ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


 திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

தீர்மானம் - 1:

 

    இளமைக் காலம் தொட்டு, இன்று வரையிலும் ஓயாத உழைப்பால், உறுதிமிக்கக் கொள்கைப் பிடிப்பால், கடைக்கோடி தொண்டனைப் போல் கழகக் கொடியை கையிலேந்தி பிரச்சாரம், நாடகங்களை நடத்தி இளைஞர்களை ஒன்றிணைத்து, கழகப் பணியைத் தன்னுடைய 15 வயதில் தொடங்கி, நெருக்கடிக் காலக் கொடுமைகளை (மிசா) சந்தித்து, உயிரை துச்சமெனக் கருதி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதைப் போல், வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்! என்ற முழக்கத்திற்குரிய உன்னதத் தொண்டனாய், தனது தியாகத்தால் அரசியல் வாழ்வைச் செதுக்கி, 50 ஆண்டுக் கால அரசியல் வாழ்வில் தோல்விகளைக் கண்டு துவளாமல், வெற்றிகளைக் கண்டு இறுமாப்புக் கொள்ளாமல், அனைவரையும் அன்பால் கட்டி அரவணைத்து, தான் கழகத் தலைவராய் பொறுப்பேற்ற நாள் முதல் கண்ட தேர்தல்களெல்லாம் வெற்றி முகமாய்க் கழகத்தைக் கொண்டு சென்று நம்மைத் தலைநிமிர வைத்திருக்கும் தன்னிகரில்லா தலைவர்; தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு பெற்று, ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழர்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு ஆகியவற்றின் நலனிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஓய்வறியமால் உழைத்துக் கொண்டிருக்கும் உன்னத முதல்வர், இந்தியாவிலுள்ள மாநில முதலமைச்சர்களில் சிறந்த முதல்வர் என்ற பாராட்டுக்களைப் பெற்றிருந்தாலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலம் என்று அழைக்கும் வரை நான் ஓயாமல் உழைப்பேன் என்று உழைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய முதல்வர், கழகத் தலைவர் 69-வது பிறந்த நாள் (01-03-2022) விழாவை சிறப்பாகவும், மக்களுக்குப் பயனுள்ளதாகவும் கொண்டாடிடும் வகையில், கழக மாணவர் அணி சார்பில் கழக இரு வண்ண கோடியேற்றி, எளியோர்களுக்குப் பசியாற்றும் முகாம்கள், வேட்டி, சேலை வழங்குதல், மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், கல்வித் தொகை வழங்குதல் உள்ளிட்ட உதவி செய்தல், விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துதல், விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துதல், அரசியல் அறிவுத் தேடலுக்கான கருத்தரங்குகள், கவியரங்கம், பட்டிமன்றங்கள் நடத்துதல், மருத்துவ முகாம்களை நடத்துதல், இரத்த தான முகாம்களை நடத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல் போன்ற பணிகளைக் கழக மாணவர் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தங்கள் பகுதியில் நடத்திட வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.

தீர்மானம் - 2:

      முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, உலக, இந்திய, தமிழக அரசியல் வரலாற்று நிகழ்வுகளோடு ஒன்றிணைத்து நமக்கு வழங்கிய “நெஞ்சுக்கு நீதி” வாழ்க்கை வரலாற்று நூல் போல, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு சிந்தனை, மொழி உணர்வு, பெண் உரிமை, மாநில சுயாட்சி, மதநல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை இந்தியத் திருநாட்டில் நிலை நாட்டிட வேண்டுமென்று எண்ணுகிற - நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தை வழிநடத்தும் தாயுள்ளம் கொண்ட கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின், நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தைப் பற்றியும், சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கண்ட போராட்டக் களங்களைப் பற்றியும், பொது வாழ்க்கையின் பயணத்தைப் பற்றியும், “உங்களில் ஒருவன்” - என்னும் நூலாக எழுதியிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.  மேலும், நம் தலைவரின் வரலாற்றை அறிவதனால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துக்கள், லட்சியங்கள், கொள்கைகள் ஆகியவற்றை ஒருசேர அறிந்திடும் நூலாக இந்நூல் அமையும். 

      அந்த நூலின் முதல் பகுதி வெளியீட்டு விழா, வரும் பிப்ரவரி 28 அன்று, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருக்கிறது.  இந்நூலினை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய திரு.ராகுல் காந்தி அவர்கள் வெளியிட இருக்கிறார். 

       நிகழ்ச்சியில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அனைந்திந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.  அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தி.மு.க. மாணவர் அணியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமென்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 3:

      மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றம் அளித்த தீர்பின் மூலம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் 4000 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெறும் வகையில், மாணவர்களின் உரிமை மற்றும் நலன் காக்கும் வகையில் சட்டப் போராட்டம் மேற்கொண்ட சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல்கல் பதித்த வரலாற்று நாயகன் மாண்புமிகு கழகத் தலைவர்-தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு, அனைந்திந்திய மருத்துவம் பயிலும் மாணவர்களின் சார்பில் கழக மாணவர் அணியின் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம் - 4:

      புதுடெல்லியில், குடியரசு நாளன்று அலங்கார அணிவகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தியினை, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இடம் பெறச் செய்து, அவ்வூர்தியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என அறிவித்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகப் போர்க்களம் கண்ட பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், தீரன் சின்னலை, வ.உ.சிதம்பரனார், பாரதியார்,  இராணி வேலுநாச்சியார் உள்ளிட்ட எண்ணிலடங்கா விடுதலைப் போராட்ட தியாகிகளின் போராட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட்ட மாண்புமிகு கழகத் தலைவர்-தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு, அனைத்து தமிழர்களின் சார்பில், மாணவர் அணியின் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம் - 5:

      கடந்த 25.01.2022 அன்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்ட மாண்புமிகு கழகத் தலைவர்-தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள், “கருப்பு-சிவப்பு ரத்தத்தின் சூடு இருக்கும் வரை தமிழினத்தை யாராலும் வீழ்த்த முடியாது!” என்றும், “தாய்மொழியாம் தமிழை - பிறந்த தாய்நாட்டைக் காக்க உங்களை நீங்களே அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று மாணவச் சமுதாயத்தின் அனைத்துத் தம்பிமார்களையும், தங்கையரையும் உங்கள் அண்ணனாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்றும் எழுச்சிப் பேருரை ஆற்றியதற்குக் கழக மாணவர் அணியின் இக்கூட்டம் தனது கோடானகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக