வியாழன், 23 ஜூலை, 2020

தாமிரபரணி தியாகிகளை மறக்கவும் மாட்டோம்..! கொலைக் குற்றம் செய்தோரை மன்னிக்கவும் மாட்டோம்..!! வரலாறுகள் என்றாவது ஒரு நாள் சரியாக தீர்ப்பெழுதும்..!!! -டாக்டர் K. கிருஷ்ணசாமி


திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை; கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை; திண்டுக்கல் மாவட்டம் ஹைவேவிஸ்; நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர்; சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய மாவட்டங்களில் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் பணிபுரியும் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு 22 வருடங்களுக்கு முன்பு தினச் சம்பளம் ரூ.150 (இன்றைய மதிப்பில் ரூ.500 ) எனக் கணக்கிட்டு மாதச் சம்பளமாக வரைமுறை செய்யப்பட வேண்டும், 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் இருக்க வேண்டுமென்ற, 1952- ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர் சட்டம் முறையாக அமல்படுத்த வேண்டும் மற்றும் தேயிலைத் தோட்ட நிலங்களுக்கான குத்தகைக் காலம் முடிவுற்றவுடன் அங்கு பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த நிலங்களை தலா இரண்டரை ஏக்கர் வீதம் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி மாஞ்சோலையில் ஆர்ப்பாட்டமாக புதிய தமிழகம் கட்சி போராட்டத்தைத் துவக்கியது. அன்றே ஏறக்குறைய 75 கிலோ மீட்டருக்கு மேல் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாஞ்சோலையிலிருந்து ஒரே இரவில் நடந்தே வந்து, அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றன.  

8 மணி நேரம் வேலை எனக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணிக்கு முடிக்க வேண்டிய பணியை, மாஞ்சோலை குத்தகைக்காரரான பிபிடிசி நிறுவனம் தன்னிச்சையாக 6 மணி வரையிலும் பணி செய்ய வேண்டும் என வற்புறுத்தியது. 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய தொழிலாளர்கள் மறுக்கவே, நிர்வாகம் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்தார்கள். சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 25 கைக்குழந்தைகள், 250 பெண்கள், 400 ஆண்கள் என 675 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய வலியுறுத்தி, திருநெல்வேலி சந்திப்பிலிருந்து 50,000-க்கு மேற்பட்ட மக்கள் பங்குபெற்ற பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றது. 

புதிய தமிழகம் கட்சியின் தலைமையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் உட்பட 5 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. காலை 11 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் அமைதியாக மதியம் 2 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு சற்று முன்பாக, பாதையை முழுமையாக அடைத்து காவல்துறையினர் அரண்களை போல நின்றனர். கடும் வெயிலில் நடந்து சென்ற ஆயிரக்கணக்கான பெண்கள் தரையின் சூட்டில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவரவர் அணிந்து வந்த பாத அணிகலன்களை கழற்றி அதன்மேல் அமர்ந்து கொண்டார்கள். கூட்டத்திற்கு வந்த எவரும் முன்னால் அமர்ந்திருந்த பெண்களைத் தாண்டி செல்லவில்லை. முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண்களுக்கு 50 அடிக்கு பின்னால் தான் தலைவர்கள் வந்த ஜீப் நின்றது. தலைமை தாங்கிய தலைவர்கள் மட்டுமே மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி கேட்டோம். உடன் வருகை புரிந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கீழே இறங்கி அதிகாரிகளிடம் பேசினார். ஊர்வலத்தில் 50,000 பேர் வரை கலந்து கொண்டாலும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி கேட்டோம். 5 முன்னணித் தலைவர்களை அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க  அனுமதிப்பதற்குப் பதிலாக, என்ன காரணத்திற்காக காலம் தாழ்த்தினார்கள்? என்று தெரியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் பசியோடும், பட்டினியோடும் சாலையில் அமர்ந்திருந்த பெண்கள் மீதும், ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் மீதும் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் சற்றும் எதிர்பாராத தாக்குதலுக்கு ஆளான பொதுமக்கள் அனைவரும் என்ன செய்வது? என்று திகைத்து நின்றார்கள். கும்பலாக ஆற்றங்கரையில் நின்ற அப்பாவி மக்களை நூறடிக்கு ஆழமான  ஆற்றுப்படுகையில் காவல்துறையினர் தள்ளிவிட்டார்கள். பின்னால் இருந்தும் தாக்குதல், முன்னால் இருந்தும் தாக்குதல், பக்கவாட்டிலிருந்தும் தாக்குதல். இந்த சூழலில் காவல்துறையினரை பார்த்து மக்களை அடிக்காதீர்கள்! அடிக்காதீர்கள்!! எனக் கூறினோம். பல நாள் பசியோடு அடைத்து வைக்கப்பட்டு திறந்து விடப்பட்ட ஓநாய் கூட்டங்கள் எதிரே இருக்கும் ஆட்டுக்குட்டிகளை எப்படி சின்னா பின்னமாக்கி விடுமோ? அதுபோல இரத்தத்தை வியர்வையாக்கி தேயிலையும், காப்பியும் கொடுத்த தொழிலாளர்களைக் காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியது. 

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருந்தது. சிரமபட்டு நீந்திக் கரையேறியவர்களையும் கரை ஏற விடாமல், ஏறக்குறைய இரண்டு பர்லாங் தூரத்திற்கு அப்பால் காவல்துறையினராலும், மனித போர்வையில் இருந்த மிருகக் கூட்டங்களாலும் தடிகளால் தாக்கியும், கற்களை வீசியும் 17-க்கும் மேற்பட்டோர் அடித்து மூழ்கடிக்கப்பட்டனர். இதில் ஒன்றரை வயது விக்னேஷ் என்ற குழந்தையும் உள்ளடக்கம். இது 1930-ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் காட்டிலும் கொடூரமானதாகும். 

17 பேர் இறந்ததற்கு குறைந்தபட்ச மனிதாபிமானத்தை வெளிப்படுத்தக்கூடிய வகையில் கூட, அன்றைய தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை. தமிழகத்தில் அன்று நிலவிய சமூக நீதி  அவ்வளவுதான்! மனித உரிமையும் மனிதநேயமும் அவ்வளவுதான்!! எதிர்பாராத தாக்குதலில் மக்கள் சிதறி ஓடிய பின்பும் எங்கள் ஜீப் அங்கே தான் இருந்தது. காவல்துறையோடு இரண்டறக் கலந்த சண்டியர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகச் சுற்றுச்சுவர் மேல் காத்துக்கொண்டிருந்தனர். சண்டியர் கூட்டம் திட்டமிட்டபடி எங்கள் மீது தாக்குதல் தொடுத்தது. ஒரு செங்கல் என் தலைப்பகுதியை குறி வைத்தது. அது குறி தவறியதால் ஜீப்பின் ஒரு பகுதியில் பலத்த அடிபட்டது. இன்னொரு செங்கல் மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் பழனி அவருடைய தலையை பதம் பார்த்தது. அடுத்தடுத்த செங்கல் எங்களை பதம் பார்க்காமல் தொண்டர்கள் எங்கள் மீது கவிந்து பாதுகாத்துக் கொண்டார்கள். தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் இருந்த பழனி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். 

17 பேரும் அடித்து ஆற்றில் போடப்பட்டு உயரிழந்த செய்திகளும், ஊர்வலத்திற்கு வந்து திரும்பி சென்றவர்களை தடுத்து நிறுத்தி பிடித்து அடித்த செய்திகளும் நெஞ்சை உலுக்கியன.  மேலாக வேறு மாநில மருத்துவர்களை கொண்டு தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பிரேதங்களை பெற்றுக் கொள்ளாமல் ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினோம்.

சாத்தான்குளத்தில் ஒரு தந்தையும், மகனும் காவல்நிலையத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் தவறான சான்றிதழ் கொடுத்தார்கள் என சிபிஐ விசாரணை செய்கிறது. 17 பேரின் மரணத்திற்கு அரசின் தலையீடு இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என போராடியதற்கு எதிராக அரசு மருத்துவர்கள் அன்றைய அமைச்சராலேயே தூண்டி விடப்பட்டார்கள். 17 பேர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அன்றைய மாவட்ட ஆட்சியர், உயர் காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அவர்கள் மிகப் பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என சாதி முத்திரை கொடுத்து, தவறிழைத்த அவர்களுக்கு முதலமைச்சர் பாதுகாப்பு அளித்தார். நாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். டெல்லி உச்சநீதிமன்றம் வரைச் சென்று போராடினோம். அன்றும் வணிகர் சங்கங்கள் இருந்தன, எண்ணற்ற இயக்கங்களும் இருந்தன. நடிகர்களும் இருந்தார்கள், நடிகைகளும் இருந்தார்கள். இப்படிப்பட்ட மனித உரிமை மீறலுக்கு எதிராக; ஆட்சியாளர்களுக்கு எதிராக எவரும் குரல் கொடுக்கவில்லை. 

வரலாற்றின் உண்மை என்றாவது ஒருநாள் வெளிவரும் என்பதில் நாம் உறுதியாகத் தான் இருக்கிறோம். எனவே தாமிரபரணிப் படுகொலைக்கு சிபிஐ விசாரணை வேண்டும். இதுவே தாமிரபரணி தியாகிகளின் 21-வது நினைவு நாளில் நாம் வைக்கக்கூடிய கோரிக்கையாகும். 

தாமிரபரணி தியாகிகளை மறக்கவும் மாட்டோம்..!
கொலைக் குற்றம் செய்தோரை  மன்னிக்கவும் மாட்டோம்..!!
வரலாறுகள் என்றாவது ஒரு நாள் சரியாக தீர்ப்பெழுதும்..!!!

 22 வருடங்களாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ஆம் தேதி, பல்லாயிரக்கணக்கானவர்களுடன் ஊர்வலமாக அதே நெல்லை சந்திப்பில் இருந்து புறப்பட்டு தாமிரபரணி ஆற்றில் மலர் அஞ்சலி செலுத்துவதை கடமையாகச் செய்து வருகிறோம். ஆனால், இந்த ஆண்டு கரோனா வைரஸ் ஒட்டுமொத்த மக்களையும் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற பல்வேறுத் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டிய நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடுவது என்பது எவ்விதத்திலும் பொதுநலன் சார்ந்தது அல்ல..! எனவே ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதியும், நெல்லை மாநகர, மாவட்டப் பொது மக்களுக்கும், ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்ற அடிப்படையிலும் நாமாக முன்வந்து ஊர்வலத்தை இரத்து செய்து இருக்கிறோம்.
வாழ்க..! வாழ்க..!
புதிய தமிழகம் வாழ்க..!!
மறக்க மாட்டோம்..! மறக்க மாட்டோம்..!
தாமிரபரணி தியாகிகளை மறக்க மாட்டோம்..!!
மன்னிக்க மாட்டோம்..! மன்னிக்க மாட்டோம்…!
தாமிரபரணி தியாகிகளின் மரணத்திற்கு காரணமானவர்களை
 மன்னிக்க மாட்டோம்..!!
நிலை நிறுத்துவோம்..! நிலை நிறுத்துவோம்..!
தோட்ட தொழிலாளர்களின் உரிமையை நிலை நிறுத்துவோம்..!!
நாட்டுடைமையாக்கு..! நாட்டுடைமையாக்கு..!
16 ஆயிரம் ஏக்கர் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நாட்டுடைமையாக்கு..!!
பிரித்துக்கொடு..! பிரித்துக்கொடு..!
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பிரித்துக்கொடு..!!
மீட்டுக்கொடு..! மீட்டுக்கொடு..! 
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு முழு உரிமையை மீட்டுக்கொடு..!!
விடமாட்டோம்..! விடமாட்டோம்..!
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தனியார்கள் அபகரிக்க விடமாட்டோம்..!!
வேண்டும்..! வேண்டும்..! 
தாமிரபரணிப் படுகொலைக்கு மறுவிசாரணை வேண்டும்..!!
வேண்டும்..! வேண்டும்..! 
சிபிஐ விசாரணை வேண்டும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக