ஞாயிறு, 5 ஜூலை, 2020

மனித உயிருக்கே மதிப்பில்லாத நிலை தொடர்வது குறித்து என்ன செய்யப்போகிறது அரசு? - தி.வேல்முருகன்


கழிவுநீர்த்தொட்டி நச்சுக்காற்றுத் தாக்கித் தூய்மைப் பணியாளர்                     நாலு பேர் உயிரிழந்தனர்!
மனித உயிருக்கே மதிப்பில்லாத நிலை தொடர்வது குறித்து என்ன செய்யப்போகிறது அரசு?
தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி!

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே உள்ளது செக்காரக்குடி. அங்கே கழிவுநீர்த்தொட்டியில் இறங்கி அதைச் சுத்தம் செய்த தூய்மைப் பணியாளர் நால்வர் நச்சுக்காற்றுத் தாக்கி உயிரிழந்தனர். அவர்கள் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தைச் சேர்ந்த தினேஷ் (20) ஆகியோர்.

இதை உயிரிழப்பு என்று சொன்னாலும், இது பச்சைப் படுகொலை என்பதுதான் உண்மை. ஏனென்றால், இன்றைய நவீன காலத்திலும் வேறெந்த நாடுகளிலும் இல்லாமல், மனித மலத்தை இன்னொரு மனிதனே அள்ளும் பணி இந்தியாவில் மட்டுமே நடப்பதால்தான். 

இந்தியாவைப் பொறுத்தவரையில், கழிவுநீர்த்தொட்டி மற்றும் கழிவுநீர்க்கால்வாய்களை சுத்தம் செய்யும்போது, நச்சுக்காற்றுத் தாக்கித் தூய்மைப் பணியாளர் சாவது என்பதில் தமிழ்நாட்டிற்குத்தான் முதலிடம். இது இன்று நேற்றல்ல; பல காலமாக உள்ள நிலை. இதை 2016இல் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

தமிழகத்துக்கு அடுத்தபடியாக குஜராத், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்பதையும் அமைச்சர் தெரிவித்தார். 

சக மனிதரை  மலம் அள்ள வைத்தல் இழிவும் அவலமுமாகும். இதைத் தடை செய்யும் வகையில் என “மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் தடை மற்றும் அவர்களுக்கான புனர்வாழ்வுச் சட்டம்” கடந்த 2013ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. ஆனாலும் தூய்மைப் பணியாளர்களின் இத்தகைய சாவுகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. 

இந்த 2013ஆம் ஆண்டுச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரியபோது, அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அது சாத்தியப்படாது என்றே பதிலளித்தார். 
இந்த 2013ஆம் ஆண்டுச் சட்டத்தைக் கூட 2015இல்தான் நடைமுறைக்குக் கொண்டுவருகிறோம் என்றது தமிழக அரசு. அந்தச் சட்டப்படியான தூய்மைப் பணியாளர் எண்ணிக்கைக் கணக்கெடுக்கும் பணியையும் கண்துடைப்பாகவே செய்துமுடித்தது.

இச்சட்டத்தின்படி மாவட்ட மற்றும் மாநில அளவில் அமைக்க வேண்டிய கண்காணிப்புக் குழுவையும் இதுவரை அமைக்கவில்லை தமிழக அரசு.
கழிவுநீர் அடைப்புகளை அகற்றுவதற்குத் தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்தும் சட்டமீறலுக்காக யார் மீதும் இதுவரை வழக்கும் பதியப்படவில்லை. 

நச்சுக்காற்றுத் தாக்கித் தூய்மைப் பணியாளர் செத்தாலும், வழக்குகள் 2013ஆம் ஆண்டுச் சட்டப்படியோ, வன்கொடுமைச் சட்டத்தின் கீழோ பதிவு செய்யப்படுவதில்லை; மிகச் சாதாரண கிரிமினல் சட்டங்களின் கீழ்தான் பதிவு செய்யப்படுகின்றன.

மேலும், இத்தகைய சாவுக்கு, பாதிப்படைந்த தூய்மைப் பணியாளரோ, அவர்களின் குடும்பத்தாரோ வழக்குத் தொடர முடியாதபடி தடுக்கிறது இச்சட்டம். அந்தப் பொறுப்பை அரசிடம்தான் இச்சட்டம் ஒப்படைக்கிறது; ஆனால் அரசோ அதைச் சரிவர நிறைவேற்றுவதில்லை. சொல்லப்போனால், 2013ஆம் ஆண்டுச் சட்டம் அரசுக்கு எதிராக நடவடிக்கையே எடுக்க முடியாதபடி அதற்கே பாதுகாப்பளிக்கிறது. 

இந்த நிலையில் தூய்மைப் பணியாளர் சாவினைத் தடுக்க என்னதான் வழி? இந்தத் தொழிலை நவீனப்படுத்திவிட்டு, அத்தொழிலாளர்களை முற்றாக அகற்றிவிடுவதுதான். அதற்கான நவீன தொழில்நுட்பங்கள் எப்போதோ வந்துவிட்டன. உலக நாடுகள் யாவும் அதனைப் பின்பற்றவும் செய்கின்றன. இங்கு இந்தியாவிலும் தமிழகத்திலும் அதைத்தான் செய்ய வேண்டும் என்கிறோம். 
செக்காரக்குடியில் கழிவுநீர்த்தொட்டி நச்சுக்காற்றுத் தாக்கித் தூய்மைப் பணியாளர் நாலு பேர் படுகொலை நடந்த இந்த நிலையிலாவது அப்படியான முடிவுக்கு வரவேண்டும் அரசு என்கிறோம். மேலும் உயிருழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்;  உயிருழந்தோர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

எனவே, மனித உயிருக்கே மதிப்பில்லாத நிலை தொடர்வது குறித்து என்ன செய்யப்போகிறது அரசு என்ற கேள்வியை எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக