வெள்ளி, 14 டிசம்பர், 2018

எஸ்.பி. வேலுமணியின் ஊழல் "அச்சம் - நாணமுமின்றி தலைவிரித்தாடுகிறது

எஸ்.பி. வேலுமணியின் ஊழல் "அச்சம் - நாணமுமின்றி தலைவிரித்தாடுகிறது


உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட, உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியின் ஊழல், சென்னை மாநகராட்சியில் எவ்வித ச்சம் - நாணமுமின்றி தலைவிரித்தாடுவது அதிர்ச்சியளிக்கிறது. ரூ.740 கோடி மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல், அமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் கைகோர்த்து அமைத்துள்ள கூட்டணியை உறுதி செய்திருக்கிறது.
சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழும், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்புக் கழக நிதியின் கீழும் நடைபெற வேண்டிய பணிகளுக்கான டெண்டர்களில் நிகழ்ந்துள்ள வரலாறு காணாத மோசடியும், முறைகேடுகளும் அதிமுக அரசின் “கமிஷன், கலெக்சன், கரெப்ஷன்” என்ற ஊழல் சாக்கடை நிரம்பிய நிர்வாகத்திற்கு சான்றாவணமாக நிற்கிறது.
சென்னை மாநகராட்சி டெண்டர்களில் சிண்டிக்கேட் அமைத்து ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் டெண்டர் போட்டுக் கொண்டுள்ளார்கள்; அந்த டெண்டர்கள் சென்னை மாநகராட்சி விலைப்பட்டியலை விட 30 முதல் 50 சதவீதம் வரை அதிகமாக உள்ளது.
ஆதாரபூர்வமான ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிமுக அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் ஊழல் புகார் என்றால் அஞ்சி நடுங்கி பதுங்கிக் கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி ஊழலை மறைத்துக் கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் இப்போது இந்த மெகா டெண்டர் ஊழலையும் மூடி மறைக்க உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு துணை போகிறார். “சென்னை மாநகராட்சியில் உள்ள விஜிலென்ஸ் அமைப்பை கூண்டோடு கலைக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்து தடையுத்தரவு பெற்றது இப்படி சென்னை மாநகராட்சியில் கொள்ளையடிக்கவா? உள்ளாட்சித்துறை அமைச்சரின் ஊழல்களை “பட்டுக்கம்பளம்” போர்த்தி மறைக்கவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆகவே, 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி பணிக்கான டெண்டர்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை எவ்வித தாமதமும் இன்றி நடவடிக்கை எடுத்து, ஊழலுக்குக் காரணமான மாநகராட்சி அதிகாரிகள், துறை அமைச்சர் திரு வேலுமணி - இந்த ஊழலை இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாநகராட்சி “விஜிலென்ஸ் அதிகாரிகள்” அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தவறினால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக