புதன், 9 பிப்ரவரி, 2022

பள்ளிப் பாடப்புத்தகங்களில் விடுதலைப் போராட்டத்திலிருந்து வீரத்தின் கதைகளையும், சமூக நல்லிணக்கத்தையும் விவரிக்க வேண்டும்.- குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு


 தேசத்தின் போற்றப்படாத நாயகர்களை கவுரவிக்கவும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை அறியவும் பள்ளிக் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் நாகரீகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், விடுதலைப் போராட்டத்திலிருந்து சமூக நல்லிணக்கத்தை விவரிக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

கற்பித்தலின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி உரையாற்றிய திரு நாயுடு, “இந்த நாடு அறிந்துள்ள வீரமிக்க நாயகர்களின் கதைகளை நாம் நமது குழந்தைகளுக்குக் கற்றுத்தரவேண்டும். நமது புகழ்மிக்க வரலாறு நமது தாழ்வு மனப்பான்மையை வீழ்த்த வேண்டும்;   வரலாறு நமக்கு கற்றுத்தருகிறது, அறிவை பிரகாசிக்க வைக்கிறது” என்று கூறினார்.

‘நாம் சுதந்திரத்தை  அடைந்து பிறகும் கூட,  காலனிய சிந்தனை நமது கல்வி முறையில் நீடிப்பது’ குறித்து திரு நாயுடு கவலை தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை வெற்றிகரமாக அமலாக்கப்படும்போது இது அகற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மகாராஷ்ட்ரா கல்வி சங்கத்தின் 160 ஆண்டுகள் வரலாறு குறித்த நூலினை குடியரசு துணைத்தலைவர் மாளிகையில், இன்று அவர் வெளியிட்டார். 1860-ல் புனேயில் இந்த சங்கம் நிறுவப்பட்டது  என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் அமைக்கப்பட்ட முதலாவது தனியார் கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று என்றார். 

கல்வித்துறையில் 21-ஆம் நூற்றாண்டின் தன்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி குடியரசு துணைத்தலைவர், தேசியக் கல்விக் கொள்கை 2020 மாநிலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால் முழுமையான ஆர்வத்துடன் அமலாக்கப்பட வேண்டும் என்றார்.

வகுப்பறைகளில் டிஜிட்டல் பயன்பாட்டையும், நவீன கருவிகளையும், மைக்ரோ வகுப்புகளையும் பெருந்தொற்று தேவையானதாக மாற்றி விட்டது என்று குறிப்பிட்ட திரு நாயுடு, இனிமேலும், கல்வி முறை பழைய நிலையிலேயே நீடிக்க இயலாது என்றும் தனியார் மற்றும் பொதுக்கல்வி நிறுவனங்கள் புதிய நிலைமைகளை  ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

“தொழில் சார்ந்த பாட வகுப்புகளும் தொலைதூர கல்வியும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் வழங்கப்படுவது புவியியல் சார்ந்த தடைகளை நீக்கி தொலைதூர பகுதிகளை அடைவதற்கு உதவும்”  என்று  திரு நாயுடு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்ட்ர கல்வி சங்கத்தின் நிர்வாகக் குழுத்தலைவர் திரு ராஜீவ் சஹஸ்ரபுத்தே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக