செவ்வாய், 4 டிசம்பர், 2018

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப் பட்டியலை கைப்பற்றிய வழக்கு

தேர்தல் ஜனநாயக நெறியின் நெஞ்சில், அதிமுக அரசு கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறது



சென்னை - ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வைத்திருந்த “பணப் பட்டியலை” வருமான வரித்துறை கைப்பற்றிய வழக்கு விசாரணையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் திசைதிருப்பி பெரிதும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


7.4.2017 அன்று அமைச்சர் திரு விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து “பணப் பட்டியல்” கைப்பற்றப்பட்டு, அந்த விவரங்கள் வருமான வரித்துறையால் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டது. அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முதலமைச்சர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மாநகர போலீஸ் கமிஷனருக்குக் கடிதம் எழுதியது. இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு சத்யநாராயணா மற்றும் மாண்புமிகு சேஷசாயி ஆகியோர் தலைமையிலான அமர்வு, சென்னை கிழக்குப் பகுதி இணை ஆணையர் இந்த வழக்கு விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.

இந்திய தண்டனைச் சட்டம் 171B-யின் கீழான இந்தப் புகாரை மாஜிஸ்திரேட் அனுமதியுடன்தான் போலீஸ் விசாரிக்க வேண்டும் என்பதால், 23 ஆவது பெருநகர மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற்று, சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதில் தேர்தல் ஆணையம் தெரிவித்த அமைச்சர் திரு விஜயபாஸ்கர் பெயரும், பணப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயரும் மறைக்கப்பட்டது.

இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் தொடர்பே இல்லாத “பி.எம். நரசிம்மன்” என்பவர் தனி நீதிபதியிடம் ஒரு வழக்கைத் தொடுத்து, பெருநகர மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையும் மறைத்து, அதிமுக அரசு தனி நீதிபதி முன்பு வாதாடிய அலங்கோலம் நடந்திருக்கிறது; அற்பப் பொய்கள் அரங்கேறியிருக்கின்றன.

போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர், தன் பெயரிலோ தன் அமைச்சர்களின் பெயரிலோ வழக்கு வந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது என்பதையும் தனி நீதிபதியிடமிருந்து மறைத்து, எப்.ஐ.ஆரை ரத்து செய்ய “சதித்திட்டம்” தீட்டியிருப்பது திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு மருது கணேஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது இன்று உயர்நீதிமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது; தேர்தல் ஜனநாயக நெறியின் நெஞ்சில், அதிமுக அரசு கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யும் “பணப்பட்டியல்” தொடர்பான புகாரில் செய்யப்பட்டுள்ள முறைகேடுகளுக்கு காரணமாக இருக்கும் முதலமைச்சர், துணை போன போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள், சம்பந்தமே இல்லாமல் வழக்குப் போட்டவர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். மேலும், வருமான வரித்துறையின் அறிக்கைப்படியான புகாரின் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய தேர்தல் ஆணையமே பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக