வெள்ளி, 14 டிசம்பர், 2018

ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக! வைகோ அறிக்கை

ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்புக!வைகோ அறிக்கை



காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 276 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 
ஆதிதிராவிடப் பள்ளியாக இருந்தபோதிலும் ஏனைய எல்லாம் சமூகத்து பிள்ளைகளும் இணைந்து பயிலும் பொதுப்பள்ளியாக விளங்கி வருகின்றது. இந்த பள்ளிக்குப் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அருகாமையில் உள்ள கடம்பாடி ஊராட்சி, குன்னத்தூர் ஊராட்சியைச் சார்ந்த மாணவர்களும் இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை 91 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் 5; ஆனால் பணியாற்றுவது ஒரே ஓர் ஆசிரியர் மட்டும்தான்.
6-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பு வரை 137 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் 9; ஆனால்  பணியாற்றுவது ஒரே ஓர் ஆசிரியர் மட்டும்தான்.
11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை 48 இருபால் மாணவர்கள் பயின்று வருகின்றனர்; இவ்வகுப்புகளுக்கு 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் போதுமான ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை.
வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணினி, உடற்கல்வி, ஆய்வுக் கூடங்கள், நூலகம், விளையாட்டுத் திடல், கழிவறைகள் இவை அனைத்தும் ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்திட வேண்டும். தேர்வுகள் நெருங்கி வருகின்ற வேளையில் போதுமான ஆசிரியர்களை உடனடியாக பணி அமர்த்திட வேண்டுகின்றேன்.
கல்பாக்கம் அணு உலை சுற்றுச்சுவர் அருகாமையில் அமைந்துள்ள இந்தப் பள்ளிக்கு எந்தப் பயனும் இல்லை என்பது தெளிவாகிறது. அணு உலை அமைவதற்கு நிலம் கொடுத்த சுற்றுப்புற கிராம மக்களுக்கு மக்கள் நலத் திட்டங்களைச் செய்து வருவதாக மத்திய அரசு சொல்வது இதன் மூலமாக பொய்த்துப்போய் உள்ளது.
மேலும் காலம் தாழ்த்திடாமல் போர்க்கால அடிப்படையில் போதுமான ஆசிரியர்கள் பணியிடங்களை நியமித்திட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக