செவ்வாய், 27 ஏப்ரல், 2021

தமிழ்நாடு அரசு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கி, அதனை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்து, தமிழர் சிவ நெறிப்படி வழிபாடுகள் நடத்த வேண்டும்.

ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை  அரசுடைமையாக்க வேண்டும்!

1. மக்களின் இறைப்பற்றை ஜக்கி வாசுதேவ் தன்னல நோக்கில் பயன்படுத்தி, வணிகப் பெருங்குழுமமாக ஈஷா மையத்தைக் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி பகுதியில் நடத்தி வருகிறார். 

அந்நிறுவனம் தொடர்பாகப் பல புகார்கள் பல வழக்குகள்!

பழங்குடி மக்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களின் நிலங்களைக் கைப்பற்றியது, காட்டு உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படி வனப்பகுதியையொட்டி விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டியது போன்ற பல குற்றங்கள் ஜக்கி வாசுதேவ் மீது இருக்கின்றன.

தமிழ்ச் சிவநெறிக்கும், சிவ ஆகமங்களுக்கும் முரணான முறையில் தியான லிங்கக் கோயிலும், ஆதியோகி சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.கர்நாடகத்திலிருந்து வந்த ஜக்கி வாசுதேவ் தமிழ்நாட்டுச் சிவநெறி களுக்கும் வழிபாட்டு முறைக்கும் புறம்பாக ஈசனை மாற்றிச் செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஜக்கி வாசுதேவ், ஒரு போலிக் கவர்ச்சிக்காரர் என்பதற்கு அவரது “காவிரிக் கூக்குரல்” என்ற காவிரிக் கரையோர மரம் நடும் திட்டமே போதும். இத்திட்டத்தில் கர்நாடக அரசும் இணைந்திருப்பது போல் இவரும் இவரைச் சேர்ந்தவர்களும் தோற்றம் கொடுத்தார்கள். உடனே கர்நாடக அரசு மறுப்பு அறிக்கை கொடுத்து, “ஜக்கியின் காவிரிக் கூக்குரல் மரம் நட கர்நாடக அரசு ஓர் அங்குல நிலம் கூடக் கொடுக்கவில்லை” என்று கூறியது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் காவிரியில் தரவேண்டிய தண்ணீரைத் தமிழர்கள் கேட்க வேண்டாம்; காவிரியின் இரு கரைப் பகுதிகளிலும் மரங்களை நட்டால் 12 மாதங்களுமே கரைபுரண்டு வெள்ளம் ஓடும் என்று கயிறு திரித்து, தமிழர்களின் கவனத்தை மடைமாற்றுவதே ஜக்கியின் நோக்கம். தமிழர்களில் ஒரு சாரார் ஏமாந்தார்கள். ஆனால் கர்நாடகத்தில், இத்திட்டத்தைச் சொல்லி மோசடியாக 10,626/- கோடி ரூபாய் வசூலித்து விட்டார் என்று சிலர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். கர்நாடக உயர் நீதிமன்றம் ஜக்கியின் மீது அந்த ஊழல் வழக்கைத் தானே முன் வந்து நடத்திக் கொண்டுள்ளது.

அடுத்து, தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படுத்த ஐந்தம்சத் திட்டங்களை அறிவித்துள்ளார். ஜக்கி. போலி ஆன்மிகத்தோடு நிற்கவில்லை; உ.பி.யின் யோகி ஆதித்யநாத் போல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் திட்டம் தீட்டியுள்ளார் என்று தெரிகிறது. தமிழர்கள் ஏமாறக் கூடாது.

எனவே, தமிழ்நாடு அரசு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கி, அதனை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்து, தமிழர் சிவ நெறிப்படி வழிபாடுகள் நடத்த வேண்டும்.

2. இந்து சமய அறநிலையத் துறையைக் கலைத்துவிட்டு, அதன் பொறுப்பில் உள்ள 44,121 கோயில்களையும் “பக்தர்களிடம்” ஒப்படைக்க வேண்டும் என்று, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ச.க.வினரும், ஜக்கி வாசுதேவ், காஞ்சி சங்கராச்சாரியார் விஜய்யேந்திர சரஸ்வதி போன்றோரும் கோருகின்றனர்.

இந்துக் கோயில்களைக் கைப்பற்றிக் கொள்ள ஆரிய வர்ணாசிரம வாதிகள் செய்யும் தந்திரமே இந்து சமய அறநிலையத்துறை கலைப்புக் கோரிக்கை! இந்து சமய அறநிலையத் துறையைக் கலைக்கக் கூடாது என்பதைத் தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் தெளிவாகக் கூற வேண்டும்.

அ. இந்து சமய அறநிலையத் துறையின் பொறுப்பில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரங்கள் ஓதியே கருவறைப் பூசை, கலசக் குடமுழுக்கு, வேள்விச்சாலை மந்திரம் அனைத்தும் நடைபெற வேண்டும். கோயில்களுக்கு வருவோரில் விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டுமே சமற்கிருதம் ஓதி பூசை செய்ய வேண்டும்.

ஆ. தமிழ்நாடு அரசு கருவறைப் பூசை செய்வோர்க்குத் தமிழ் மந்திரப் பயிற்சி கொடுத்து அதில் வெற்றி பெற்றோர்க்குப் பட்டயமும் வழங்கியுள்ளது. அவர்கள் 207 பேர் வேலையின்றித் தவிக்கிறார்கள். அவர்களைக் கருவறைப் பூசகர்களாகத் தமிழ்நாடு அரசு பணியமர்த்த வேண்டும்.தமிழ்நாட்டில் சாதிப்பாகுபாடின்றி, தகுதி உள்ள இந்துக்களை அவரவர் தொடர்புடைய கோயில்களில் பூசகர்களாக அமர்த்துவதற்கு ஏதுவாக பல இடங்களில் தமிழ் அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளிகளைத் தமிழ்நாடு அரசு திறக்க வேண்டும்.

தமிழர்களே, தமிழர் ஆன்மிகம் காத்திட, 

தமிழ் மொழி காத்திட ஆர்ப்பாட்ட 

அறப் போராட்டத்தில் பங்கேற்பீர்!

சென்னையில் 13.04.2021 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் 08.05.2021 அன்று தஞ்சையில் முழுநாள் உண்ணாப்போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். ஆனால், அதன்பிறகு கொரோனா தொற்று தீவிரமடைந்ததையொட்டி அரசு ஞாயிறு முடக்கம், அன்றாடம் இரவு முடக்கம் போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது. எனவே, வெளியூர்களிலிருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்டு, ஊர் திரும்புவதற்கு வாய்ப்பில்லாமல் மறுநாள் (09.05.2021) ஞாயிறு முடக்கம் வருகிறது. இதனால், உண்ணாப் போராட்டத்தை தொடர் முழக்க ஆர்ப்பாட்டமாக மாற்றி, 18.05.2021 அன்று தஞ்சையில் நடத்துவது என்று தெய்வத் தமிழ்ப் பேரவை முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக