திங்கள், 10 டிசம்பர், 2018

காவிரி மேலாண்மை தலைவரை நியமிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க உத்தரவிடுமாறு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.


காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க உச்சநீதிமன்றம்  மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.


நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு ஆறு மாதத்தை கடந்தும் இன்னமும் முழு நேர தலைவரை நியமிக்காமல் மத்திய பாஜக அரசு முடக்கி வைத்திருக்கிறது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரும், மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவரும் ஒரே அதிகாரி என்பதால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பதை தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், மேகதாது விவகாரம் குறித்து கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,‘காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு 190 நாட்களை கடந்தும் முழு நேரத் தலைவரை நியமிக்க தமிழக அரசும், முதலமைச்சரும் மத்திய அரசிடம் வலியுறுத்தாதது ஏன்? மத்திய அரசு கிடப்பில் போட்டதின் நோக்கம் என்ன? என்றும் கேள்விகளை எழுப்பினார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் பகுதி நேர தலைவரை மாற்றிவிட்டு, முழு நேர தலைவரை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரியில் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கான விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு, கர்நாடக அரசுக்கு அனுமதி தந்தது மத்திய நீர்வளத்துறை ஆணையம் தான் என்பதால் அத்துறையின் செயலாளர் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவராக இருக்கக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக