செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

மத்திய வங்கியின் மூலம் ‘டிஜிட்டல் ரூபாய்’ என்ற டிஜிட்டல் பணம் அறிமுகம் செய்வது பற்றிய அறிவிப்பு


 மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்  தனது பட்ஜெட் உரையில் 2022-23 நிதியாண்டிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும்; இந்த டிஜிட்டல் பணம், ப்ளாக்செயின் மற்றும் இதர வகை தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் வங்கி சேவை:

சமீப ஆண்டுகளில் டிஜிட்டல் வங்கிசேவை, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தல், நிதிசார் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இவ்வகையில் நாட்டின் 75வது ஆண்டு விடுதலைப் பெரு விழாவை ஒட்டி 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகளை நிறுவ வணிக வங்கிகள் முடிவு செய்துள்ளன என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

எந்தநேரமும்- எந்த இடத்திலிருந்தும் அஞ்சல் அலுவலக சேமிப்பு

2022ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் 100 சதவீதம் மையப்படுத்தப்பட்ட வங்கி சேவையை வழங்குவதாக மாற்றப்படும் என்ற அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிட்டார். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் நிதிசார்ந்த சேவைகளை பெற இது உதவி செய்யும்.

 டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறைக்கு கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியுதவி 2022-23 நிதியாண்டிலும் தொடரும் என்று நிதியமைச்சர் உறுதியளித்தார். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை அதிகமான அளவில் மேற்கொள்ள இது ஊக்கமளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக