புதன், 15 ஜூலை, 2020

கொரோனா வைரஸை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டாக வேண்டும். - டாக்டர் ஜெ. ரமேஷ்


கொரோனா வைரஸை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டாக வேண்டும். மாநில கோவிட்-19 ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் ஜெ. ரமேஷ் வேண்டுகோள்

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் என்ற பிரச்சினை இப்போது நம் எதிரில் இருக்கின்றது. அதற்காகப் பயப்படத் தேவையில்லை. நம்மால் அதைச் சமாளிக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் தங்களது தற்போதைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டாக வேண்டும். ஊரடங்கு தளர்வை சாதகமாக எடுத்துக்கொண்டு பழைய வாழ்க்கை முறையையே தொடர்ந்தால் வைரஸ் தொற்று பரவத்தான் செய்யும். அத்தியாவசியமாகத் தேவைப்படாத பொருட்களை வாங்குவதை தவிர்த்தல், தேவையில்லாமல் அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் செல்லுதல், கூட்டம் சேருதல் போன்ற நடவடிக்கைகளை இனி நாம் தவிர்த்தாக வேண்டும். சமூக இடைவெளி, முகக் கவசம், கைகழுவுதல் ஆகிய மூன்றையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநிலத்தின் கோவிட்-19 ஒருங்கிணைப்பு அலுவலரும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொது மருத்துவத் துறைத்தலைவருமான டாக்டர் ரமேஷ் கேட்டுக்கொண்டார். 

     மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து இன்று(15.7.2020) கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய கோவிட்-19 குறித்த வெபினாரில் சிறப்புரை ஆற்றியபோது டாக்டர் ரமேஷ் இவ்வாறு கேட்டுக்கொண்டார். 

 புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 21 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. பெரும்பாலும் இணை நோயுள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களே இறந்துள்ளனர். எனவே நாம் முதியவர்களையும் ஏற்கனவே இணை நோயுள்ளவர்களையும் வீட்டிலேயே பாதுகாப்பாக தனிமையில் வைத்திருக்க வேண்டும். நாட்பட்ட நோய் உள்ளவர்கள் மருந்து வாங்க வெளியில் செல்லத் தேவையில்லாத  வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அத்தகைய நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மூன்று மாதத்துக்கான  மருந்துகளைக் கொடுத்து உள்ளனர். ஏற்கனவே நோயுள்ளவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதை நாம் உறுதி செய்ய வேண்டும். வேலைக்கும் வேறு பணிகளுக்காவும் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது தன் சுத்தத்தை கட்டாயமாகப் பேணவேண்டும். இந்த கொரோனா வைரஸ் மரபு மாற்றம் பெற்று வேறு வடிவில் தோன்றலாம். எனவே தற்காப்பு நடவடிக்கைகளை அனைவரும் தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும் என்று டாக்டர் ரமேஷ் மேலும் கேட்டுக் கொண்டார். 

     ஜிப்மர் மருத்துவமனையின் நோயியல் பிரிவு பேராசிரியரான டாக்டர் என் ஜே ராஜேஷ் வெபினாரில் சிறப்புரை ஆற்றினார்.  ஜிப்மரில் 27-1-2020 அன்றே  கொரோனா வைரஸுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அமைக்கப்பட்டு விட்டது.  பிப்ரவரியில் பரிசோதனைக்கான அனுமதியை ஐ சி எம் ஆர் அளித்தது.  புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள தமிழ்நாட்டு பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஜிப்மரில் கரோனா வைரஸ் தொற்று சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 10லட்சம் பேருக்கு எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையில் புதுச்சேரி மாநிலம் முன்வரிசையில் உள்ளது. புதுச்சேரியில் ஆறுதலான விஷயம் இறப்பு விகிதம் 1.3 சதவீதம் என்ற குறைந்த அளவில் இருப்பதுதான். எனவே அறிகுறிகள் இருப்பவர்கள் அலட்சியம் காட்டாமல் சிகிச்சைக்கு முன் வருவதும் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதும் இன்றைய பெருந்தொற்றுப் பரவல் காலகட்டத்தின் இன்றியமையாத்த் தேவைகள் ஆகுமென்று டாக்டர் ராஜேஷ் குறிப்பிட்டார். 

  மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அலுவலரும் தலைமை அலுவலருமான டாக்டர் ஆ.இராஜேந்திரகுமார் சித்தமருத்துவத்தின் மூலமான நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பல்வேறு மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்த முழுமையான சிகிச்சைதான் தற்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்குத் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்ட ராஜேந்திரகுமார் கபசுர குடிநீர் முன்தடுப்பு நடவடிக்கையாக வழங்கப்படுகின்றது என்றும்  உணவின் மூலமே நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.  வீட்டில் சமையலில் மஞ்சள், சீரகம், இஞ்சி, மிளகு ஆகியவற்றின் பயன்பாட்டை அதிகரித்துக் கொண்டால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று டாக்டர் ராஜேந்திர குமார் மேலும் தெரிவித்தார்.

 நிகழ்ச்சிக்கு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜி. ராணி தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் உதவி இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் அறிமுக உரையாற்றி வெபினாரைத் தொகுத்து வழங்கினார்.

மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இணை இயக்குனர் ஜெ.காமராஜ் நிறைவுரை ஆற்றினார்.

மருத்துவர்களின் உரைகளுக்குப் பிறகான கலந்துரையாடலை மாநில என்.எஸ்.எஸ். தொடர்பு அலுவலர் முனைவர் குழந்தைசாமி தொடங்கி வைத்தார். முன்னதாக மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலர் முனைவர் டி.விஜயசந்திரன் வரவேற்றார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக