திங்கள், 13 ஜூலை, 2020

வெளிநாடுகளில் மருத்துவர் பயிலும் மாணவர்கள் இந்தியத் தகுதித் தேர்வு எழுதுவதில் உள்ள தடையை நீக்க வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்


வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவர்களாக பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வின் விதிகள் மாற்றப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அவற்றைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் - தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்

தேசிய தேர்வு வாரியம் நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளில் (Foreign Medical Graduates Exam - FMGE) பங்கேற்பதற்கான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதால், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று, இந்தியாவில் சேவை செய்ய விரும்பும் மாணவர்களின் நலன்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.

இந்தியாவில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். ரஷ்யா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், உக்ரைன், சீனா, ஜெர்மனி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 52,000-க்கும்  கூடுதலான மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 9,000 முதல் 10,000 வரையிலான மாணவர்கள்  மருத்துவம் படிப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் இந்தியா திரும்பி, இந்திய மருத்துவக் கவுன்சில் அல்லது மாநில அளவிலான மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்ற விரும்பினால், அதற்காக வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.

வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வை தேசிய தேர்வு வாரியம் (National Board of Examinations - NBE) ஜூன் மற்றும் திசம்பர் மாதங்களில் ஆண்டுக்கு இருமுறை நடத்துகிறது.  நடப்பு ஆண்டில் ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய இந்தத் தேர்வு கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை கடந்த ஜூலை 8-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், இத்தேர்வில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை தேசிய தேர்வு வாரியம் மாற்றியமைத்திருப்பதால், இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கு ஆர்வத்துடன் காத்திருந்த மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் தற்காலிக பட்டச் சான்றிதழ் (Provisional Certificates ) வைத்திருந்தால் போதுமானது. ஆனால், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விளக்கக் குறிப்பேட்டின் 32-ஆவது பக்கத்தில், தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தற்காலிகப் பட்டச் சான்றிதழ் வைத்திருந்தால் போதுமானது அல்ல என்றும், நிரந்தரமான பட்டச் சான்றிதழ் (Primary Medical Qualification Degree certificate) பெற்றிருக்க வேண்டும் என்றும், எந்த நாட்டில் மருத்துவம் படித்தார்களோ, அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் சான்றளிப்பு (Attestation)பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

தேசிய தேர்வு வாரியத்தின் இந்த புதிய நிபந்தனை தான் மாணவர்களின் கனவைச் சிதைத்திருக்கிறது.  பல வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளின் கால அளவு 6 ஆண்டுகள் ஆகும். 5 ஆண்டுகள் படிப்பும், கடைசி ஓராண்டில் மருத்துவமனை பயிற்சியும் அளிக்கப்படும். அதேநேரத்தில் 5 ஆண்டுகளின் முடிவில் தற்காலிகப் பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். அதனால், 5 ஆண்டின் இறுதியிலேயே  பல வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வை  எழுத முடியும். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் வெளிநாடு சென்று மருத்துவமனை பயிற்சி பெற்று நிரந்தரப் பட்டச் சான்றிதழ் பெற்று தாயகம் திரும்பி, பணி செய்யத் தொடங்குவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு ஓராண்டு காலம் மிச்சமாகும்; ஓராண்டு கூடுதலாக பணி செய்ய முடியும்.

ஆனால், இப்போது விதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், 5 ஆண்டுகள் படிப்பை முடித்து தற்காலிக பட்டச் சான்றிதழ் பெற்ற மாணவர்களால் இப்போது தேர்வை எழுத முடியாது. அதுமட்டுமின்றி, உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் மருத்துவக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. உடனடியாக அங்கு செல்வதோ, படிப்பை முடிப்பதோ சாத்தியமில்லை என்றும் நிலையில், வெளிநாடுகளில் பயிலும் மருத்துவ மாணவர்களால் அடுத்த சில ஆண்டுகளுக்கு இத்தேர்வை எழுத முடியாத நிலை ஏற்படக்கூடும். அது அவர்களின் மருத்துவப் பணி எதிர்காலத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

எனவே, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் நிரந்தரப் பட்டச் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டும் தான் வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகளை எழுத முடியும் என்ற தேசிய  தேர்வு வாரியத்தின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே, தற்காலிகப் பட்டச் சான்றிதழ் இருந்தாலே இந்தத் தேர்வுகளை எழுதலாம் என்று அறிவிக்க வேண்டும். இந்திய மாணவர்களின் நலன் கருதி  தேசிய தேர்வு வாரியத்திற்கு வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கும்படி எனக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக