புதன், 21 ஏப்ரல், 2021

சாதி-மதப் பேதங்களற்ற சனநாயகத்தை சர்வாதிகாரமும், வன்முறையும், பாட்டாளி சாதிவெறியும், பார்ப்பனீய பாசிசமும், பாழும் சுடுசொற்களும் எக்காலத்திலும் வெல்லப் போவதில்லை. - சுப.உதயகுமாரன்


அறிவும், ஆற்றலும் மிக்க அருமைத் தம்பி திரு. மாரி செல்வராஜ் அவர்களின் ‘கர்ணன்’ படத்தில் ஒரு காட்சி வருகிறது. பொடியன்குளம் ஊருக்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து, ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அடித்து உதைத்து, வீடுகளை இடித்துச் சிதைத்து, தனியார் சொத்துக்களை எல்லாம் வகைதொகை இல்லாமல் சேதப்படுத்தி அழித்து, ஒரு காட்டு தர்பார் நடத்தும் அந்தக் காட்சி மனதை கசக்கிப் பிழிந்தது. திரையரங்கில் அமர்ந்திருந்த அந்த நேரத்தில் நான் கூடங்குளம் ஊரைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

பொடியன்குளம் போல ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே வாழும் ஊராக, மையநீரோட்டத்திலிருந்து வெகு தூரத்தில் ஒரு தீவு போல தனிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் ஊராக, ஆண்டுக்கணக்கில் தொடர் ஊடக வெளிச்சத்துக்கு உட்படுத்தப்படாத யாரும் அறிந்திராத ஓர் ஊராக இருந்திருந்தால், கூடங்குளம் இன்னும் மிக மோசமாகத் தாக்கப்பட்டிருக்கும்.

உண்மையில் காவல்துறையினர் கூடங்குளத்தின் மீது நடத்திய அந்தத் தாக்குதல் இடிந்தகரையின் மீது நடத்தப்படுவதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வீரமிக்கக் கூடங்குளம் இளைஞர்கள் தீரமிக்க பாலஸ்தீன மக்களின் ‘இன்டிஃபாடா’ (Intifada) முறைப் போராட்டம் ஒன்றைக் கையிலெடுத்து, காவல்துறையின் கவனத்தைத் திருப்பி, இடிந்தகரையைக் காப்பாற்றினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கூடங்குளத்தின் உள்ளூர் புவியியலை அறியாத வெளியூர் காவலர்களை நேரடியாக எதிர்கொண்டு, சில நேரங்களில் பின்னால் விரட்டிச் சென்று, பல வேளைகளில் சுற்றிவளைத்து, திசைதிருப்பி, திக்குமுக்காடச் செய்து, எளிதில் குழப்பி, எல்லா ‘இன்டிஃபாடா’ வித்தைகளையும் காட்டி விரட்டினார்கள்.

கூடங்குளம் அணுஉலைத் திட்டத்திற்கு எதிராக 2011--2014 காலக்கட்டத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடந்த நீண்டநெடியப் போராட்டம் மக்கள் எழுச்சிப் போராட்டமாகத்தான் துவங்கியது. எந்தவொரு தனி நபரோ, இயக்கமோ, கட்சியோ முன்னெடுத்தப் போராட்டம் அல்ல அது. கூடங்குளம் மாதா கோவில் திடலில் தன்னெழுச்சியாகத் திரண்ட கூடங்குளம் பெண்கள்தான் அந்த எழுச்சியைத் துவங்கி வைத்தவர்கள். அதே நாள் அதே நேரத்தில் இடிந்தகரையிலும் மக்கள் புரட்சி வெடித்துக் கிளம்பியது.

2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில், இரண்டு வார காலமாக ஜப்பான் நாட்டில் ஃபுகுஷிமா நகருக்குச் சென்று ஐந்து மாதங்களுக்கு முன்னால் நடந்திருந்த அணுஉலை விபத்தினை ஒரு சர்வதேசக் குழுவோடு சேர்ந்து பார்வையிட்டுவிட்டு. ஆகஸ்ட் ஆறாம் நாள் ஹிரோஷிமா நகரில் நடந்த அணுவாயுதப் போர் இரைகளின் நினைவஞ்சலி நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, நான் ஊருக்குத் திரும்பியிருந்தேன்.

தோட்டத்திற்கு போவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, கூடங்குளத்திலிருந்து ஓர் அழைப்பு வந்தது. அது என்னுடைய மொத்த வாழ்க்கையையும், என் குடும்பத்தினர் வாழ்வையும் சேர்த்துப் பிடுங்கியெடுத்து, எடுத்தெறிந்து, எறிந்துவீசி, கரைகளில்லா, காலமில்லா ஒரு போராட்டக்களத்தில் போடப் போகிறது என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

கூடங்குளத்துக்கு விரைந்தேன். மாதா கோவிலில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிவிட்டு, அங்கிருந்து இடிந்தகரைக்குச் சென்றேன். அங்கேயும் லூர்து மாதா கோவிலின் முன்புறமும், வடக்குப் பக்கமும் திரண்டிருந்த மக்கள் கூட்டங்களில் பேசினேன். அன்று துவங்கிய பந்தம் இன்றும் தொடர்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னால், ஏப்ரல் 19, 2021 அன்று மாலை நானும், இடிந்தகரைப் போராட்ட மேடையை ஒரு மேதையைப் போல ஒருங்கிணைத்த அருமைத் தம்பி மில்டன் அவர்களும் கூடங்குளம் சென்று ஒரு சாலையோரக் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம்.

அப்போது கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானப் போராட்டக்குழுவில் இடம்பெற்றிருந்த அன்பு அண்ணன் இராஜலிங்கம் அவர்களும், கூடங்குளம் ஊரைச் சார்ந்த தம்பி செல்வபாண்டி, கவிஞர் ரவி, தம்பி தாமஸ், மற்றும் (பெயர்களை மறந்தாலும் முகங்களை மறக்காத) பல தோழர்களும் வந்து பேசினார்கள்.

கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் சனநாயகத்தன்மை அதிகம் கொண்டவர்கள். யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்கத் தயங்காதவர்கள். வழிநடத்துவோரை வேலைக்காரர்களாக நடத்தும் சூட்சுமத்தையும், அப்படி நடத்தவேண்டியத் தேவையையும் நன்கு அறிந்தவர்கள். போராட்டக் காலத்திலேயே இந்த ஆரோக்கியமான அணுகுமுறையைப் பார்த்திருக்கிறேன், அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளித்தே வந்திருக்கிறேன்.

ஏப்ரல் 19 அன்றும் அந்த கேள்வி-பதில் அமர்வு நின்றபடியே நடந்தது. கோபதாபங்கள் இல்லாமல், உணர்ச்சிப் பெருக்குக்கு இடங்கொடாமல், மாந்தநேயத்தின் அடிப்படையில், அமைதியானக் குரலில், நாகரிகமான மொழியில், உண்மைத் தேடும் நோக்கோடு சாலையோரத்தில் நடந்த அந்த கலந்துரையாடலை, கருத்துப்பரிமாற்றத்தை வெகுவாக ரசித்தேன்.

யாரையும் யாரும் சொற்களால்கூடத் தாக்க முயற்சிக்கவில்லை; அங்கே நின்றிருந்தவர்கள் யாரும் யாரையும் அடித்து நொறுக்கவா அல்லது அழித்தொழிக்கவா என்று எந்தத் தலைமையிடமும் அனுமதி கோரவில்லை; அந்த தலைமைகளும் அமைதிக் காக்கவில்லை.

இப்படிப்பட்ட அழகான, அன்பான, ஆரோக்கியமான, சாதி-மதப் பேதங்களற்ற சனநாயகத்தை சர்வாதிகாரமும், வன்முறையும், பாட்டாளி சாதிவெறியும், பார்ப்பனீய பாசிசமும், பாழும் சுடுசொற்களும் எக்காலத்திலும் வெல்லப் போவதில்லை.

கூடங்குளம் சனநாயக விழுமியங்கள் கூடும் களம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக