வியாழன், 21 நவம்பர், 2019

நாடாளுமன்றத்தை முடக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல! - ஜி.கே.வாசன்

நாடாளுமன்றத்தை முடக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல! - ஜி.கே.வாசன்


நாடாளுமன்றத்தை கூச்சல் குழப்பத்தால் முடக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (நவ.21) வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் மக்களவையும், மாநிலங்களவையும் சுமுகமாக நடைபெற வேண்டும். மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் மாநிலத்தின் வளர்ச்சி, மாநில மக்களின் நலன் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைக்க வேண்டும்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்றி மக்கள் நலன் காக்க முயற்சிக்கின்ற வேளையில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கான கேள்விகளை கூச்சல், குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் கேட்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதற்கான விளக்கத்தைத் தகுந்த விவாதங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதை விடுத்து அவைகளில் கூச்சலிட்டும், குழப்பத்தை விளைவித்தும் அவையை முடக்க நினைப்பது நியாயமில்லை.

ஜனநாயகத்தில் நாடாளுமன்றம்தான் மக்கள் நலன் காக்கும், நாட்டைப் பாதுகாக்கும் முதன்மையான, மிக மிக்கியமான இடமாக இருக்கின்றது. அப்படி இருக்கும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும், நாடும் வளர வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்படுகிறது. இவ்வேளையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படுத்த தக்க ஆலோசனைகளைக் கூறலாம்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க முன்வரும்போது அதற்கு மதிப்பளித்து வாக்குவாதம் செய்யலாம். குறிப்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூச்சல் குழப்பத்தால் முடக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.

எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் அளித்த வாக்குக்கு மதிப்பளித்து ஜனநாயகக் கடமையை முறையாக சரியாகச் செய்து நாட்டு நலன் காக்க வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தமிழகத்தில் நிலவும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு ஏற்படுத்தவும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் தங்கள் குரலை நியாயமான முறையில் இரு அவைகளிலும் ஒலித்து தமிழக மக்கள் நலன் காத்திட வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக