வியாழன், 21 நவம்பர், 2019

காவிரி நீரில் கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

கர்நாடகாவிலிருந்து தமிழகத்தின் மேட்டூர்அணைக்கு வரும் காவிரி
நீரில் கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்க தமிழகஅரசு உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜி.கே.வாசன்
( தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் )


தமிழகத்தின் மேட்டூர் அணையின் தண்ணீரில் கர்நாடகாவின் கழிவுகள் கலப்பதை தடுக்கவும் உரிய இழப்பீட்டை பெறவும் தமிழக அரச உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழகத்தில் மேட்டூர் அணையின் தண்ணீரானது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மேட்டூர் அணை எப்போது நிரம்பும், அந்த தண்ணீர் எப்போது கிடைக்கும் என விவசாயிகளும், பொது மக்களுக்கும் காத்திருப்பார்கள்.

அப்பேற்பட்ட சூழலில் மேட்டூர் அணையின் தண்ணீரில் கழிவுகள் கலந்து வந்தால் எப்படி பயன் தரும். காத்திருந்த விவசாயிகளும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

இந்த ஆண்டு 2019 ல் 4 வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தென்னிந்தியாவில் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 153.46 சதுர கி.மீ. பரப்பளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் தண்ணீரால் தான் இலட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் விவசாயம் செய்ய முடிகிறது.

இந்நிலையில் கர்நாடகத்தில் திறந்து விடப்படும் கழிவு நீர் மேட்டூர் அணையின் தண்ணீரில் கலந்து வேதிப்படலம் படர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது மேட்டூர் அணையின் தண்ணீரானது அசுத்தமான நிலையில் இருப்பதால் தண்ணீர் பாய்ந்தோடும் ஆற்றில் உள்ள மீன்கள் இறந்துகிடக்கின்றன.

மேலும் இத்தண்ணீர் நீலநிறமாக மாறி, தண்ணீர் செல்லும் வழியில் உள்ள கிராமப்புற மக்களுக்கு சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக மேட்டூர் அணையின் தண்ணீரை தூய்மைப்படுத்த வேண்டும். அது மட்டுமல்ல கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையான பிலிகுண்டாவிற்கு வந்து சேரும் காவிரி நீரில் மாதிரி எடுத்து ஆய்வு செய்ய வேண்டும்.

அந்த ஆய்வின் முடிவில் கிடைக்கும் உண்மைத்தன்மைக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் கழிவுகள் கலந்திருப்பதற்கு உரிய இழப்பீட்டை பெறவும், இனிமேலும் கழிவுகள் கலக்காமல் இருப்பதற்கும் தமிழக அரசு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து மேட்டூர் அணையின் தண்ணீர் தூய்மையானதாக இருக்க வழி வகுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக