திங்கள், 7 பிப்ரவரி, 2022

நித்தி ஆயோகின் ஃபின்டெக் ஓபன் (Fintech Open) உச்சிமாநாட்டை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.


 ஃபின்டெக் (நிதி சார்ந்த தொழில்நுட்பம்) முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக ஃபோன்பே, ஏடபிள்யூஎஸ், இஒய் ஆகியவற்றுடன் இணைந்து பிப்ரவரி 7 முதல் 28 வரை 3 வார கால இணையவழியிலான  ‘ஃபின்டெக் ஓபன்’ உச்சி மாநாட்டிற்கு நித்தி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது.  இந்த மாநாட்டை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் முன்னிலையில்  இன்று  தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்  திரு அஸ்வினி வைஷ்ணவ், மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், கோவின், யுபிஐ போன்ற சுகாதாரம், பொருள் போக்குவரத்து, இதர துறைகளுக்கான இணையதளங்களை உருவாக்குவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  அரசு முதலீட்டைப் பயன்படுத்தி பொதுவான இணைய தளங்கள் உருவாக்கப்படும் போது ஏராளமான தனியார் நிறுவனங்களும், புதிய தொழில்களும், புதிய தீர்வுகளை உருவாக்குவதில் இணைய முடியும் என்றார். உதாரணமாக இன்று 270 வங்கிகள் யுபிஐ-யுடன் இணைக்கப்பட்டுள்ளன. பல தொழில் நிறுவனங்களும், புதிய தொழில்களும் இணைய தளங்களை உருவாக்கியிருப்பது நாட்டின் ஃபின்டெக் ஏற்பு விகிதத்தை அதிகரிக்க உதவி செய்துள்ளது. அதாவது உலகளவில் இந்தியா அதிகபட்ச அளவாக 87 சதவீதம் பயன்பாட்டைக் கொண்டுள்ளது.

நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் பேசுகையில், இந்தியாவில் டிஜிட்டல் மயம் அதிகரித்திருப்பது நிதிச் சேவைகளை மக்கள் அதிக அளவிலும், எளிதாகவும் பெறுவதற்கு சான்றாக உள்ளது. இது வாடிக்கையாளர்களின் நிதி சார்ந்த நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி ரொக்கம் என்பதிலிருந்து இ-வேலட், யுபிஐ என்பதற்கு மாற செய்துள்ளது என்றார்.

இணையவழியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின் கருத்தரங்குகளில் நித்தி ஆயோகின் தலைமை நிர்வாகி அமிதாப் காந்த் மற்றும்  நந்தன் நீல்கேனி,  குணால் ஷா, யஷீஷ் தாஹியா,  அனுஜ் குலாதி, வருண்துவா, நித்தின் காமத், உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் உரையாற்ற உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக