ஞாயிறு, 26 ஜூலை, 2020

ரயில்வே தனியார்மயமும் சரி, தேசத்திற்கும் அதன் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே! - தி.வேல்முருகன்


குறைவான பயணிகளே வருவதால் வருமானம் குறைவாக உள்ள 6,000 ஸ்டேஷன்களில் இனி ரயில்கள் நிற்காது! 
இந்த முடிவும் சரி, ரயில்வே தனியார்மயமும் சரி, தேசத்திற்கும் அதன் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே! 
- தி.வேல்முருகன்

மக்களின் உற்பத்தி மற்றும் வரி வருவாயில்தான் அரசு என்கிறபோது, அந்த வருவாயை ஒருசில கார்ப்பொரேட்களுக்குக் கைமாற்றுவதா அரசின் வேலை? 
இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதனை உடனடியாகத் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

அரசு என்பது என்ன? பெரும்பான்மை மக்களின் அமைப்பு. பெரும்பான்மை மக்கள் யார்? உழைக்கும், ஏழை எளிய, சாதாரண, அடித்தட்டு மக்கள். இந்தப் பெரும்பான்மை மக்களில் பெரும்பான்மையோர் எங்கு வாழ்கிறார்கள்? கிராமப்புறங்களில், சின்னச் சின்ன ஊர்களில். அந்தப் பகுதிகளில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் எல்லாம் இனி ரயில்கள் நிற்காது என்று அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு. இதன் உள்ளர்த்தம் அந்த ஸ்டேஷன்களையெல்லாம் மூடிவிடுவதே. 

இந்த முடிவுக்குக் காரணம், அங்கு பயணிகள் வருகை குறைவாம், அதனால் வருவாயும் குறைவாம். எப்படி இருக்கிறது பாருங்கள்; இது பாஜக மோடியின் தலைமையிலான அரசா அல்லது தனியார் வணிக நிறுவனமா? அல்லது  தனியார் வணிக நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனமா இந்த ரயில்வேத்துறை? 
ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றால், குறைந்தபட்சம் 50 பேர் ஏற-இறங்க வேண்டுமாம். இதை அளவுகோலாக வைத்து புதிய கால அட்டவணை அதாவது ‘பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணை’ தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ். அதன்படியே குறைவான பயணிகள் ஏறும்-இறங்கும் வருவாய் குறைவான 6,000 ஸ்டேஷன்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றைக் குறைக்கத் திட்டமிடப்பட்டதாம். 

மும்பை ஐஐடி உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்தப் பூஜ்ஜிய அடிப்படையிலான கால அட்டவணை என்பது ரயில்களின் சிறந்த வேகம் மற்றும் செயல்திறனுக்கானதாம். நாம் சொல்கிறோம்: இடையில் எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல், புறப்பட்ட இடத்திலிருந்து நேராக சேருமிடத்தை அடைந்தால் கூட அது பூஜ்ஜிய அடிப்படியிலான கால அட்டவணையாக இருக்க முடியாது; ரயில் புறப்படாமல். இயங்காமல் அப்படியே நின்றால் மட்டும்தான் அது பூஜ்ஜிய அடிப்படியிலான கால அட்டவணையாக இருக்க முடியும். இந்த எளிய உண்மைக்குக் கூட புறம்பாக, பூஜ்ஜிய அடிப்படியிலான கால அட்டவணையை “விஞ்ஞான முறை” என்று சொல்வது சுத்த பைத்தியக்காரத்தனமல்லவா? 

மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களை மற்றும் அதன் பங்குகளை தனியாருக்கு விற்றுவருகிறது. அதற்கு எதிர்ப்பு வலுக்கும் வேளை பார்த்து கொரோனா வந்தது. கொரோனாவும் மோடி அரசுக்கு ஓர் அரிய வாய்ப்பாகவே அமைந்தது. இதைப் பயன்படுத்தி ஊரடங்கை அறிவித்து, எல்லோரையும் வீட்டுக்குள் முடங்கவைத்து, மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடவிடாமல் செய்து, மக்கள்விரோத காரியங்கள் அனைத்தையும் முடுக்கிவிட்டிருக்கிறார் மோடி. அதில் ஒன்றுதான் ரயில்வேயில் அவர் செய்யும் அட்டகாசங்கள். 

உலகத் தரம் வாய்ந்த பயணத்தை வழங்கவே ரயில்வேயின் மேற்கண்ட திட்டங்களாம். இத்திட்டத்திற்கான நவீன ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுமாம். முதல்கட்டமாக 109 வழித்தடங்களில், 151 நவீன ரயில்கள் இயக்கப்படுமாம். இத்திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாம். ஒவ்வொரு ரயிலிலும் 16 முதல் 24 பெட்டிகள் வரையில் இருக்குமாம். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில் பறக்குமாம்.

நாடு முழுவதும் தனியார் ரயில்களை இயக்க மும்பை, டெல்லி, சண்டிகார், சென்னை, செகத்திராபாத், ஜெய்பூர், பெங்களூர் உட்பட 14 தொகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. நமது சென்னை தொகுப்பில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்படும். அவை சென்னை - மதுரை, சென்னை - மங்களூர், சென்னை - கோயம்புத்தூர், திருச்சி - சென்னை, கன்னியாகுமரி - சென்னை, சென்னை - புதுடெல்லி, சென்னை - புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்கள். 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் (டிஆர்இயு) துணைப் பொதுச்செயலர் மனோகரன், “தனியார் ரயில்களை இயக்குவதால், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ரயில் கட்டணங்கள் பல மடங்கு உயரும். மக்களின் வரிப்பணத்திலான பொதுத்துறை நிறுவனத்தில் தனியார் ரயில்கள் என்பது கண்டனத்துக்குரியது. இந்த முடிவைக் கைவிடாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்றார்.

இந்திய இரயில்வே உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இதில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்குகள் இடம்பெயர்கிறது; 16 லட்சம் பேர் இதில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலுள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்களாகும். இதில் நாள்தோறும் 14,444 தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களுக்குச் சொந்தமான இவ்வளவு பெரிய பொதுத்துறை நிறுவனத்தைத்தான் தனியாருக்குத் தாரைவார்க்கிறார் மோடி. இதைச் செய்ய, இன்னும் மூன்றரை ஆண்டுகளில் மக்கள் பதவியைப் பறிக்க இருக்கிற இவருக்கு உரிமை ஏது?

குறைவான பயணிகளே வருவதால் வருமானம் குறைவாக உள்ள 6,000 ஸ்டேஷன்களில் இனி ரயில்கள் நிற்காது! 
இந்த முடிவும் சரி, ரயில்வே தனியார்மயமும் சரி, தேசத்திற்கும் அதன் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரானதே! 

மக்களின் உற்பத்தி மற்றும் வரி வருவாயில்தான் அரசு என்கிறபோது, அந்த வருவாயை ஒருசில கார்ப்பொரேட்களுக்குக் கைமாற்றுவதா அரசின் வேலை? 
இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், ரயிவேயில் மக்களுக்கு எதிரானவற்றை உடனடியாகத் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக