செவ்வாய், 19 நவம்பர், 2019

மாநிலங்கள் அவை 250 ஆவது கூட்டத் தொடர் வைகோ ஆற்றிய உரை

250 ஆவது கூட்டத் தொடர், வரலாற்றுச் சிறப்புக்கு உரிய நாளில் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி - வைகோ


மாநிலங்கள் அவையின் 250 ஆவது கூட்டத் தொடர், நேற்று (18.11.2019) தொடங்கியது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை,


மாநிலங்கள் அவையின் 250 ஆவது கூட்டத்தொடரில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்த நாளில், உரை ஆற்றுகின்ற வாய்ப்பினை நல்கிய பேரவையின் தலைவருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை, திருக்குறளில், நன்றி என்னும் அதிகாரத்தில்,
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது" என்ற, கருத்தைத் தருகின்றார்.

ஒருவர் பிரதிபலன் எதிர்பாராமல் செய்கின்ற உதவிதான் சிறப்பானது. அதனுடைய நன்மையைக் கருதுகின்றபோது, அது அலைகடலினும் பெரிது என்று, ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

1978, 1984, 1990 ஆகிய ஆண்டுகளில், மாண்புமிகு இந்த அவையின் உறுப்பினராக நான் இடம் பெறுவதற்கு வாய்ப்பு அளித்த தி.மு.க. தலைவர் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, எந்நாளும் நான் நன்றிக்கடன் பட்டு இருக்கின்றேன். அதேபோல, நான்காவது முறையாக என்னை இந்த அவைக்கு அனுப்பி இருக்கின்ற, தி.மு.க. தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அவையில் என்னை வார்ப்பித்த ஆசான் முரசொலி மாறன் அவர்களையும் நினைவு கூர்கின்றேன்.

இதற்கு முன்பு 18 ஆண்டுகள் இந்த அவையில் உறுப்பினராக இருந்தபொழுது, சிங்கத்தின் சீற்றத்துடன் முழங்கிய பூபேஷ் குப்தா அவர்கள் ஆற்றிய உரைகள் என்னைக் கவர்ந்தன. ஒவ்வொரு நாளும் இந்த அவையின் நடவடிக்கைகள் நிறைவு பெறுகின்ற வரையிலும், அவர் இங்கேதான் இருப்பார். அதேபோன்ற மற்றொரு ஆளுமை பேராசிரியர் என்.ஜி.ரங்கா. இந்த அவையின் உறுப்பினர்களாக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், லால்கிஷன் அத்வானி ஆகியோரிடம் பல பாடங்களைக் கற்று இருக்கின்றேன்.

நையாண்டிகளாலும், நகைச்சுவைத் துணுக்குகளாலும், ஒட்டுமொத்த அவையை மட்டும் அல்ல, மாண்புமிகு பிரதமர் இந்திரா காந்தி அவர்களையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்த ஆளுமை பிலுமோடி. இந்த அவையில் நான் உரை ஆற்றிய பொழுதுகளில் எல்லாம், கட்சி எல்லைகளைக் கடந்து, அனைவரும் என்னைப் பாராட்டி ஊக்குவித்தனர்.

நிதி ஒதுக்கீடு தொடர்பாக, மாநிலங்கள் அவையின் பங்கு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது. எனினும், மிகச்சிறந்த நிதி அமைச்சர்கள் எனப் புகழ்பெற்ற, வி.பி.சிங், டாக்டர் மன்மோகன்சிங், பிரணாப் முகர்ஜி, யஷ்வந்த் சின்கா, அருண் ஜெட்லி ஆகியோர், மாநிலங்கள் அவையில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்தான்.

ஆனால், இங்கிலாந்து நாட்டின் மன்னருக்கு ஆலோசனை சொல்லுகின்ற அவையின் ஒன்றுவிட்ட சகோதரன் போன்ற இந்த மாநிலங்கள் அவை, 1919 ஆம் ஆண்டு செம்ஸ்போர்டு சட்டத்தின்படி, அமைக்கப்பட்டது, எனவே, மக்கள் ஆட்சி நடைபெறுகின்ற நமது நாட்டுக்கு தேவை அற்றது என்று பலர் கருதினார்கள்.

எனவே, இந்த அவையை நீக்கி விடுவதற்கான முயற்சிகளை மக்கள் அவையில் சில உறுப்பினர்கள் மேற்கொண்டார்கள். அதற்காக, தனிநபர் மசோதா, தீர்மானங்களைக் கொண்டு வந்தனர்.

ஆனால், மாநிலங்கள் அவையின் மீது மிகுந்த மதிப்பு கொண்டு இருந்த மக்கள் அவையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள், அந்தக் கருத்தை ஏற்கவில்லை. அவர்களுடைய முயற்சிகளை முறியடித்தனர், அதற்காகக் கொண்டு வரப்பட்ட தனிநபர் மசோதாக்கள், தீர்மானங்களைக் குப்பைக் கூடையில் தூக்கி வீசினர்.


மக்கள் அவையில் நிறைவேறிய மசோதாக்களில் குறைகள் இருந்தால், அவற்றைச் சீர்படுத்தும் மன்றமாக இந்த அவை திகழ்கின்றது. மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களை, மாநிலங்கள் அவை தோற்கடித்து இருக்கின்றது. பல மசோதாக்களில் மாற்றங்களைச் செய்து இருக்கின்றது. மிக முக்கியமாக, 1978 ஆம் ஆண்டு, அரசியல் சட்டத்தின் 44 ஆவது திருத்தத்தையே மாநிலங்கள் அவைதான் முன்மொழிந்தது. இந்த அவையில் நான் இருந்த நாள்களே, என்னுடைய வாழ்நாளின் பொற்காலம்.

என்னுடைய ஒரே விருப்பம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை போல, இந்த மேலவையும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பை வழங்குகின்ற வகையில், சமமான உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டதாக அமைய வேண்டும் என்பதுதான். அந்தக் கனவு நனவாகும் நாள் வரும் என்று உறுதியாக நம்புகின்றேன். அப்பொழுதான் கூட்டு ஆட்சித் தத்துவம் வலுப்பெறும். மக்கள் ஆட்சியின் மாண்புகள் மேன்மை பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக