வியாழன், 14 நவம்பர், 2019

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் -டிடிவி. தினகரன்

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதைத்
தடுக்க தொடர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு
உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்
 - டிடிவி.தினகரன்
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை
கட்டுவதற்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது மிகுந்த
அதிர்ச்சி அளிக்கிறது. பழனிசாமி அரசு அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், உரிய ஆதாரங்களையும், சரியான
முறையில் வாதங்களையும்
எடுத்து வைப்பதற்கான
பணிகளையும் உடனடியாக செய்திட வேண்டும்.

கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகும்
தென்பெண்ணையாறு, அந்த மாநிலத்தில் 112 கிலோமீட்டர் தூரம்
மட்டுமே பாய்கிறது
தமிழகத்தில் கிருஷ்ணகிரி,
தர்மபுரி,திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில்
320 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த நதி ஓடி வருகிறது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றினால் மேற்கண்ட மாவட்டங்களில்
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் துணை புரிகிறது.

இந்நிலையில் காவிரியின் துணை ஆறுகளில் எல்லாம்
அணைகளைக் கட்டி தமிழகத்திற்குத் தண்ணீர் விடாமல் செய்து வரும்
கர்நாடக, தென்பெண்ணை
ஆற்றின் முக்கிய துணை
ஆறு மார்க்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரத்தில் புதிய அணையை கட்டி வருகிறது. தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடக
மாநிலம் யார்கோட் என்ற இடத்தில் எழுப்பப்படும், இந்த அணைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம்
தள்ளுபடி செய்திருக்கிறது.

நதியின் கீழ்படுகை மாநிலங்களுக்கு அந்த நதி நீர் உரிமை இருக்கிறது. என உலகம் முழுவதும் பின்பற்றப்படும் விதி இதன் மூலம் புறக்கணிக்கப்பட்ட இருப்பது பெரும் அதிர்ச்சி
அளிக்கிறது இது தொடர்பான வாதங்களைப் பழனிசாமி அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான முறையில் எடுத்து வைக்கவில்லையோ என்கிற கேள்வியும் ஆதங்கமும் எழுகிறது.

எனவே, இயற்கைக்கு எதிரான கர்நாடகாவின் சட்டவிரோத
அணை எழுப்பும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான அடுத்த கட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள
வேண்டும். ஒரு நதி, தனது பயணத்தில் நான்கில் மூன்று பகுதி தூரம் ஓடுகிற மாநிலத்திற்கு எப்படி அந்த நதியில் உரிமை இல்லாமல் போகும் என்பதை நீதிமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

இது மட்டுமின்றி மத்திய அரசின் வழியாக அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு தரப்பில் மேற்கொள்ள
வேண்டும். மேலும் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிற தி.மு.க வும் அதன் கூட்டணி கட்சிகளும், தமிழகத்தின் நலனைக் காவு
கேட்கிற புதிய அணை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை டெல்லியில் மேற்கொள்ள வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு நின்று எப்படியாவது கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து
நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக