திங்கள், 7 பிப்ரவரி, 2022

அதிமுக அதற்கு ஒத்துழைக்குமா? சட்டமன்ற கூட்டத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் பார்க்கத்தான் போகிறது.- கே.பாலகிருஷ்ணன்


நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் செயல், தமிழ்நாட்டு மக்களின் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக முதலமைச்சர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக ஒருங்கிணைத்த சட்டமன்ற கட்சி தலைவர்களுடைய கூட்டத்தை அதிமுக புறக்கணித்துள்ளது.

ஆனால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ஆளுநரின் செயலை ஆதரித்துக் கொண்டே, 'நீட் தேர்வு ரத்து செய்வதில் அதிமுக உறுதியாக உள்ளது' என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது எதற்காக இந்த இரட்டை வேடம் என்ற கேள்விதான் எழுகிறது.

நீட் தேர்வினை தமிழ்நாட்டின் மீது திணிக்க வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு, அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளார்கள். ஆனால், அதிமுக தனது நடவடிக்கையை, தமிழக நலனை விடவும், அமித்ஷாவுக்கு சேவகம் செய்வதே முக்கியம் என்று எடுத்துள்ளது. அதன் விளைவுதான் இந்த அந்தர்பல்ட்டியாகும்.

சட்டமன்றத்தில் மீண்டும் ஒருமித்த ஆதரவுடன் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் அனுப்ப வேண்டும் என்பதே தமிழக மக்களுக்கு செய்யும் நியாயமாக இருக்கும். ஆனால் அதிமுக அதற்கு ஒத்துழைக்குமா? அல்லது அந்த நாளிலும் இதே போன்ற நாடகத்தை நடத்தி தன்னையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றுமா? 

வரும் 8 ஆம் தேதி, சட்டமன்ற கூட்டத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் பார்க்கத்தான் போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக