வெள்ளி, 14 டிசம்பர், 2018

உயிரினும் மேலான தலைவர் கலைஞர்

“உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்கள் நிலையாக நம் நெஞ்சில்! சிலையாக அறிவாலயத்தில்!”

- மு.க.ஸ்டாலின்


நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
வார்த்தைகளில் அடக்கி விட முடியாது தலைவர் கலைஞரின் தனிப்பெரும் வரலாற்றை! வடிவங்கள் என்னென்ன உண்டோ அத்தனையிலும் அவரது பெருமைகளை எடுத்துக் கூறினாலும் மேலும் ஏராளமானவை எஞ்சியிருக்கும். இந்தியத் துணைக் கண்டம் இதுகாறும் கண்டிராத ஈடு இணையற்ற தனித்துவமான தலைவர். தமிழினத்தின் தலைவர் – முத்தமிழறிஞர் - 80 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் - அரை நூற்றாண்டுக்காலம் தமிழ்நாட்டின் அரசியலை தன் விரலசைவுக்கேற்ப விசையேற்றிச் சுற்றிச் சுழல வைத்தவர் - இந்திய அரசியலில் இக்கட்டுகள் ஏற்பட்டபோதெல்லாம் தன் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தால் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர் - பல குடியரசுத் தலைவர்களையும் பல பிரதமர்களையும் உருவாக்கியவர்.
13 சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொண்டு தோல்வியே காணாமல் வெற்றிகளைக் குவித்து சரித்திரம் படைத்தவர். தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை பொறுப்பேற்று 19 ஆண்டுகள் ஆட்சி செய்து, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களை உருவாக்கித் தந்தவர். 14 வயதில் தமிழ்க்கொடி பிடித்து இனமான முழுக்கத்துடன் சமூக நீதி காக்கக் களமிறங்கி 95 வயதிலும் தளராமல் போராடி, மரணத்திலும் தனக்கான இடஒதுக்கீட்டைப் பெற்று சமூக நீதியைக் காத்த போராளி.
எழுத்தாளர் – கவிஞர் – பேச்சாளர் – பத்திரிகையாளர் – பாடலாசிரியர் – கதாசிரியர் - திரைப்பட வசனகர்த்தா - இயக்கப் பிரசார நடிகர் எனப் பன்முக ஆளுமைகொண்ட படைப்பாளி என உலகில் வேறெவரும் தொடாத உயரங்களைத் தொட்ட ஒரே தலைவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
அந்த மாபெரும் தலைவர் மறைந்தாலும் அவர் கட்டிக்காத்த இயக்கமும் அதன் கொள்கைகளும், அவர் உருவாக்கித் தந்த திட்டங்களின் பலன்களும், சட்டங்களின் விளைவுகளும் சாதனை வைரங்களாக சதா ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த வைரங்களை மணிமுடியில் பதிப்பது போல - அதன் பெருமை உலகுக்கெல்லாம் தெரிவது போல டிசம்பர் 16ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் தனது ஆருயிர்த் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் அருகில், சிலையாக எழுகிறார் தலைவர் கலைஞர் அவர்கள்.
அவர் கண் பார்த்து - கரம் தொட்டு உருவாக்கிய சிலைகள் பல தமிழ்நாட்டில் ஊர்தோறும் நிலைப்பெற்றிருக்கின்றன. எத்தனையெத்தனை அண்ணா சிலைகள், எத்தனையெத்தனை பெரியார் சிலைகள், அவர்கள் மட்டுமின்றி பெருந்தலைவர் காமராஜர், உலக உத்தமர் காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், தமிழறிஞர்கள், கவிஞர்கள், திராவிட இயக்க தீரர்கள், மொழிப்போர்க்களத் தியாகிகள் எனப் பலருக்கும் சிலைகளையும் மணிமண்டபங்களையும் நிறுவியவர் தலைவர் கலைஞர். குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் 133 அடி உயர வள்ளுவர் சிலையும், சென்னை மாநகரில் எழில் கொஞ்சும் வள்ளுவர் கோட்டமும் தலைவர் கலைஞரின் கலைத்திறனைப் பறைசாற்றும் காலந்தோறும்!
அத்தகைய பெருமைமிக்க தலைவருக்கு - பெரும்படைப்பாளிக்கு அவரின் உடன்பிறப்புகளான நாம் செலுத்தும் நன்றிக்கடன்தான் அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படவிருக்கின்ற திருவுருவச் சிலை. சிற்பி தீனதயாளன் அவர்களும், அவர்தம் குழுவினரும் ஓயாது உழைத்து உருவாக்கியுள்ள உயிர்த்துடிப்புமிக்க சிலை.
அன்றாடம் அறிவாலயத்திற்கு வந்து தன் உடன்பிறப்புகளின் முகம் கண்டு அகம் மலர்வது தலைவரின் வழக்கம். எத்தனை நெருக்கடிகள் அவருக்குள் இருந்தாலும், தொண்டர்களைப் பார்த்துவிட்டால் துன்பமெல்லாம் தூர விலகி ஓடிவிடும். அதுபோலவே, எத்தனையோ இன்னல்கள் மொய்த்தாலும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, வரும் உடன்பிறப்புகளுக்கும் தலைவரின் முகம் பார்த்த நொடியில் அத்தனை சிரமங்களும் பறந்தோடிவிடும். கழகத்தைக் கட்டிக்காக்கும் அந்தத் தலைவருக்குத் துணை நிற்பதே நம் தொண்டு என்ற உணர்வு உடன்பிறப்புகளின் நெஞ்சில் ஊற்றெடுக்கும். அவர்களின் கரங்கள் கழகத்தின் இருவண்ணக் கொடியை எப்போதும் உயர்த்திப் பிடிக்கும்.
அந்த உணர்வின் பெருவெளிப்பாடுதான் கழகத்தில் அடிப்படைத் தொண்டனாக அடியெடுத்துவைத்து, தன் அயராத உழைப்பால் ஒவ்வொரு கட்டமாக உயர்ந்து, சென்னையின் மேயர் என்ற பொறுப்பை தலைவர் கலைஞர் அவர்களால் பெற்றவர் சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மா.சுப்ரமணியன். எத்தனை உயர்வான பதவிகள் கிடைத்தாலும் கழகத்தின் தொண்டன் -கலைஞரின் உடன்பிறப்பு என்பதே எல்லாவற்றையும் விடப் பெருமை என நினைக்கிற மா.சுப்ரமணியனின் முனைப்பான செயல்பாட்டால் அறிவாலயம் வாசலில் 114 அடி உயர கொடிக்கம்பத்தில் உயர்ந்து பறக்கிறது கழகத்தின் இருவண்ணக் கொடி.
அவரைப் போலத்தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக நிர்வாகிகளும் பிற மாநிலங்களில் உள்ள நிர்வாகிகளும் கலைஞரின் உடன்பிறப்பு என்ற சிந்தனை மாறாமல் செயல்பட்டு வருவதால்தான் சோதனைகளை எதிர்கொண்டு சாதனைகளாக்கி செம்மாந்து நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
எந்த உடன்பிறப்புகளால் இந்தக் கழகம் வலிமையுடன் இருக்கிறதோ, அந்த உடன்பிறப்புகளை எந்த அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் நாள்தோறும் சந்தித்து அகம்மிக மகிழ்வாரோ அதே அறிவாலயத்தில் தன் உடன்பிறப்புகளைக் காண்பதற்கு திருவுருவச் சிலையாக எழுந்து நிற்கிறார். எந்தத் தலைவரைக் கண்டால் தங்கள் உள்ளம் மகிழுமோ, உணர்வு பெருகுமோ அந்தத் தலைவரைத் திருவுருவுச் சிலை வடிவில் காண ஒரு கோடி உடன்பிறப்புகள் பேரார்வத்துடன் இருக்கிறார்கள்.
உயிர்த்துடிப்புடன் வடிக்கப்பட்டிருக்கும் அந்த சிலையிலிருந்து தன் கரகரப்பான காந்தக் குரலால்… “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே… ஓடி வா… கழகத்தின் பெருமையை நாடே எடுத்துரைக்கும் வகையில் நல்லுள்ளம் கொண்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ள விழாவிற்கு திரண்டு வா” எனத் தலைவர் கலைஞர் அவர்களே அழைப்பதாகக் கருதி, ஒவ்வொரு மாவட்டம் –ஒன்றியம் – நகரம் – பேரூர் - சிற்றூர் கழகங்களிலிருந்து உடன்பிறப்புகள் சென்னை நோக்கி வருவதற்கு ஆயத்தமாகி விட்டனர்.
உடன்பிறப்புகளே! உங்களில் ஒருவனான நான் உங்களின் பேரார்வத்தை மதிக்கிறேன்… போற்றுகிறேன்… வணங்குகிறேன். பெருமைமிகு திருவுருவச் சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்- நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்களை தந்தை நிலையில் மனதில் வைத்துப் போற்றும் திருமதி.சோனியா காந்தி அம்மையார் அவர்களுடன், ஆந்திர மாநில முதல்வர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்களும், கேரள மாநில முதல்வர் மாண்புமிகு பினரயி விஜயன் அவர்களும், புதுச்சேரி மாநில முதல்வர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களும் பங்கேற்று, இந்திய அரசியலின் வழிகாட்டியாக விளங்கிய வரலாற்று நாயகர் நம் தலைவருக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.
பல மாநிலங்களிலிருந்தும் வரும் தலைவர்களுடன் தமிழ்நாட்டில் நம் தோழமைக் கட்சியின் தலைவர்கள் - நிர்வாகிகள், பல்வேறு கட்சி -அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையினர், பல துறை அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் எனத் தலைவர் கலைஞர் அவர்களின் மீது பேரன்பு கொண்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்தான், டிசம்பர் 16 மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவிருக்கிறது. அதன் ஏற்பாடுகளை விழாக்கள் நடத்துவதில் முத்திரை பதித்த சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ அவர்கள் கவனித்து வருகிறார். கழகத்தின் தொண்டர்களாம் கலைஞரின் உடன்பிறப்புகள் யாவரும் ஆர்வமிகுதியால் அறிவாலயம் முன்பு கூடுவதைத் தவிர்த்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் அணிஅணியாய்த் திரள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு என பேரறிஞர் அண்ணா வகுத்து தந்த முத்தான மூன்றில், கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமானது என்பதைத் தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டியதுடன், அரை நூற்றாண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்து, அதனைக் கட்டுப்பாட்டுடன் கட்டிக்காத்த வரலாற்றுப் பெருமையும் இந்திய அரசியலில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அந்தப் பெருமைக்குக் காரணம், அவரின் உயிருக்கு உயிரான உடன்பிறப்புகளான நீங்கள்தான். நம் நெஞ்சமெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் நிறைந்திருக்கும் நிலையில், அவர் நமக்கு வகுத்தளித்த கட்டுப்பாட்டு உணர்வினைக் காத்திட வேண்டும்.
இது நம் வீட்டு விழா. நம் குடும்ப விழா. விருந்தினரை வரவேற்று அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடு காப்போம். அறிவாலயத்தில் கூடுவதைத் தவிர்த்து, ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம். தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்புற நிகழ்ந்த பிறகு, மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் நம் உயிர்நிகர்த் தலைவரை சிலையில் காண்போம். இதயம் குளிர்வோம்.
சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த மதசார்பற்ற – முற்போக்கு – சமூகநீதி -ஜனநாயகக் கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப் பாதையை சுட்டிக்காட்டும்.
அந்த வெற்றியை நம்மைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் மனநிலை அறிந்த மாற்றுக் கட்சியினரும் அதனை உணரத் தொடங்கியிருப்பதால்தான் கொள்ளைக்கூட்டத்தாரிடமிருந்து தப்பி வந்து, கொள்கைக் கோட்டையாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை ஒப்படைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.


கழகத்தின் வெற்றி என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு விட்டது. அதனை எடுத்துப் பதிக்கின்ற பணிதான் தேர்தல் களம். அதற்கேற்ப பொறுப்புணர்ந்து -கட்டுப்பாடு காத்து - ஓயாது உழைத்திட வேண்டும். அதுவே திருவுருவச்சிலையாக உயர்ந்து நிற்கும் தலைவர் கலைஞருக்கு நாம் செய்யும் தொண்டு - காட்டுகின்ற நன்றி - செலுத்துகின்ற காணிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக