வெள்ளி, 31 ஜூலை, 2020

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை கல்வியினின்றும் அப்புறப்படுத்தி, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி! - தி.வேல்முருகன்


பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை கல்வியினின்றும் அப்புறப்படுத்தி, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் மோடி!

கார்ப்பொரேட் தொண்டூழியத்திற்கான மோடியின் கொத்தடிமைக் கல்விமுறைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலளித்ததை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதனைத் திரும்பப்பெறக் கோருகிறது                                   தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

இந்தியா என்ற நாடு உருவானதே 1947க்குப் பிறகுதான். அதற்கு முன் இங்கு 4500க்கும் மேற்பட்ட இனக்குழு பகுதிகள் சிதறிக் கிடந்தன. அவற்றைக் கட்டுப்படுத்தி, ரயில்வே, தபால் தந்தித் துறை மற்றும் இன்ன பிற நவீன வசதிகளால் இணைத்து பிரிட்டிஷ் இந்தியா என ஆக்கினர் ஆங்கில ஆட்சியாளர். அதற்கு முன், மேல்சாதியருக்கு மட்டுமேயான குருகுலக் கல்விமுறைதான் இருந்தது. பிற சாதியரான சூத்திரர், பஞ்சமர் கல்வி கற்கவே உரிமையில்லை. இது புராண கட்டுக்கதையில் வரும் ஏகலைவன், சம்புகன் ஆகியோரின் தொடர்ச்சியே! 
மெக்காலே கல்வித் திட்டம் என நாம் கேள்விப்பட்டிருப்போம். அது மோசம் என்பதாக சிலர் திட்டியதைப் பார்த்து நாமும் திட்டியிருப்போம். அப்படித் திட்டியவர் மேல்சாதியரே. திட்டமிட்டேதான் திட்டினர். 

அது உலகில் புதிய விழிப்புணர்வு பொங்கிய நேரம். ஆனால் மூட நம்பிக்கை நாடாக இருந்தது பிரிட்டிஷ் இந்தியா. அதில் தாங்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த புரோகிதம் மற்றும் சடங்காச்சாரத்தைக் கற்பிக்கும் சமஸ்கிருதக் கல்வியை அகற்றிவிட்டு, எல்லோரும் கல்வி கற்கும் விதத்தில் நவீனக் கல்வியை மெக்காலே கொண்டுவந்துவிட்டாரே என்ற எரிச்சல்தான் திட்டக் காரணம். 
நவீனக் கல்வியில் சமஸ்கிருதம், பெர்சியன் மொழிகள் அகற்றப்பட்டன; பதிலாக ஆங்கிலமும் அவரவர் தாய்மொழியும் ஊடக மொழியானது. மாணவர்களிடையே சாதி, மத பேதம் மற்றும் தீண்டாமை ஒடுக்குமுறை களையப்பட்டது. ஏராளமான கல்விக்கூடங்கள் நிறுவப்பட்டு, கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற வாய்ப்பு ஏற்பட்டது. 

இன்றும் நாம் போற்றும் தலைவர்கள், சான்றோர்கள், அரசியலாளர்கள், சாதனையாளர்கள் பலர் மெக்காலே கல்வித் திட்டத்தில் பயின்றவர்கள்தான். அவர்கள் காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், காமராஜர், கே.டி.கே. தங்கமணி, சி.பா.ஆதித்தனார், ஜோதிபாசு ஆகியோர். இதில் தொடக்கப் பள்ளிதான் படித்த பெரியார், காமராஜரைத் தவிர மற்ற அனைவரும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். மெக்காலே கல்விதான் மிகச் சிறந்தது என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். 
சுதந்திர இந்தியாவிலும் நீடித்த மெக்காலே கல்வித் திட்டத்தை 1968இல் பிரதமர் இந்திரா காந்தி மாற்றினார். அது சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கல்விக் கொள்கை ஆனது. 1986இல் இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். அதுதான் தற்போது அமலில் இருக்கிறது. 1992இல் பிரதமர் நரசிம்மராவ் அதில் சில திருத்தங்களைச் செய்தார். 

மெக்காலே கல்வித் திட்டத்திற்குப் பின் வந்த கல்விக் கொள்கைகள் பொதுவாக படிப்படியாகத் தேய்ந்தன என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் பாதிப்பு தென்னிந்திய மாநிலங்களுக்கு மிகக் குறைவுதான். அதிலும் கேரளம், தமிழ்நாட்டிற்கு மிகமிகக் குறைவு. வடஇந்தியாவிலும் இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் தாய்மொழியான இந்திப் பாடத்திலேயே 10ஆம் வகுப்புத் தேர்வில்                          85 விழுக்காட்டினர் தோல்வியடைந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 
இப்போது முந்தைய யாவற்றிலும் படுமோசமான மோடியின் புதிய கல்விக் கொள்கை-2020க்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு, ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை ஒன்றியக் கல்வித்துறை என்று மாற்றப்பட்டு, அதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 
இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மோடி அரசு 2017இல் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 2019 ஜூன் 1ந் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது; ஒற்றை நாடு-ஒற்றைக் கல்விமுறை என்பதை அங்கீகரித்தது; கார்ப்பொரேட்டுகளுக்குக் கொத்தடிமைகளைத் தேர்வு செய்ய உதவுவது; 3ஆம், 5ஆம், 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களை வடிகட்டி அவர்களின் இடைநிற்றல்களை அதிகரிப்பது; மும்மொழித் திட்டம் மூலம் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது. எப்படியெனில், இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும்; மற்ற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டும். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் மூன்றாவது மொழியாக விருப்ப மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. 

அனைத்து உயர்கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு; 6ஆம் வகுப்பு முதல் கைத்தொழில் கட்டாயம் கற்றுத்தரப்படும்; இளங்கலை 3-4 ஆண்டுகள் நடத்தப்படும்; முதுகலை 1-2 ஆண்டுகள் நடத்தப்படும்; இண்டகிரெட் இளங்கலை, முதுகலை இரண்டும் 5 ஆண்டுகள் அனுமதிக்கப்படும்; உயர் கல்வி நிலையங்களின் தன்னாட்சி உரிமம் ஒழிக்கப்படும்; உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்; பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம்; M.Phil படிப்புகள் நிறுத்தப்படும்.

இந்தப் புதிய கல்விக் கொள்கை, நமது கல்விமுறையை பின்னோக்கிப் புராண காலத்துக்குச் செலுத்தும் கொள்கை; மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல்; கல்விக்காக கோச்சிங் சென்டர்களை நாடத் தூண்டும். மூன்று வயதிலேயே கல்வியைத் தொடங்கச் செய்வது பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பறிப்பதாகும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை உருவாக்கும் அதிகாரத்தை NCERTக்குக் கொடுத்திருப்பதால், இது மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களை திறனற்றவர்களாக மாற்றும் வேலையைச் செய்வதற்காகவேதான். 
இப்படிப்பட்ட புராண, இதிகாச கட்டுக்கதைகளில் வரும் குருகுலக் கல்வி, ராஜாஜியின் குலக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் மறுபதிப்பான மோடியின் புதிய கல்விக் கொள்கை-2020க்குத்தான் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்கள் பெரிதாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டவோ, போராடவோ முடியாது என்பதைப் பயன்படுத்தி, மக்கள்விரோதச் சட்டங்களை அவசர கதியில் நிறைவேற்றி வருகிறது மோடி அரசு. இது, இறுதியில் மோசமானச் சாவை சந்தித்த உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரிகளான முசோலினி, ஹிட்லர் ஆகியோரின் நாஜிசம்  மற்றும் ஃபாசிசத்தை விட பல மடங்கு கொடூரமானதாகும். இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கு முன்னும் மூன்று அவசரச் சட்டங்கள் மற்றும் வரைவுகளைக் கொண்டுவந்திருக்கிறது மோடி அரசு

நிதி சட்டம் 2020 - கடந்த மார்ச் 27ந் தேதி குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, புதிய நிதி சட்டம் ஏப்ரல் 1, 2020ல் இருந்து அமலுக்கு வந்தது. இதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டது.
நிதி மசோதா என்பது அரசின் செலவினங்களுக்கு சட்டப்படி ஒப்புதல் தெரிவிப்பதற்கானதாகும். மக்களவை மற்றும்  மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் வரும் நிதியாண்டிற்கான தொகையை அரசு செலவு செய்ய முடியும். ஆனால் இந்த ஆண்டு,விவாதம், மத்திய அமைச்சரின் உரை எதுவும் இல்லாமல் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், “நாடு அசாதாரண சூழலை எதிர்கொண்டுள்ளதால், நிதி மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்

புதிய மின்சார திருத்தச் சட்ட வரைவு - 2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் வரவுள்ளது. இதற்கான வரைவுச் சட்டம் கடந்த ஏப்ரல் 17ந் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவின்படி, ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கிறது; கூட்டாட்சி முறைக்கு எதிராக இருக்கிறது; விவசாயிகள், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்திற்கு தடை போடுகிறது; மின்துறையில் மாநிலத்தின் நிதிச்சுமையைக் கூட்டுகிறது. 

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 - பெரும் திட்டங்கள், தொழிற்சாலைகள், நெடுஞ்சாலைகள், நெடுஞ்சாலை விஸ்தரிப்புகள் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986இன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 அறிவிக்கைப்படி திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும். பிறகு, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அரசு அனுமதி வழங்கும்; இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கும்.

இந்நிலையில், பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகவும் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்குக் கேடாகவும், சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை, மக்கள் கருத்துக்கேட்பு ஆகியவை தேவையில்லை என்கிறது மோடியின் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020. 
இந்த வரிசையில் நான்காவதாக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை கல்வியினின்றும் அப்புறப்படுத்தி, சமூக நீதிக்கு வேட்டு வைக்கிறார் மோடி! 
கார்ப்பொரேட் தொண்டூழியத்திற்கான மோடியின் கொத்தடிமைக் கல்விமுறைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலளித்ததை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதனைத் திரும்பப்பெறக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக