திங்கள், 12 ஏப்ரல், 2021

உரம் விலை உயர்வை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்

 உரம் விலை உயர்வை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- E.R ஈஸ்வரன்

உரம் விலை வரலாறு காணாத அளவில் கட்டுப்பாடின்றி உயர்ந்திருப்பது விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடி கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மென்மேலும் துயரத்தை கொடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குகிறோம் என்று சொல்லிவிட்டு விவசாயிகளை கடனாளியாக்கும் நடவடிக்கைகளை தொடர்வது ஏற்புடையதல்ல. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. 

விவசாயிகளுக்கு நஷ்டம் மட்டுமே மிஞ்சுகிறது. பல நெருக்கடிகளை தாண்டி விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேறும் சூழலுக்கு மத்திய அரசு தள்ளுகிறது. உரம் விலை உயர்வால் சிறு, குறு விவசாயிகள் உரம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பயிரிடப்பட்ட பயிருக்கு சரிவர உரம் கொடுக்கவில்லை என்றால் எதிர்பார்க்கும் அளவிற்கு மகசூல் கிடைக்காது. இந்த சூழ்நிலையில் விவசாயிகள் உரம் வாங்குவதற்காக மீண்டும் கடனாளி ஆகிறார்கள்.

 விவசாயத்திற்கு உரம் எந்தளவு முக்கியம் என்று தெரிந்திருந்தும் உரத்தின் விலையை 60 சதவீதம் உயர்த்தியிருப்பது விவசாயத்தை அடியோடு அழிக்கும் செயல். மத்திய அரசு விவசாயிகளின் நலனில் எந்தவொரு அக்கறையும் காட்டவில்லை. உரம் விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை மத்திய அரசு புரிந்துகொண்டு விலை உயர்வை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக