புதன், 1 ஜூலை, 2020

மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளது


மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளது

மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கென, மோட்டார் வாகனச் சட்டம் - 2019 கீழ் உத்தேசிக்கப்பட்டுள்ளபடி திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைபடம் ஒன்றை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. கோல்டன் ஹவர் என்று கூறப்படும் விபத்துக்குள்ளான ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உட்பட பிற சிகிச்சைகளும் இதில் அடங்கும். 

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போக்குவரத்துத் துறை பொறுப்பிலுள்ள செயலர்களுக்கும், முதன்மை செயலர்களுக்கும் அவர்களது இந்தத் திட்டத்தின் கருத்து பற்றி அவர்களது கண்ணோட்டத்தை இம்மாதம் 10ஆம் தேதிக்குள் அளிக்குமாறு கோரி, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. மோட்டார் வாகன விபத்து நிதியம் ஒன்றை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தில் உள்ளது 

PM-JAY திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மைய முகமையாக தேசிய சுகாதாரக் கழகம் உள்ளது நாட்டில் ஏற்கனவே 21 ஆயிரம் மருத்துவமனைகள் இக்கழகத்தில் உள்ளன. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி இம்முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் சாலைகளைப் பயன்படுத்தும் அனைவருக்கும் காப்பீட்டு வசதி கட்டாயமாக அளிக்கப்படுவதும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிதியம், சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும்,  அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் பயன்படுத்தப்படும். பணம் செலுத்தக் கூடிய திறன் பற்றிய வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும் உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக