செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட வரைவினை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கே திருப்பி அனுப்பியது வரலாற்றுக் குறிப்பாகும்.- கி.வீரமணி


ஆறே நாள்களில் புயல் வேக நடவடிக்கையின் மூலம் சட்டப்பேரவையில் 'நீட்' விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது மற்ற மாநிலங்களுக்குப் புதிய வெளிச்சம்!

‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது அகிலத்திற்கும் அறிவிக்கப்பட்டதற்குப் பாராட்டுகள்- வாழ்த்துகள்!

எல்லையற்ற மகிழ்ச்சி!

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்ட நடவடிக்கைகளை நேரலையில் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

சமூகநீதி, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமை, மாநில உரிமை - மக்களாட்சி உரிமை போன்ற பல தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியதாக மாண்புமிகு முதலமைச்சரின் உரையும், ஒருமித்த கருத்துகளை வழங்கிய மாண்பமை சட்டமன்ற கட்சித் தலைவர்களின் உரைகளும் அமைந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட வரைவினை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி  ஆளுநருக்கே திருப்பி அனுப்பியது வரலாற்றுக் குறிப்பாகும்.

தமிழ்நாட்டினர் நெஞ்சங்களில் உறைந்தனர் - நிறைந்தனர்!

திராவிடர் இயக்கம்- நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர்களும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் மறையவில்லை; வாழ்பவர்களே என்பதன் அடையாளம் இது!  

நம் கொள்கை லட்சியங்களாக - தமிழ்நாட்டினர் நெஞ்சங்களில் உறைந்தனர் - நிறைந்தனர் என்பதை நமது முதலமைச்சர் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை தெளிவாகப் பிரதிபலித்தது.

மறுமுறை காலந்தாழ்த்தாமல் - புயல் வேகத்தில் - சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் - சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இவற்றை ஆறே நாள்களில் கூட்டி - ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது ‘அதிசயம் ஆனால், உண்மை!’ என்று வியக்கும் வண்ணம் வேக நடவடிக்கைகளாக நடந்தன.

சமூகநீதி, மாநில உரிமைக் கொள்கைகளை மீண்டும் பாய்ச்சலோடு வேகமெடுக்கச் செய்தமைக்கு ஆளுநரின் அரசமைப்புச் சட்ட மீறிய செயல் தூண்டுதலாய் அமைந்துள்ளது.

தமிழ்நாடு, மற்ற மாநிலங்களுக்கு ஒரு புதிய வெளிச்சம்!

வரவேற்கிறோம் - பாராட்டுகிறோம்!

மக்களாட்சி முறையோடும், மாண்போடும் உரிமைக் குரல் எழுப்பி, உறவுக்குக் கை கொடுக்கும் உயர் மனிதர்கள் ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது - அகிலத்திற்கும் அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறோம் - பாராட்டுகிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக