வெள்ளி, 30 ஏப்ரல், 2021

பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்காது. உலகை இயங்க வைக்கும் பாட்டாளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சுழல்வதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் உலகத்திற்கு உள்ளது.- DR.S.ராமதாஸ்


 உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14-ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு.

பாட்டாளிகள் தான் இந்திய நாட்டின் முதுகெலும்பு ஆவர். அந்த முதுகெலும்புகள் இப்போது முறிந்து கிடக்கின்றன. கொரோனா வைரஸ் என்ற கொடிய கிருமி அனைத்தையும் தலைகீழாக மாற்றியிருக்கிறது.  கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் கிருமிகளால் தொழிலாளர்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் உயிரைப் பறிக்கும் கொரோனா, மறுபுறம் வாழ்வாதார இழப்பால் ஏற்பட்ட வறுமை என தொழிலாளர்களின் துயரம் பெருகிக் கொண்டே செல்கிறது.

இருளுக்குப் பிறகு ஒளி என்பது இயற்கை. பாட்டாளிகளைப் பொறுத்தவரை இருளுக்குப் பிறகு இரட்டை ஒளி என்பது புதிய இயற்கை. ஓராண்டுக்கும் மேலாக பாட்டாளிகளைப் பாடாய்படுத்திக்  கொண்டிருக்கும் கொரோனா வைரசை பாதுகாப்பு விதிகள், தடுப்பூசி ஆகிய இரட்டை ஆயுதங்களைக் கொண்டு நாம் விரட்டியடிக்கப் போகிறோம். அடுத்ததாக பாட்டாளிகளின் நாளான மே ஒன்றாம் தேதிக்கு அடுத்த நாள் பாட்டாளிகளுக்கு பெருமகிழ்ச்சியும், அதிகாரமும் அளிக்கும் செய்தி வெளியாகவிருக்கிறது.

பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்காது. உலகை இயங்க வைக்கும் பாட்டாளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சுழல்வதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் உலகத்திற்கு உள்ளது. அதை மதித்து பாட்டாளிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்கும்  லட்சிய பயணத்தின் தொடக்கமாக நடப்பாண்டின் பாட்டாளிகள் நாள் அமையட்டும் என்று மீண்டும் ஒரு முறை  உளமாற வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக