புதன், 22 ஜூலை, 2020

விவசாயிகள் உபத்தொழிலாக செய்து வருகிற பால் உற்பத்தியை பாதிக்காத வகையில், ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதலமைச்சர் தீர்வு காண வேண்டும்.- கே.எஸ். அழகிரி


மத்திய பா.ஜ.க. அரசின் தவறான விவசாயக் கொள்கையின் காரணமாக விளை பொருளுக்கு  குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை குறைவாக விற்கப்படுவதால், கடுமையான நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளின் விளை பொருள்களுக்கு பெற்றுத் தருவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு எவ்விதமான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தவில்லை.

விவசாயிகளின் வருமானத்திற்கு உதவி செய்கிற வகையில் கறவை மாடு வளர்ப்பு நமது கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கிராமங்களில் வாழ்கின்ற ஏழை, எளிய மக்கள் ஒன்று அல்லது இரண்டு கறவை மாடுகளை வைத்துக் கொண்டு அவற்றைப் பராமரித்து, அதிலிருந்து கிடைக்கும் பாலை விற்பதன் மூலம் கிடைக்கிற வருமானத்தை வைத்து தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கவனித்து வருகின்றனர். தமிழகத்தில் தினசரி சுமார்  160 லட்சம் லிட்டர் பால் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை  25 சதவிகிதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. அதன் காரணமாக நிறுவனங்களில்  அதிகப்படியான பால் பொருட்கள், பவுடர்கள் தேங்கியுள்ளதால் பணப் புழக்க நெருக்கடியில் தனியார் நிறுவனங்கள் சிக்கி சிரமப்படுகின்றன. அதேநேரத்தில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய்  8 வரை குறைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. பல இடங்களில் வாரத்தில் ஒருநாள் பால் கொள்முதலுக்கு விடுப்பு கொடுக்கப்படுகிறது. இத்தகைய போக்கின் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் சார்பாக,  தமிழக அரசு ஆவின்  நிறுவனம்   ஒரு நாளைக்கு  46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்  செய்கிறது. அந்த வகையில் பால் கொள்முதல் செய்யும் ஆவின் நிறுவனம் திடப்பொருள் அல்லாத பாலின் (Solid not Fat- SNF) அளவை 8 சதவிகிதத்திற்கும் குறைவான பாலை நிராகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் 10 முதல் 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பால் இப்போது தினமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வருமானத்தை இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கொள்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. தமிழகம் முழுவதும் பல லட்சம் ஏழை விவசாய குடும்பங்கள் அன்றாட வருமானத்திற்கு பால் உற்பத்தியை நம்பியிருக்கிற போது, ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கை கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையே  கடுமையாக பாதித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகள் தங்களது கறவை மாடுகளை இறைச்சிக்காக குறைந்த விலையில் கேரளாவிற்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.

எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை பாதுகாக்கிற வகையில் விவசாயிகள் உபத் தொழிலாக செய்து வருகிற   பால் உற்பத்தியை பாதிக்காத வகையில்,  ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக