வியாழன், 30 ஜூலை, 2020

புதிய தமிழகம் கட்சி தொண்டர்களின் அழுத்தமான போராட்டத்தின் காரணமாக இன்று மறைக்கப்பட்ட அநீதி வெளிக்கொணரப்பட்டுள்ளது. - டாக்டர் K. கிருஷ்ணசாமி


தென்காசி விவாசாயி அணைக்கரைமுத்து கொலை 
மறுஉடற்கூறு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 
புதிய தமிழகம் கட்சியின் எட்டு நாள் போராட்டத்திற்கு கிடைத்த 
மகத்தான வெற்றி!  - டாக்டர் K. கிருஷ்ணசாமி

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம் வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்து கடையம் சரகம் வனக்காவலர்களால், கடந்த 22-ஆம் தேதி, நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டு, அடுத்த நான்கு மணி நேரத்தில் பலத்த காயங்களுடன் பிணமாக கொண்டு வரப்பட்டார். குடும்பத்தாருடைய எதிர்ப்புகளையும் மீறி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விதிமுறைகளை மாறாக, இரவு 6 மணிக்கு மேல்  உடற்கூறு பரிசோதனை செய்தும், பிற தடயங்களையும் அழித்தும், சில கைக்கூலிகளைப் பயன்படுத்தி, முத்துவின் குடும்பத்தாரை அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும் எப்படியாவது அவரை அடக்கம் செய்து, கொலைக்குக் காரணமானவர்களைப் பாதுகாக்க, கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். 

ஒன்றுக்கும் உதவாத செய்திகளைக் கூட நாள் கணக்கில் ஊதி பெரிதாக்கக் கூடிய தமிழக தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்கள் முத்துவின் கொலை சம்பவங்களை வெளிக்கொணருவதில் பாராமுகமாகவும், பாரபட்சமாகவும் இருந்தன. நிமிடத்திற்கு நிமிடம் பிரேக்கிங் நியூஸ் போடக்கூடியவர்கள், எட்டு நாள் போராட்டம் நடத்தியும் ஊடக வெளிச்சம் எதுவும் காட்டாமல், இருட்டடிப்பு செய்தனர். 

எனினும், புதிய தமிழகம் கட்சி தொண்டர்களின் அழுத்தமான போராட்டத்தின் காரணமாக இன்று மறைக்கப்பட்ட அநீதி வெளிக்கொணரப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் அந்த கிராமத்திலேயே தங்கி அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதலாகவும், பாதுகாப்பாகவும் எட்டு தினங்களாக துணை நின்று, முத்துவின் கொலைக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த உறுதியாக நின்றார்கள். 

இதன் விளைவாக, இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேவேந்திரகுல வேளாளர் நன்மகன் அணைக்கரைமுத்துவின் உடலை மறுஉடற்கூறு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது.  இது புதிய தமிழகம் கட்சித் தொண்டர்களின் உறுதியான மற்றும் விடாப்பிடியான முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். மறு உடற்கூறாய்விற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மறுஉடற்கூறு செய்யும் குழு எவ்வித பாரபட்சமும் இல்லாமல் மறுஉடற்கூறாய்வை நீதியோடும், நேர்மையோடும் நடத்தி தங்களுடைய அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என்று நம்புகிறோம். 

இந்த மகத்தான வெற்றிக்கு தந்தையை இழந்த துயரத்திலும், பல்வேறு தரப்பிலிருந்து வந்த மிரட்டல்களைக் கண்டு அஞ்சாமலும், உறுதியாக நின்ற அணைக்கரைமுத்துவின் துணைவியார் பாலம்மாள்; மகன்கள் நடராஜன், முருகன், வள்ளிநாயகம்; மகள்கள் மாரி, வசந்தி ஆகியோருக்கும், கடமையை மட்டுமே கருத்திலே கொண்டு சிரமங்களை பொருட்படுத்தாது, காட்டிலும்-மேட்டிலும் உளன்று, கட்சியின் கடமையை நிறைவேற்றிய மாநில நிர்வாகி வே.க.அய்யர், ஆசிரியர் மாடசாமி, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார், த.ஜான் கிறிஸ்டோபர், க.பாலாஜி, கடையம் ஒன்றியச் செயலாளர் விஜயகுமார், திருநெல்வேலி-தென்காசி-தூத்துக்குடி-விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் செ.இராஜேந்திரன், முருகன், தங்கராமகிருஷ்ணன், இராஜலிங்கம், வீ.சுப்பிரமணியன், க.நடராஜன், பாறை இராமச்சந்திரன், இன்பராஜ், பூவாணி இலட்சுமண பாண்டியன், கார்த்திக், செல்லப்பா, மணிகண்டன், சுரேந்திரன், இலட்சுமண பாண்டியன், குபேந்திரன், செல்வராஜ், முத்து, கலைச்செல்வம், சென்னை இரத்தினபிரகாஷ், அஜீத் மற்றும் இந்த வழக்கில் உறுதுணையாக நின்ற வழக்கறிஞர் செல்வக்குமார், மதுரை வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், கண்ணன் மற்றும் வாகைக்குளம் கிராம பொதுமக்களுக்கும், சுற்றுவட்டார விவசாயிகளுக்கும், ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், சமூக வலைதளங்களில் ஆதரவு கொடுத்த அனைவருக்கும்; எனது  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக