வியாழன், 17 பிப்ரவரி, 2022

தமிழக நகரங்கள் காலநிலை அவசரநிலைப் பிரகடனத்தை வெளியிட வேண்டும். - DR.S.ராமதாஸ்

 தமிழக நகரங்கள் காலநிலை அவசரநிலைப் 

பிரகடனத்தை வெளியிட வேண்டும். - DR.S.ராமதாஸ்

உலகின் அனைத்து மக்களையும் அச்சுறுத்தும் மிகப்பெரிய கேடு புவிவெப்பமடைதலும் (Global Warming) அதனால் நேரும் காலநிலை மாற்றமும் (Climate Change) ஆகும். பெரும் வறட்சி, அனல் காற்று, பெரும் வெள்ளம், அதிவேக புயல், தண்ணீர் தட்டுப்பாடு, புதிய புதிய நோய்கள், பொருளாதார பாதிப்பு, வன்முறை எனப் பலப்பல பெரும் கேடுகளுக்கு புவிவெப்பமடைதல் காரணமாகும். இதனை எதிர்கொள்ளும் விதமாக இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், வங்கதேசம், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட உலகின் 18 நாடுகளும் 2100 நகராட்சிகளும் காலநிலை அவசநிலை பிரகடனங்களை செய்துள்ளன.

புவிவெப்பமடைதலால் அதிகம் பாதிக்கும் பகுதியாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் பல நகரங்கள் அண்மையில் பெருமழையை சந்தித்தன. கோடை காலத்தில் நகரங்களில் மிக அதிக வெப்பநிலை உயர்வை ஏற்படுத்தும் நகர்ப்புற வெப்பத்தீவு (urban heat island) விளைவு தமிழக நகரங்களில் உருவாகும் வாய்ப்பு உள்ளது. காலநிலை மாற்றப் பாதிப்புகள் வரும் ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டே செல்லும். எனவே, தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள நகர்புற உள்ளாட்சிகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான காலநிலை அவசரநிலைப் பிரகடனத்தை (Climate Emergency Declaration) வெளியிட வேண்டும். 

உலகமே ஒன்றிணைந்து ஒரே நோக்கத்தில் அவசரகால நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுபவத்தை கொரோனா பெருந்தொற்று கொடுத்துள்ளது. கொரோனாவைப் போன்று பலமடங்கு பெரிய ஆபத்து காலநிலை மாற்றம் ஆகும். 'புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க, உலகின் ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நிறுவனமும் அவசரநிலை நடவடிகைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் உலகினை தலைக்கீழாக மாற்ற வேண்டும்' என ஐநா அறிவியலாளர்கள் IPCC குழு எச்சரித்துள்ளது. இதே கோரிக்கையை ஐநா பொதுச்செயலரும் முன்வைத்துள்ளார்.

காலநிலை அவசரநிலை பிரகடனத்தை மத்திய மாநில அரசுகள், உள்ளாட்சி அரசுகள், பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் அறிவிக்க வேண்டும், அதனடிப்படையிலான  காலைநிலை செயல்திட்டங்களை (Climate Action Plan) ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் பசுமைத் தாயகம் அமைப்பின்  காலநிலை அவசரநிலை பிரச்சாரத்தை 2019 ஆம் ஆண்டில் நான் சென்னையில் தொடங்கிவைத்தேன். 

பசுமைத் தாயகம் சார்பில் பல ஊர்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விழிப்புணர்வு கூட்டங்களில் பேசினார். நாடாளுமன்றத்திலும் இக்கோரிக்கையை முன்வைத்தார். விழிப்புணர்வு காணொலிகளை வெளியிட்டார்.

காலநிலை அவசரநிலை பிரகடனம் வெளியிடுதல் என்பது புவிவெப்பமடைதல் ஒரு பேராபத்து என்பதை அங்கீகரித்து, அதனை தடுக்கவும் சமாளிக்கவுமான நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள கொள்கையளவில் ஒப்புக்கொள்வது ஆகும். அந்த வகையில்;

1. தமிழ்நாடு சட்டமன்றமும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளும், கிராமப்புற உள்ளாட்சிகளும், பொது அமைப்புகளும், பெருநிறுவனங்களும் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை (Climate Emergency Declaration) அறிவிக்க வேண்டும்

2. புவிவெப்பமடைதலை தடுக்கவும், சமாளிக்கவுமான திட்டங்களை உள்ளடக்கிய காலநிலை செயல்திட்டத்தை (Climate Action Plan) ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்க வேண்டும்.

3. அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி, காலநிலை செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இயற்கை பேரழிவை தடுத்து, தமிழ்நாட்டில் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு நீதியான, செழிப்பான, பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது.

காலநிலை அவசரநிலை பிரகடனத்தை அறிவிப்போம்.

பூவுலகம் அழியாமல் காப்பாற்றுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக