வெள்ளி, 31 ஜூலை, 2020

மருத்துவர் உயிரிழப்பு தொடர்பில் வென்டிலேட்டர் எண்ணிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!


ராஜபாளையம் மக்கள் மருத்துவர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! மருத்துவர் உயிரிழப்பு தொடர்பில் வென்டிலேட்டர் எண்ணிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மக்கள் மருத்துவர் சாந்திலால் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வந்த மருத்துவர்  சாந்திலால் அவர்களின் இழப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது. ராஜபாளையம் மக்களுக்கு நல்ல பரிட்சயமான நல்ல சமூக சிந்தனையுடன் சேவையாற்றி வந்த மருத்துவர் சாந்திலால் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

முன்னதாக மருத்துவர் சாந்திலால் மரணமடைவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக தனக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், கடுமையான மூச்சுத் திணறலிலும் தனக்கு ஆக்ஸிஜன் ஒழுங்கான முறையில் அளிக்கப்படவில்லை எனவும், இன்னும் இரண்டொரு நாளில் தான் உயிரிழக்க நேரிடும் எனவும் குற்றஞ்சாட்டி ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கூறியது போல இரண்டு நாளில் அவர் மரணமடைந்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொண்டு புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் ஒரு மருத்துவரே தனக்கு இராஜாஜி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை, செயற்கை சுவாசம் சரிவர அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை கூறும்போது, அங்கு அவசர சிகிச்சை பெறும் சாதாரண பொதுமக்களின் நிலை குறித்து மிகுந்த ஐயப்பாடு எழுகின்றது. ஏற்கனவே அங்கு கடந்த ஆண்டு மின்சார துண்டிப்பு, ஜெனரேட்டர் பழுது காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 5 நோயாளிகள் ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாமல் உயிரிழந்தனர்.

ஆகவே, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை வழங்க போதுமான செயற்கை சுவாச கருவியான வென்டிலேட்டர் வசதிகள் எந்நேரமும் இயங்கும் வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அதன் செயல்பாட்டை தமிழக சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள செயற்கை சுவாச கருவிகளின் போதுமான எண்ணிக்கையும், அதன் செயல்பாட்டையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அதன் எண்ணிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக