ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

விவசாயிகள் சந்தை என்பது இன்றைக்கு அம்பானி, அதானி கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. - கே.எஸ். அழகிரி

 

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக கூட்டுவோம், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி உற்பத்தி செலவோடு அதில் 50 சதவிகிதம் கூடுதலாக சேர்த்து விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து பிரதமர் மோடி பதவிக்கு வந்தார். ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கின்ற வகையில் விவசாயிகளையோ, விவசாய சங்கங்களையோ கலந்து பேசாமல் மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் எதேச்சதிகாரமாக பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது. இந்த விவசாயிகளின் விரோத சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த நான்கு மாதங்களாக நெடுஞ்சாலைகளில் அமர்ந்து தொடர் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி தயாராக இல்லை.

இந்நிலையில், மத்திய அரசு டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியதால் உரங்களின் விலை மூட்டைக்கு ரூ.700 வரை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.1200-க்கு விற்ற டி.ஏ.பி., 50 கிலோ உரம் தற்போது ரூ.1900 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல, ரூ.900-க்கு விற்ற காம்ப்ளக்ஸ் உரங்கள் 20 : 20 ரூ.1350, ரூ.1175-க்கு விற்ற 10 : 26 : 26 உரம் ரூ.1775, ரூ.900-க்கு விற்ற 15 : 15 : 15 உரம் ரூ.1500, ரூ.1200-க்கு விற்ற 12 : 32 : 16 உரம் ரூ.1800 என விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து விவசாயத் தொழிலையே விட்டு வெளியேறுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தின் காரணமாக அனைத்து உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சியில் அமர்ந்ததும் மானியங்களை ஒழிப்பதில் பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்தி வந்தார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவிற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வழங்கி வந்த மானியத்தை முற்றிலும் ஒழித்தார். ஏழை, எளியவர்கள் பயன்படுத்துகிற மண்ணெண்ணெய் மானியத்தை ரத்து செய்தார். தற்போது, உரங்களுக்கான மானியத்தை ரத்து செய்ததால் உரத்தின் விலை கடுமையாக உயர்ந்து விவசாயிகளின் உற்பத்தி செலவு கூடியிருக்கிறது. அதேநேரத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளை பொருட்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டங்களால் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் விளை பொருட்களை என்ன விலைக்கு விற்கலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், தற்போது இதை சந்தை முடிவு செய்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகள் சந்தை என்பது இன்றைக்கு அம்பானி, அதானி கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சில கார்ப்பரேட் தொழிலதிபர்களின் ஆதாயத்திற்கு தான் வேளாண் சட்டங்களே கொண்டு வரப்பட்டிருக்கிறது.

எனவே, விவசாயிகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிற பிரதமர் மோடி அரசுக்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக உரங்களின் விலையை குறைக்க வேண்டும். இல்லையென்றால், மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக