செவ்வாய், 14 ஜூலை, 2020

கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் தொடர்ந்து நகைக் கடன் வழங்க வேண்டும்! - கே. பாலகிருஷ்ணன்


கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில்
தொடர்ந்து நகைக் கடன் வழங்க வேண்டும்!
தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகைக் கடன்களும் இன்று (14.7.2020) காலை முதல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்து ஏழை, நடுத்தர மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், நகைக் கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகைக் கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண ஏழை, நடுத்தர மக்களுடைய நெருக்கடியை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதனால் தனியார் வட்டி கடைகள் மற்றும் கந்துவட்டி பேர்வழிகளிடம் இவர்கள் அனைவரும் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகும். 

எனவே, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி வழங்குவது போல 6 சதமான வட்டியில் நகைக் கடன்களை கூட்டுறவு வங்கிகளில் தமிழக அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டும். மேலும், சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு தொழில் செய்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் ஏற்கனவே நகைக் கடன் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கொரோனா காலத்தில் வட்டி பல மடங்கு உயர்ந்து கொண்டே உள்ளது. 

ஆகவே, சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாதாரண ஏழை, எளிய மக்கள் வைத்திருக்கிற நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அவர்களது நகையை திருப்பி கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்றித் தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக