புதன், 1 ஜூலை, 2020

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. - டாக்டர் K.கிருஷ்ணசாமி


ஒரு வார காலமாக ஆயிரக்கணக்கான கிராமங்களில் கருப்பு கொடி போராட்டம்!  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!!

பட்டப்பகலில் நடைபெற்ற உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி மறுக்கப்பட்டுள்ளது. கொலையின் கொடூரத்தை கணக்கிலே கொள்ளாமல் சாதி மீது இரக்கம் காட்டி முக்கிய குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஒரு வரலாற்றுப் பிழையாகும். 

தமிழகத்தின் தென் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு, (302) கொலை வழக்கு பதிவு செய்ய அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால், குற்றவளிகள் மீது போடப்பட்ட வழக்கை கோட்டை விட்டு, சிறைக் கதவுகளை திறந்து விட்டு இருக்கிறார்கள். இது தனிப்பட்ட சங்கருக்கோ, அவரது குடும்பத்திற்கோ இழைக்கப்பட்ட அநீதியாக கருத இயலாது. இரண்டு கோடி தேவேந்திரகுல வேளாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே பார்க்கிறோம். இதைக் கண்டித்து ஒரு வார காலமாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. 

ஏற்கனவே அறிவித்தபடி, இன்று (ஜூலை-1) காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர  அளவில் எண்ணற்ற இடங்களில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் கட்டளையை ஏற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திய மாவட்ட, சட்டமன்ற தொகுதி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கர் கொலை வழக்கை பொருத்தமட்டிலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது கடமையை சரியாகச் செய்யாத அதிமுக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், அரசு வழக்கறிஞர்களை மட்டுமே பயன்படுத்தாமல் உச்சநீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர்களையும் அமர்த்தி சங்கர் கொலைக்கான நீதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக