாக கொடுத்ததோ, ரூபாய் 5778 கோடி. தமிழக அரசு கேட்ட தொகையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகத் தான் நிவாரண நிதியை மத்திய பா.ஜ.க. அரசு வழங்கியது. இதுதான் பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி. தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிற பிரதமர் மோடி, நிதியை ஒதுக்குவதில் தமிழகத்தை வஞ்சிக்கலாமா ? பாரபட்சம் காட்டலாமா ? 

உலகில் தொன்மையான மொழி தமிழ் மொழி என்று கூறி திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் ஆகியோரை மேற்கோள் காட்;டுகிறார் பிரதமர் மோடி. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மத்திய பணியாளர் தேர்வுகளில் இந்தி திணிப்பு ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிற மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ் மொழிக்காக பாரபட்சமாக நடந்து கொண்டதற்கு நிறைய சான்றுகளைக் கூறலாம். இந்தியாவில் சமஸ்கிருத மொழியை பரப்புவதற்காக கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 644 கோடியை பா.ஜ.க. அரசு செலவழித்திருக்கிறது. ஆனால், செம்மொழித் தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 29 கோடி மட்டும் தான். இதை ஒப்பிடும் போது சமஸ்கிருதத்திற்கு 29 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சமஸ்கிருத மொழி பேசுவோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 821 மட்டுமே. ஆனால், 7 கோடி மக்கள் பேசுகிற தமிழ் மொழி உள்ளிட்ட தென்மாநில மொழிகளுக்கு ஒதுக்கப்பட்;ட தொகை வெறும் ரூபாய் 29 கோடி தான். இதன்மூலம் சமஸ்கிருதம், இந்தி அல்லாத மொழிகளை சமமாக பாவிக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாரபட்சம் காட்டுவது தான் பிரதமர் மோடியின் தமிழ் பற்றாகும். 

தமிழர்களின் அடையாளம், நாகரீகம், பண்பாடு ஆகியவற்றை அழிப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. நாம் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், 3 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பெருமை கொண்ட பண்பாடு, நாகரீக அடையாளத்தை எந்த நிலையிலும் இழக்க முடியாது.  இதை அழிப்பதற்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதை முறியடிப்பதுதான் தமிழர்களின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். அதன்மூலமே தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக