செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

ஆளுநருக்கு எதிரான திமுகவின் செயல்பாடுகள் அனைத்தும், முழுக்க முழுக்க, சந்தர்ப்பவாத, சுயநல நடவடிக்கை என்பது தெளிவாகிறது. - வானதி சீனிவாசன்



 தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் அங்கம்தான் ஆளுநர்

அரசியல் சட்டப்படிதான் ஆளுநர் செயல்பட முடியும்.- வானதி சீனிவாசன்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆளுநர் மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. "மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கட்டுப்படுத்த நினைக்கிறார். மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட, சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் ஆளுநரின் வேலை" என்று திமுகவினரும், அவர்களது ஆதரவாளர்களும் பேசி வருகின்றனர்.

"குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர், முதலமைச்சர், மாநில அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் இவர்களில் நம் நாட்டில் அதிக அதிகாரம் உடையவர் யார்?" என்ற கேள்வி சட்டக் கல்லூரியில் படிக்கும்போது எனக்குள் எழுந்தது.  "நம் நாட்டில் அரசியல் சட்டத்திற்கும் தான் அதிகாரம். யாராக இருந்தாலும் அரசியல் சட்டம் என்ன சொல்கிறதோ, அதன்படி மட்டுமே செயல்பட முடியும். முடிவுகள் எடுக்க முடியும். சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கு உள்ளது. உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளும் சட்டமாகும்" என்று எனது பேராசிரியர்கள் தெளிவுபடுத்தினர். சட்டப் படிப்பை முடித்ததும், வழக்கறிஞராகப் பணியாற்ற தொடங்க பிறகு இதுபற்றி பல தெளிவுகளைப் பெற்றேன்.

மத்திய அரசு, மாநில அரசு, குடியரசுத் தலைவர், ஆளுநர் என யாராக இருந்தாலும் அரசியல் சட்டப்படியே செயல்பட முடியும். தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களும் அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, ஆளுநருக்கான அதிகாரங்கள் படியே செயல்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவை ஏற்கவும், மறு பரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படியே, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் இரண்டாவதை ஆளுநர்  தேர்வு செய்திருக்கிறார்.

இதற்கு 142 நாள்கள் ஏன் கால தாமதம் செய்ய வேண்டும் என்ற கேள்வியை திமுகவினர் எழுப்பியுள்ளனர். நீட் விலக்கு மசோதா என்பது புதிது அல்ல. கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, இதே நீட் விலக்கு மசோதாவை, அன்றைய ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் அவர்கள், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு  அனுப்பினார். விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு அதனை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார்.

 ஏற்கனவே, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட மசோதா என்பதால்தான், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநர் அதிகமான நாள்களை எடுத்துக் கொண்டார் என நினைக்கிறேன். இதுகுறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்திருப்பார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, நியமிக்கப்பட்டவராக ஆளுநர் இருக்கலாம். ஆனால், ஆளுநரை நியமிக்க பரிந்துரை செய்யும், மத்திய அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான். எனவே, ஆளுநரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் அங்கம்தான். அதனால்தான், ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்களை சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வரையறுத்துள்ளார். எனவே, மாநில அரசின் செயல்பாடுகள், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டியது ஆளுநரின் கடமை.

திமுக மாநில கட்சியாக இருந்தாலும், 1989 – 1991, 1996 –1998, 1999 – 2013 கால கட்டங்களில்  சுமார் 17 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அப்போதெல்லாம் ஆளுநரின் அதிகாரம் குறித்தோ, "ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை" என்றோ திமுக பேசவில்லை. கவலையும்படவில்லை. 2001–2003, 2011–2013 என சுமார் 6 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழகத்தில் அதிமுக அரசு இருந்தது. அப்போது ஆளுநரைப் பயன்படுத்தி, அதிமுக அரசுக்கு தொல்லை கொடுத்தது பற்றியும், சட்டமன்றத்தில் அதிமுக அரசு நிறைவேற்றி கேபிள் டிவி சட்டத்தை ஆளுநர் மூலம் தடுத்து நிறுத்தியதையும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இதன் மூலம், ஆளுநருக்கு எதிரான திமுகவின் செயல்பாடுகள் அனைத்தும், முழுக்க முழுக்க, சந்தர்ப்பவாத, சுயநல நடவடிக்கை என்பது தெளிவாகிறது. எப்போதல்லாம் தங்கள் அரசுக்கும், கட்சிக்கும் பிரச்சினை வருகிறதோ, அப்போதெல்லாம், அதிலிருந்து தப்பிக்கவும், மக்களைத் திசை திருப்பவும் மாநில சுயாட்சி, சமூக நீதி, இட ஒதுககீடு, ஆட்டுக்கு தாடி, மதச்சார்பின்மை என்றெல்லாம் திமுகவினர் பேசத் தொடங்குவார்கள். இப்போதும் அதுதான் நடக்கிறது. இது தகவல் தொழில்நுட்ப யுகம். நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தையும் மக்கள் அறிவார்கள். எனவே, இனியும் திமுகவால் மக்களை ஏமாற்ற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக