வெள்ளி, 14 டிசம்பர், 2018

கிராம நிர்வாக அலுவலர் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

கிராம நிர்வாக அலுவலர் கோரிக்கைகளை நிறைவேற்றுக!

தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்!



தமிழகமெங்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த டிசம்பர்10 முதல் இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
பணிநியமனம், மாவட்ட ரீதியான மாற்றல், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் தமிழக அரசு செவி சாய்க்காததால் இப்போது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் இறங்கி உள்ளனர். அவர்களது போராட்டத்தால் பொது மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டு பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
கணினி வசதி உள்ளிட்ட அலுவலக கட்டமைப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற அவர்களது கோரிக்கை மிகவும் நியாயமானது. அது போலவே பெண்கள் அதிகமாகப் பணியில் இருப்பதால் பணியிடமாற்றக் கொள்கையில் அதற்கேற்ப மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கூட நியாமானது தான். இப்படியான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது தமிழக அரசுக்குக் கவுரவமானது அல்ல.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாமல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது எளிதானது அல்ல. எனவே, தமிழக அரசு அவர்களது போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுமாறு வலியுறுத்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக